இஸ்லாமும் இந்தியர்களின் நிலையும்

புத்தகப் பூங்கா

மூவலூர் ஆ இராமாமிர்தம்’- கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது திருமண உதவித் திட்டத்திற்கு இந்தப் பெயரை சூட்டினார். இதன் பயனாக இந்த திராவிட சிந்தனை நிறைந்த அம்மையாரைப் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இராமாமிர்தம் அம்மாளின் வாழ்க்கைப் பணிகள் மிகவும் கடினமானவை. காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து கொண்டே தேவதாசி முறைக்கு எதிரான போராட்டம் நடத்தினார். பின் காங்கிரஸ் இயக்கம் சாதி சகதிக்குள் இருந்து வெளிவர மறுத்தது போன்ற பல காரணங்களால் தந்தை பெரியாருடன் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

பின்பு சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று தமது சமூக வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டவர். தந்தை பெரியாரின் வழியில் இஸ்லாமிய மார்க்கத் தத்துவத்தையும், சுயமரியாதையையும் தமிழ் வாழ்க்கையின் அறநெறியையும் இணைத்து மிக எளிய மொழி நடையில் சிறு பிரசுரமாக ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலையும்’ என்ற தலைப்பில் எழுதினார். இக் குறுநூல் சரியாக 76 ஆண்டுகளுக்கு முன் (1939) எழுதப்பட்டது. இஸ்லாத்தை அறிந்து கொள்ளுதல் என்பதைக் காட்டிலும் சுயமரியாதை இயக்கம் இஸ்லாம் மதத்தை எவ்வாறு அணுகியது என்பதை புரிந்து கொள்வதற்கான ஒரு முக்கிய ஆவணம். இந்நூலை அறிமுகம் செய்யும் அ.மார்க்ஸ் அவர்களின் கருத்துக்களில் வாசகர்களுக்கும், குறிப்பாக தமிழ் வாசிப்புலகிற்கும் புதிய தகவல்கள் பல உண்டு. திராவிடர் இயக்கம் தனது அச்சு ஊடகத்தின் வாயிலாகத் தமிழ் முஸ்லிம்களுக்குத் தங்களின் பிரச்சனைகளைப் பேசவும் விவாதிக்கவும் களம் அமைந்து கொடுத்தவர் இராமாமிர்தம் அம்மாள் அவர்கள். சுயமரியாதை இயக்கத்தின் இஸ்லாமிய ஆதரவு இறை நம்பிக்கையாலானது அல்ல அரசியல் அடிப்படையிலானது என்பதனை எழுத்தின் வாயிலாக நிறுவுகிறார் அவர்.

உலக வரலாற்றில் பெரியாருக்கு முன்னோடி நபிகள் நாயகம் என்பது தான் அம்மையார் முன் வைக்கும் வாதம் ஆகும்.

எல்லோரும் வருமானத்தில் இரண்டரை விழுக்காடு ஜக்காத் ஆக ஏழை எளியவர்களுக்கு தரவேண்டும் என்பதன் மூலம் ஏழை பணக்காரர்களுக்கிடையே ஒரு சமரசம் நிலவுவதற்கு இஸ்லாம் வாய்ப்பளிக்கிறது. இது (கம்யூனிஸ்ட்) திட்டத்தைக் காட்டிலும் சிறந்தது என்கிறார் இராமாமிர்தம் அம்மாள்.

இஸ்லாமிய ஒழுக்கங்களை பட்டியலிடும் அம்மையார் இவையெல்லாம் நம் திருக்குறளில் சொல்லப்படவில்லையா என்ற கேள்வியை எழுப்பி நடைமுறை அப்படி இல்லை என்கிற பதிலையும் அளிக்கிறார். இஸ்லாமியக் கொள்கைகளை விளக்கி, அவற்றை வரலாற்றில் பொருத்தி அறிமுகம் செய்யும் கையேடாக இராமாமிர்தம் அம்மாள் அவர்களின் இக்குறுநூல் அமைந்துள்ளது.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளையும் சுதந்திரத்தையும் இந்நூலில் பட்டியலிடுகிறார் அம்மையார். நபி(ஸல்) அவர்களின் ஜனநாயக ஆட்சித் திட்டம் ஒரு தங்க நாணயம் போன்றது என்றும் விளக்குகிறார். இச்சிறு நூல் பண்பாட்டு அரசியல் தளத்தில் மிகப் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதனை மிகுந்த சிரமத்திற்கு இடையில் பதிப்பித்த பா.ஜீவசுந்தரி நன்றிக்குரியவர். படிக்கவும், பரவலாக்கவும், விவாதிக்கவும் நல்ல தளத்தை இந்நூல் அமைத்து கொடுத்துள்ளது.

இஸ்லாமும் இந்தியர்களின் நிலையும்

மூவலூர் ஆ.இராமாமிர்தம், 40 பக்கங்கள், விலை ரூ.30 

வெளியீடு: கருப்புப்பிரதிகள், பி55, பப்புமஸ்தான் தர்கா,

லாயிட்ஸ் சாலை, சென்னை 600 005.

பேச: 9444272500