மோ(ச)டி அரசின் மோசடி பிரச்சாரம்: அம்பலப்படுத்திய ஐரோப்பிய செய்தி நிறுவனம்
- மதினா சாதிக்
இந்திய அரசாங்கத்தை முன்னேற்றுகிறோம் என்ற போர்வையில், பிரதமர் நரேந்திர மோடியின் நலன்களையும், அவர் சார்ந்த கலக அமைப்பையும் மேம்படுத்துவதற்காக, இந்திய பங்குதாரர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பொய்ப் பிரச்சார நிறுவனம் ஒன்றினைக் கண்டறிந்து உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரஸ்ஸல்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Disinfolab என்ற செய்தி நிறுவனம். இந்த தவறான பிரச்சார அமைப்பின் முக்கியமான அங்கமாக, இந்தியாவின் மிகப் பெரிய வீடியோ செய்தி நிறுவனமான ஆசிய நியூஸ் இன்டர்நேஷனல் ( ANI ) மற்றும் ஸ்ரீவாஸ்தவா குழு ஆகியவை இருப்பது தான் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
போலி பிரச்சார நிறுவனம்
ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆளும் பாஜக அரசின் வெற்றுக் கொள்கைகளும் பயனற்ற செயல்பாடுகளும் இந்தியாவில் வெளிப்படையாக தெரிந்தாலும் அந்நிய நாடுகளில் அது தன்னை ஒரு ஜாம்பவானாக, இந்தியாவை மீட்க வந்த மீட்பராக, மோடியை முன்னிலைப்படுத்தியது. அதன் மூலம், சர்வதேச அளவில் மோடியின் பிம்பத்தைக் கட்டமைத்தது. திரைமறைவில் நடந்து வந்த இந்த தில்லாலங்கடி வேலைகளை, Disinfolab என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது, மோடி அரசிற்கு, வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
ஸ்ரீவஸ்தவா குழுமம்
இது ஒரு நிழல் வணிக கூட்டு நிறுவனமாகும். இந்த ஸ்ரீவஸ்தவா குழுமம், 2019 ஆம் ஆண்டு, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இருக்கும் வலது சாரி உறுப்பினர்களின் காஷ்மீர் பயணத்தை ஒருங்கிணைத்துக் கொடுத்ததால் சமீபத்தில் பிரபலமானது. “இந்தியன் க்ரோனிகல்ஸ்” என்ற தலைப்பிலான அறிக்கை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஒரு வருட விசாரணையை அடிப்படையாகக் கொண்டது. ஏதோ காஷ்மீருக்கு நல்லது செய்வது போல ஊடுருவி, காஷ்மீருக்கான புதிய சட்டத்திருத்தம் மோடி கொண்டுவந்த ஒரு பெரிய சீர்திருத்தம் என்ற அளவில் வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்திருக்கிறது. இது, பிரான்சில் ‘லெஸ் ஜோர்ஸ்’ போன்ற செய்தி நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டு, பிரத்தியேகமாக வெளியிடப்பட்டது. இதனை “2016 இல் அமெரிக்காவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, ரஷ்யா தலையிட்ட செயல்பாட்டுடன் ஒப்பிடத்தக்கது’ என்று உலகளாவிய இதழியல் வல்லுநர்கள் கண்டித்துள்ளனர்.
ஸ்ரீவஸ்தவா குழுமத்தால் நடத்தப்படும் போலி ஊடக வலைத்தளங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கையில் போட்டுகொண்டு இந்தியாவிற்குச் சாதகமாக செய்திகளை எவ்வாறு திரித்து எழுதப்பட வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்ததாக Disinfolab புலனாய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பெரும்பாலும் பாகிஸ்தான் அல்லது சீனாவுக்கு எதிராக செய்திகளைப் போலியாக வெளியிடப் பழக்கப்படுத்தப்பட்டன. அதனை ANI போன்ற இந்திய செய்தி நிறுவனங்கள் மேற்கோள் காட்டி ஏனைய செய்தி ஊடகங்களை நம்ப வைத்தன. பொய் என்று அறியாத இந்திய ஊடகங்களும், செய்தி சேனல்களும் அவற்றை பரப்பியுள்ளன. இதிலிருந்து இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதுடன் ஆளும் அரசின் கைப்பாவையாக அது செயல்பாட்டு வருவதையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
இந்தியத் தேர்தல் மோசடி
மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய தலைவர்களிடமிருந்து பாராட்டையும் உலக ஒற்றுமைக்கான அழைப்புகளை மேற்கொள்ளவும் இந்த மோசடி நெட்வொர்க் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பாகிஸ்தானில் இந்திய இராணுவம் மேற்கொண்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து ஆஹா ஓஹோ என்று புகழாரம் சூட்டிய இந்த வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட பொய்த்தகவல்கள், இந்தியத் தேர்தலில் நம்ப முடியாத முடிவையே தந்தன. ஸ்ரீவஸ்தவா குழுமத்தால் நடத்தப்படும் போலி வலைத்தளமான ஈ.பி. டுடே, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான ரைஸ்ஸார்ட் ஸார்னெக்கியால் இயக்கப்படுகிறது.அவர் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கிற்கு ஆதரவாக எழுதினார். இதனை ANI அமைப்பு , இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை என்று கூறி, மோடிக்கு தனது ஆதரவை அறிவித்தது. இந்த தவறான தகவலை எகனாமிக் டைம்ஸ் போன்ற பிற இந்திய ஊடகங்கள் உண்மைத் தன்மையை அறியாமல் மில்லியன் கணக்கான இந்தியர்களிடம் கொண்டு சேர்த்தன.
