கனவோடு நில்லாமல்

புத்தகப் பூங்கா

தனது தந்தையை சிறு வயதிலேயே இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து தன்னுடைய அளப்பரிய முயற்சி, வியக்க வைக்கும் சாதனைகள் மூலம் நாம் அண்ணாந்து பார்க்கும்படியான நிலைக்கு வந்துள்ளதை உணர்வுப்பூர்மாக விவரிக்கிறார் நூலாசிரியர்.மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த இவரைப் போன்றவர்களாலும் இதுபோல் மிக உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பதை இந்நூலின் வழியாக உணர்த்தியுள்ளார். 

விறுவிறுப்பான பத்து உட்தலைப்புகள் கொடுத்து ஒரு தலைப்பிற்கு 20 பக்கங்கள் வீதம் முழு நூலையும் மூச்சு விடாமல் நம் கண்களில் கண்ணீரை கசிய வைத்து படிக்க வைக்கின்றார் நூல் ஆசிரியர். நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தருணத்தில் நூலாசிரியர் கூறும் சில சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கும் அதை ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது நாம் ஏறி வந்த படிக்கட்டுகளை நமக்கு மீண்டும் நினைவு படுத்துகிறது.  சோதனைகளை துணிவுடன் எதிர்கொண்டு சாதனைகள் புரிய ஏங்கும் வளரும் இளைய தலைமுறையினர் அனைவரும் படித்து பயன்பெறவேண்டிய ஒரு சீர்மிகு நூல் இது.. 

நூலாசிரியர் தனது சிறுபிராயம் துவங்கி தனது தந்தை தனக்கு வழங்கிய அறிவுரைகள் படியும், தாயின் வளர்ப்பு எப்படி இருந்தது என்பதையும் விவரிக்கிறார். தனது ஆரம்ப பள்ளி படிப்பை மாநகராட்சி தமிழ் வழிப்பள்ளியில் துவங்கி, பிறகு படிப்படியாக முன்னேற்றம் அடைந்தது பற்றியும் அரசின் கல்வி உதவியும் அதற்கு ஒரு காரணம். என்பதனையும் மறக்காமல் குறிப்பிடுகிறார். பல நல்ல உள்ளங்களின் அரவணைப்பிலும், தூண்டு தலிலும் உதவிக் கரங்களினாலும் தான் முன்னேறிய விதத்தை கூறும் விதத்தில் நூலாசிரியரின் பணிவோடு கலந்த துணிவு பளிச்சிடுகின்றது.  இப்புத்தகத்தில் தன்னுடைய பள்ளிப்பருவம், கல்லூரி காலம், அவருக்கு வந்த சோதனைகள் அதை எதிர்கொண்ட விதம் இறைவனின் அளப்பரிய உதவி இப்படியான பல நல்ல அனுபவங்களையும் விவரிக்கிறார். இது முழுக்க, முழுக்க ஒரு நல்ல மனிதரின் எதிர் நீச்சல் என்றுதான் கூறவேண்டும். ஓலைக்குடிசைக்குள், அரிக் கேன் விளக்கொளியில் அரசுப்பள்ளியில் ஆரம்பித்த கல்வி தாகம் அதன்பின் படிப்படியாய் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்ககைக்கழகம் தொட்டு புதுடெல்லி பூசா பல்கலைக்கழகம் வரை சென்று கிழக்கின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பூனா பல்கலைக்கழகம் படிப்பின் சிகரமான அமெரிக்காவின் பிரசித்திபெற்ற பாஸ்டன் நகரில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும்  எம்.ஐ.டி வரை விரிவடைந்துள்ளது.  ’ஆர்தர் டி லிட்டில் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட்’’ வரை பாதம் பதித்து பட்டம் மேல் பட்டம் பெற்று  இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனராக உயர்ந்தது வரை உள்ளது.  நூல் படிக்கப்படிக்க விறுவிறுப்பாகவும், எளிமை யான நடையிலும் படிப்பதற்கு  சோர்வில்லாமல் செல்கிறது. ஏதோ நமது சொந்த இரத்த பந்தத்தின் கடிதத்தை படிப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 

நூலாசிரியர் வேறு யாரு மில்லை. சிவகெங்கை மாவட்டம் ராஜகம்பீரத்தில் பிறந்து சோதனை களை சாதனைகளாக்கி இந்திய ரிசர்வ் வங்கியின் தென் மண்டல இயக்குனராக பணியாற்றி சமீபத்தில் ஒய்வு பெற்ற முனைவர் ஜே. சதக்கத்துல்லாஹ் தான்.