முஸ்லிம் வாக்குகளை சிதறடிப்பதா ? பாஜக B டீமுக்கு எதிராக ஒன்று திரளும் மார்க்க அறிஞர்கள்
--அபூஸாலிஹ்
மேற்கு வங்கத்தில் முஸ்லீம் வாக்குகளை மதசார்பற்ற அணிக்கு எதிராகவும்; பாஜகவுக்கு சாதகமாகவும் பிரிப்பதைத் தடுக்க மார்க்க அறிஞர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்குகின்றனர்
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) மேற்கு வங்க தேர்தல் அரசியலில் நுழைந்தால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு சாதகமாக முஸ்லீம் வாக்குகளைப் பிரிக்க இது காரணமாக அமையக்கூடும் என்று உலமாக்கள் மற்றும் இமாம்களின் சபை கவலை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற எந்தவொரு துரும்பையும் விட்டுவிடக் கூடாது என்ற உச்சபட்ச எச்சரிக்கை உணர்வுடன் பாஜக களமாட தொடங்கியுள்ள சூழலில், இந்த ஆபத்தை உணர்ந்த அவர்கள், மாநிலத்தில் வகுப்புவாத அரசியல் சக்திகளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் , வட வங்காள மாவட்டங்களான டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச்ச்பெஹார், வடக்கு தினாஜ்பூர், தெற்கு தினாஜ்பூர் மற்றும் மால்டாவின் இமாம்கள் அமைப்பு, வடக்கு டினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூரில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் ஒன்றுகூடி “பிளவுபட்ட சமுதாய அரசியலின்” எழுச்சி மீட்பு குறித்து விவாதித்தனர். எதிர் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் பிரியும் அபாயம் குறித்தும், வகுப்புவாத அரசியலின் ஆபத்துகள் குறித்தும் மக்களை உணர வைக்க அக்கூட்டத்தில் முடிவு செய்தனர்.
ஏற்கனவே, முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் இதேபோன்ற ஒரு சில முஸ்லிம்கள் செறிவாக வாழும் மாவட்டங்களின் இமாம்களின் கூட்டம் நடைபெற்றது. வகுப்புவாத கலாச்சாரம் பரவுவதைத் தடுப்பதில் இமாம்களின் பங்கு குறித்து அங்கும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.வகுப்புவாத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், பிளவுபடுத்தும் சக்திகளைத் தவிர்ப்பதற்காகவும் ஜமியத் இ உலமா-இ பங்களா நவம்பர் 13 அன்று கொல்கத்தா அருகே டான்குனியில் ஒரு கூட்டத்தைக் கூட்டியது. அப்போது அங்கும் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது
இந்த அமைப்புகள் “வகுப்புவாத அரசியலின் ஆபத்து” பற்றி பொதுமக்களிடையே “விழிப்புணர்வு இயக்கங்களை” தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஆயினும், பரப்புரையில் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இருப்பதாக AIMIM மற்றும் பாஜக ஒரே குரலில் குற்றம் சாட்டுகின்றன. முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உத்தரவின் பேரில் சில இமாம்கள் இதுபோன்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த AIMIM தலைவர் அசாதுல் ஷேக் கூறினார். “அத்தகைய பிரச்சாரம் அவர்களுக்கு உதவப்போவது இல்லை ” என்று அவர் கூறினார். பாஜக தலைவர் கவ்ரி சங்கர் கோஷ், முதலமைச்சரிடமிருந்து சலுகைகளைப் பெறும் சில இமாம்கள் ஆளும் தரப்புக்கு இதுபோன்ற ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், “உண்மையான அரசியலற்ற இமாம்கள் இத்தகைய பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை” என்றும் கூறினார்.
அனைத்து வங்காள மாவட்ட இமாம் சபையின் பொதுச் செயலாளர் நிஜாமுதீன் பிஸ்வாஸ்,இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து அவர்கள் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும், எந்த அரசியல் கட்சிக்கும் வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்கவில்லை என்றும் கூறினார்.
மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் முஸ்லீம் பங்கு குறிப்பிடத்தக்கதாகும், இங்கு சுமார் 30 சதவீதம் முஸ்லிம்கள், 294 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் குறைந்தது 150 இல், முஸ்லீம் வாக்குகள் 50 முதல் 20 சதவிகிதத்திற்கும் அதிகமானவை என்பது குறிப்பிடத்தக்கது
AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அண்டை மாநிலமான பீகாரில் ஈட்டிய வெற்றியினால், தனது அரசியல் தளத்தை விரிவுபடுத்த மேற்கு வங்கத்தின் மீது இப்போது கவனம் செலுத்தி வருகிறார். மேற்கு வங்கத்தின் முஸ்லீம் வாக்குகளை கணிசமாகக் கொண்ட வடக்கு தினாஜ்பூர் மற்றும் மால்டா மாவட்டங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பீகாரின் முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட சீமஞ்சல் பிராந்தியத்திலிருந்து ஐந்து இடங்களையும் AIMIM வென்றது. அந்த தரப்புக்கு மேலும் உற்சாகத்தையும் அதைவிட பாஜக தரப்புக்கு அரசியல் ரீதியாக உள்ளூர ஓர் அல்ப சந்தோஷத்தையும் அளித்துள்ளது
நவம்பர் 10 ம் தேதி பீகார் சட்டமன்ற முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாள், மேற்கு வங்கத்தில் வாக்கு வலிமை நிறைந்த மாவட்டங்களான வடக்கு தினாஜ்பூர், மால்டா மற்றும் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக ஒவைசி சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம்கள் மாநிலத்தில் ஒரு வலிமையான தேர்தல் சக்தியாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கொல்கத்தாவை தளமாகக் கொண்ட பிரதிச்சி நிறுவனம் மாநிலத்தில் உள்ள முஸ்லிம் வாக்குகளை துல்லியமாக ஆய்வு செய்தது. அதன் கண்டுபிடிப்புகளின்படி, 46 சட்டசபை இடங்களில் முஸ்லீம் வாக்குகள் 50 சதவீதத்திற்கும் அதிகமாகவும், மற்ற 16 இடங்களில் 40௫0 சதவீதமாகவும், மேலும் 33 இடங்களில் 30 — 40 சதவீதமாகவும் உள்ளன. மற்றொரு 50 இடங்களில், அவர்களின் வாக்குகள் 20– 30 சதவீதமும், மீதமுள்ள 150 இடங்களில் 10 சதவீதத்திற்கும் குறையாது.
எனவே, போர்க்கால முஸ்தீபுகளுடன், மாநிலத்தின் முஸ்லிம் வாக்குகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் இமாம்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் எந்த அரசியல் கட்சியின் பெயரையும் எடுக்கவில்லை, ஆனால் அவர்களின் பிரச்சாரம் மாநிலத்தில் இந்துத்துவ மேலாதிக்க பாஜகவின் எழுச்சியைக் கருத்தில் கொண்டு அரசியல் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. முஸ்லீம் மிரர் பத்திரிகையிடம் பேசிய வங்காள மத்ரஸா கல்வி மன்றத்தின் செயல்பாட்டாளர் இஸ்ரவுல் மொண்டல், வெஸ்ட் வங்காளத்தில் ஒவைசி கட்சி தேர்தல் நடவடிக்கைகளை மேற் கொண்டால், அது ஆளும் கட்சியிடம் இருந்து முஸ்லிம் வாக்குகளில் கணிசமான பகுதியை பறிக்கக்கூடும் என்று எச்சரித்தார். 2019 பொதுத் தேர்தலில், 70 சதவீத முஸ்லிம்கள் மம்தாவுக்கு வாக்களித்தனர். 12 சதவீதம் பேர் காங்கிரசுக்கு வாக்களித்தனர், 10 சதவீதம் மாநிலத்தில் இடதுசாரிகளுக்கு வாக்களித்தனர். இதனால், பாஜகவை விட அதிக நாடாளுமன்ற இடங்களை வென்றெடுக்க திரிணாமுல் காங்கிரசுக்கு உதவியது முஸ்லீம் வாக்குகள்தான். இது மாநிலத்தின் 54 சதவீத இந்து வாக்குகளைப் பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களைப் பெற்று ஒட்டுமொத்தமாக 43.69 சதவீத வாக்குகளைப் பெற்றது, பாஜகவுக்கு 40.6 சதவீத வாக்குகளுடன் 18 இடங்கள் கிடைத்தன
முன்னாள் பிபிசி பத்திரிகையாளர் சுபீர் பவுமிக் கூறுகையில், ஒவைசியின் ‘உரை அவரது சொல்லாட்சி’ பாஜகவுக்கு ஆதரவாக இந்து வாக்குகளை பலப்படுத்த உதவும் என்கிறார்.
இமாம்களும் மதத் தலைவர்களும் பானர்ஜியின் கவலையைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஆனால் அவரது உத்தரவின் பேரில் தான், இது நடந்தது என்பது நம்பக்கூடிய ஒன்றல்ல.
மேற்கு வங்க AIMIM மாநில தலைவர்களின் ஒரு குழு ஹைதராபாத்தில் ஒவைசியை சந்தித்தது, ஆனால் கூட்டத்தின் போது என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை அவர்கள் வெளியிடவில்லை. AIMIM – முஸ்லீம் வாக்குகள் அதிகம் கொண்ட 70 சட்டமன்ற இடங்களில் வேட்பாளர்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்க அறிஞர்களின் குழுவும் தீவிர பரப்புரையுடன் களமாடுகின்றனர்.
வெற்றி யாருக்கு ? பொறுத்து இருந்து பார்ப்போம் .
————————-