சின்ன புத்தி-பெரிய நெட்வொர்க்
15 ஆண்டுகளாக, ஸ்ரீவாஸ்தவா குழுவுடன் இணைக்கப்பட்ட அமைப்புகளானவை ஐக்கிய நாடுகள் சபையில், மனித உரிமைகளுக்கான கவுன்சிலில், பாகிஸ்தானைத் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவதாகவும், இந்த புலனாய்வு அறிக்கை கண்டறிந்துள்ளது. அறிக்கையின்படி, ஸ்ரீவாஸ்தவா குழுவோடு இணைக்கப்பட்ட நிறுவனங்கள் இறந்தவர்களையும் இறந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் கூட “உயிர்த்தெழுப்பின”. அதாவது
தாங்கள் வெளியிடும் செய்திகள் குறித்து நம்பகத்தன்மையை உருவாக்க இறந்தவர்களின் பெயர்களையும் அடையாளங்களையும் பயன்படுத்தியது.
20-ஆம் நூற்றாண்டின் முன்னணி சர்வதேச சட்ட அறிஞர்களில் ஒருவரும், 39 ஆண்டுகளாக ஹார்வர்ட் சட்ட ஆசிரிய உறுப்பினருமான – லூயிஸ் ஷோன் 2007-ஆம்ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சி.எஸ்.ஓ.பி. (Commission to Study the Organisation of Peace -CSOP) சார்பாக பங்கேற்று இந்தியாவிற்கு ஆதரவாக பேசியதாகவும் மேலும் 2011-ஆம்ஆண்டு வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியதாகவும் ஏ.என்.ஐ. செய்தி பரப்பியுள்ளது.ஆனால், பேராசிரியர் லூயிஸ் ஷோன் 2006-ஆம் ஆண்டே தனது 92 வது வயதில் இறந்து விட்டார் என்று ‘டிஸ்இன்போலேப்’ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மற்றும் இந்தியா தொடர்பான பிற விஷயங்களுடன் தொடர்புடைய ஏராளமான கட்டுரைகளைத் தங்களுடைய போலி நிறுவனங்களில் வெளியிட்டது அம்பலமானது. இந்த விசாரணை ஸ்ரீவஸ்தவா குழுமத்தின் கீழுள்ள செய்தி நிறுவனங்கள் பெரிய வலைப்பின்னலுடன் இருப்பதை உறுதி செய்தது. அறுபது நாடுகளில் இயங்கும் குறைந்தது 265 போலி செய்தி தளங்களை உள்ளடக்கியது இந்த மோசடி நெட்வொர்க். இவை அனைத்தும் இந்தியாவை ஆளும் நச்சரசின் நலன்களுடன் இணைக்கப்பட்டவை.
போலி புகழாரங்கள்
EP Today வலைத்தளம் பின்னர் EU Chronicle என்ற புதிய பெயரில் ஆகஸ்ட் 14, 2020 அன்று தனது ட்விட்டர் கணக்கில், பிரெஞ்சு தீவிர வலதுசாரி தலைவரான தியரி மரியானி பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டது.அதில் அவர், “இந்த இந்திய சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடிக்கு எனது நேர்மையான மற்றும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். உலகம் கோவிட் 19 உடன் போரிடுகையில், உங்கள் மாறும் தலைமையின் கீழ் இந்தியா சிறந்து விளங்குவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,’என்று புகழ்ந்துரைத்தார். அதே போன்று EU Chronicle பின்னர் இத்தாலியிலிருந்து வந்த மற்ற வலதுசாரி தலைவர்களான ஸார்னெக்கி மற்றும் ஃபுல்வியோ மார்டூசியெல்லோ ஆகியோரிடமிருந்து மோடி புகழாரச் செய்திகளை வெளியிட்டது. இப்படி வெளியாகும் செய்திகள் ஏற்கனவே வந்த அறிக்கைகளை நகலெடுப்பதாக Disinfolab கண்டறிந்தது.அதாவது CUT and PASTE செய்திகள்.ஏற்கனவே வந்த செய்திகளைத் தலைப்புகளை மட்டும் மாற்றி புதிதாக சொன்னது போல உருவாக்கி பரப்புதல் வகை. இதற்கு ஆதாரமாக ஸார்னெக்கி மற்றும் மார்டூசெல்லோவின் பல கட்டுரைகளைக் காட்டியுள்ளது. இவர்கள் மூவரும் ஏற்கனவே ஸ்ரீவாஸ்தவா குழுமம் ஏற்பாட்டில் காஷ்மீருக்கு விஜயம் செய்த M. P களில் மரியானி, ஜார்னெக்கி மற்றும் மார்டூசெல்லோ ஆகிய மூவரும் அடங்குவர்.
ஸ்ரீவாஸ்தவா நிறுவனங்களுடன் ஏ.என்.ஐ நேரடியாக பணிபுரிந்ததற்கான ஆதாரம் அந்த அறிக்கையில் உள்ளதா என்று கேட்கப்பட்டபோது, டிஸின்ஃபோலாபின் இயக்குனர் அலெக்ஸாண்ட்ரே அலாஃபிலிப் கூறும்போது,‘முதலில் இந்த கருதுகோளை நம்புவது குழப்பமாகத்தான் இருந்தது. ஆனால், EU Chronicle வலைத்தளத்தை ஒரு தன்னார்வ ஊடகமாகவும் நம்பகமான ஆதாரமாகவும் ANI மேற்கோளிட்டுள்ளது சந்தேகத்தையே ஏற்படுத்தியது. போலிகளுக்குத் துணைபோன அமைப்பை சந்தேகப்படுவதில் குற்றமில்லை’ என்றார்.
முதலைக் கண்ணீர்
இந்திய வெளிநாட்டு நலன்களை ஆதரிக்க ஐரோப்பிய அரசியல்வாதிகளை இந்தியா எவ்வாறு வளைக்கிறது என்பதை லெஸ் ஜோர்ஸ் அறிக்கை காட்டுகிறது. சவூதி அரேபியாவில், பெண்களின் உரிமைகள் குறித்து ‘EP Today’ வலைத்தளத்திற்கான கட்டுரைகளை வடிவமைக்க, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரிட்டிஷ் உறுப்பினரான ஜூலி வார்டை ஒரு பரப்புரையாளரான மேடி சர்மா அணுகினார். (காஷ்மீர் விஜயத்தின் அமைப்பாளர்களில் ஷர்மாவும் இருந்தார்.) பின்னர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சர்மா ஒரு கேள்வியை முன்வைத்தார். அதற்குப் பின்னர், பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு பத்தியில், நான் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். பாகிஸ்தானில், இது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது, இது எனக்கு மிகவும் ஒரு சார்புடையதாகத் தோன்றியது. நான் பாகிஸ்தான் அரசாங்கத்தை விமர்சித்தாலும், நரேந்திர மோடியின் (தேசியவாத மற்றும் சர்வாதிகார சறுக்கல்) பற்றி நான் அதிகளவில் கவலைப்பட்டேன்,’ என்ற சர்மாவின் கட்டுரை EU Chronicle வலைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா போன்ற மிதவாத நாடுகளின் ஆதரவைப் பெற இந்திய அரசியல் முகவர்கள் விரும்பும் தந்திரோபாயம் இது, என்று அறிக்கை தெரிவிக்கிறது.
ஸ்ரீவஸ்தவா குழுமத்தின் தவறான தகவல் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இந்திய உளவுத்துறையின் ஆதரவு இருக்கக்கூடும் என்று லெஸ் ஜோர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த கூற்றை நியாயப்படுத்த, இது பல்வேறு எடுத்துக்காட்டுகளையும் மேற்கோள் காட்டியது.
கட் & பேஸ்ட் ஊடகங்கள்
ஸ்ரீவஸ்தவா குடும்பத்தைச் சேர்ந்த அங்கூர் ஸ்ரீவாஸ்தவா, என்பவர் நடத்தும் ஒரு நிறுவனம், கணினி மென்பொருளை இந்திய உளவுத்துறை சேவைகளுக்கு மட்டுமே விற்கிறது என்று லெஸ் ஜோர்ஸ் குறிப்பிட்டார். மேலும் ஸ்ரீவஸ்தவா குழு, சோசலிஸ்ட் வீக்லி, கல்சா அக்பர் லாகூர் மற்றும் டைம்ஸ் ஆஃப் ஆசாத் காஷ்மீர் உள்ளிட்ட பல போலி செய்தி வலைத்தளங்களை நடத்துகிறது. அவை, இந்திய உளவுத்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
2020 டிஸின்ஃபோலாப் அறிக்கையின் கணிசமான பகுதியானது, ஐரோப்பிய ஒன்றிய குரோனிக்கிள் (EU Chronicle) மற்றும் பிற ஸ்ரீவஸ்தவா குழுவுடன் இணைக்கப்பட்ட அமைப்புகளின் அறிக்கைகளை ANI எவ்வாறு சித்தரிக்கிறது என்பதை விவாதிக்கிறது. யாகூ நியூஸ் இந்தியா மற்றும் பிபி பிசினஸ் ZEE5 ,பிசினஸ் ஸ்டாண்டர்டு நியூஸ் பேப்பர் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஸ்ரீவாஸ்தவா நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் புதிதாக மாற்றப்பட்ட சர்வதேச அமைப்புகள், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் அரசு தலைமையிலான இந்திய அட்டூழியங்களை மறைக்கவும், பாகிஸ்தானில் வன்முறையை முன்னிலைப்படுத்தவும் ஒரு லாபியாக எவ்வாறு செயல்பட்டன என்பதையும் 2020 டிஸ்னிஃபோலாப் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குறைந்தது பத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களை, இந்திய அரசு பற்றி மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வலைத்தளங்களை வாயிலாக கண்டறிந்ததாக அது குறிப்பிடுகிறது.
அராஜக தந்திரம்
ஒரு நாடு தனது வலிமையைக் காட்டிக் கொள்ளவும் ராஜதந்திர செயல்பாட்டினை உலக நாடுகள் மெச்சவும் தங்களது நாட்டில் செயல்படும் ஊடகங்களை கொஞ்சம் அதிகமாகத் துதி பாடும்படி சொல்வது எல்லா நாடுகளிலும் நடப்பதுதான். ஆனால் சில போலி ஊடகங்களை விலைக்கு வாங்கி, போலியான செய்திகளை வெளியிட்டு, போலியான வெற்றியையும்; புகழையும் பெறுவது, உலக நாடுகளையும்; தன் நாட்டையும் ஏமாற்றும் எவ்வளவு பெரிய மோசடித்தனம் என்பதை பாஜக அரசுக்கு உணர்த்தியிருக்கிறது Disinfolab என்ற ஊடகக் கண்காணிப்பு நிறுவனம்.மோடி அரசாங்கம் மார்தட்டிக் கொள்ளும் இதுவா ராஜதந்திரம்?.
இது அராஜக தந்திரம் என்பதை மக்கள்தான் உணரவும் உணர்த்தவும் வேண்டும்.
—————————— ——
1. பெரும்பாலும் பாகிஸ்தான் அல்லது சீனாவுக்கு எதிராக செய்திகளைப் போலியாக வெளியிடப் பழக்கப்படுத்தப்பட்டன. அதனை ANI போன்ற இந்திய செய்தி நிறுவனங்கள் மேற்கோள் காட்டி ஏனைய செய்தி ஊடகங்களை நம்ப வைத்தன. பொய் என்று அறியாத இந்திய ஊடகங்களும், செய்தி சேனல்களும் அவற்றை பரப்பியுள்ளன. இதிலிருந்து இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதுடன் ஆளும் அரசின் கைப்பாவையாக அது செயல்பாட்டு வருவதையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
2. 20-ஆம் நூற்றாண்டின் முன்னணி சர்வதேச சட்ட அறிஞர்களில் ஒருவரும், 39 ஆண்டுகளாக ஹார்வர்ட் சட்ட ஆசிரிய உறுப்பினருமான – லூயிஸ் ஷோன் 2007-ஆம்ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சி.எஸ்.ஓ.பி. (Commission to Study the Organisation of Peace -CSOP) சார்பாக பங்கேற்று இந்தியாவிற்கு ஆதரவாக பேசியதாகவும் மேலும் 2011-ஆம்ஆண்டு வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியதாகவும் ஏ.என்.ஐ. செய்தி பரப்பியுள்ளது.ஆனால், பேராசிரியர் லூயிஸ் ஷோன் 2006-ஆம் ஆண்டே தனது 92 வது வயதில் இறந்து விட்டார் என்று ‘டிஸ்இன்போலேப்’ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.