பயங்கரவாதம் தான் தேசப்பற்றா? ஆர்எஸ்எஸ் தலைவரின் அபத்த கருத்துகள்
- மரியம்குமாரன்
தேசப்பற்று என்பது தேசத்தில் வாழும் மக்களிடையே சாதிமத பேதமற்று, நாட்டு நலனில் அக்கறைக் கொள்ள வைக்கும் ஒரு நல்லுணர்வாகும்.
சங்பரிவாரக் கும்பலோ தேசப்பற்று என்பதைக்கூட மக்களைக் கூறுபோட்டுப் பிரிக்கின்ற கொடிய ஆயுதமாகவே கொள்கிறது.
மதத்தை அரசியலில் கலக்கும் மாபாதகச் செயலோடு, தேசப்பற்றையும் மதவழியாகத் தீர்மானிக்கும் கேடுகெட்ட செயல்திட்டத்தையும், ஆர்எஸ்எஸ் கீழ்த்தரமான கோட்பாடுகள் மூலம் பரப்பி வருகிறது.
இந்துவாகவே தன்னை உணர்பவரே, அவ்வாறு நடப்பவரே தேசப்பற்றோடு இருக்க முடியும் என்பது ஆர்எஸ்எஸ்ன் அதிபயங்கரக் கோட்பாடு. இதற்கு நவீன சாயங்கள் பூசி நகாசு வேலைகள் செய்து இப்போதும் பரப்பி வருகிறது ஆர்எஸ்எஸ்.
இதன் பரப்புரையில் மறைந்திருக்கும் செய்தி யாதெனில்,
இந்துவல்லாதவர்கள் இந்நாட்டின் மீது உண்மையான பற்றுடையவர்களாய் இருக்க மாட்டார்கள்.
இந்து தர்மமே தேசப்பற்றிற்கான மூலம் ஆகும் என்கிறது.
அண்மையில் ஜே.ஜே.பஜாஜ் மற்றும் எம்.டி.சீனிவாஸ் இணைந்து எழுதிய “Making of a Hindu Patriot; Back ground of Gandhiji‚s Hind Swaraj” என்ற நூலை வெளியிட்டுப் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்,
“இந்து தர்மம் என்ற மூல ஊற்றிலிருந்து தான் தேசப்பற்று பிறக்கிறது என்று கூறியதோடு, அவர்களின் அராஜகத் தத்துவத்தால் படுகொலை செய்யப்பட்ட தேசப்பிதா காந்தியடிகளும் இதே தத்துவத்தைக் கொண்டிருந்தார்” என்று கொஞ்சமும் கூச்சமின்றிப் பேசியுள்ளார்.
ஹிந்துத்துவக் கொள்கையைத் தான் காந்தி பிரதிபலித்தாரென்றால், சங்பரிவார மதவெறி பிடித்த கோட்சே கும்பல் அவரை ஏன் கொன்றது? காந்தி கொல்லப்பட்டதை சங்பரிவார கும்பல் இன்றும் ஏன் கொண்டாடி வருகிறது? இந்த வினாக்கள் குறித்து அவர்களுக்குக் கவலையில்லை.
“இந்திய நாடு, இங்கு வாழும் அனைவருக்கும் பொதுவானது. இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமஉரிமை உடையவர்கள்” என்ற கருத்துக்காகவே வாழ்வை அர்ப்பணித்து, அதனாலேயே ஹிந்துத்துவ வெறியர்களான சாவர்க்கர், கோட்சே கும்பலால் கொல்லப்பட்டவர் தேசப்பிதா காந்தியடிகள்.
“ஹிந்துவாக இருப்பவர் மட்டுமே இந்நாட்டிற்கு விசுவாசமாக இருக்க முடியும். ஓர் ஹிந்து எப்போதும் தேசவிரோதியாக இருக்க மாட்டான்” என்று பேசியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவருக்கு, இந்நாட்டின் ராணுவ ரகசியங்கள் உட்பட்ட தகவல்களை நாட்டின் எதிரிகளுக்கு விற்றவர்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்ற உண்மை ஏன் புலப்படாமல் போனது.
அத்தகைய குற்றத்தில் அதிகமாகவே ஈடுபட்டவர்கள் உயர்சாதியினர் தான். அதற்காக அவர்கள் பின்பற்றும் மதத்தைக் குற்றம் சொல்லும் குறைமதி நமக்கில்லை.
இந்திய விடுதலைப் போரில் ஆர்எஸ்எஸ் பங்கு என்ன என்று மோகன் பாகவத் கூறமுடியுமா?
சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதித்தந்து தனக்கு விடுதலைப் பெற்றதை மறுக்க முடியுமா?
“சுதந்திரப் போராட்டத்துக்கும் எனக்கு துளியும் தொடர்பில்லை” என்று வாஜ்பாய் எழுதித்தந்த கடிதம் ஊடகங்களில் வலம்வந்தது உலகுக்கே தெரியுமே.
இந்தியா விடுதலை அடைந்த போது, காங்கிரசின் தலைவராக, ஏன் காந்தியடிகள், பண்டித நேரு உள்ளிட்டோருக்கு தலைவராக இருந்தவர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் அல்லவா?
ஹைதர் அலி, திப்புசுல்தான், பகதூர்ஷா, பேகம் ஹஜ்ரத் மஹல், கான்சாகிப் மருதநாயகம் உள்ளிட்ட மாமன்னர்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து நடத்திய பெரும் போருக்கு இணையாக இந்துத்வா கும்பல் எந்த மன்னரை அடையாளம் காட்ட முடியும்.
இந்திய சுதந்திரத்தை முதன்முதலில் முன்மொழிந்த ஹஸரத் மொஹானி, “சாரே ஜஹான்சே அச்சா” என்ற தேசிய எழுச்சிப் பாடலைத் தந்த அல்லாமா இக்பால், காந்தியடிகளின் பக்கபலமாய் இருந்த பத்ருதீன் தயாப்ஜி உள்ளிட்டோர் நேதாஜி சுபாஷ்சந்திர போசின் வலக்கரமாக இருந்த அல்லாமா கரீம்கனி… இப்படிப் பட்டியலிட்டால் அப்பட்டியல் பலநூறு பக்கங்களுக்க நீளும்.
வி.என்.சாமி, செ.திவான் உள்ளிட்ட பல வரலாற்றாசிரியர்கள் தமிழில் வடித்த பெருநூல்களை வாசித்தால் கடலாய் விரிந்த முஸ்லிம்களின் தியாகம் தெரியும்.
விடுதலைப் பெற்ற இந்தியாவில் ராணுவத்தில் முன்னணியில் நின்று இன்னுயிரை இத்தேசத்திற்காக ஈந்த எத்தனையோ முஸ்லிம் மாவீரர்களின் வரலாறு மூர்க்கம் வளர்க்கும் மூடக்கும்பலின் மூளையில் ஏறாது.
பேரிடர்களின் போது அனைத்து மக்களுக்கும் மீட்புப் பணியாற்றுவதில் முஸ்லிம்கள் முன்னணியில் நிற்பது மனிதநேயமல்லவா, அது தேசப்பற்று இல்லையா?
இந்திய சுதந்திரப் போரில் வெள்ளையர்களுக்கு வால் பிடித்தார்கள்
ராணுவத்தில் உள்ள ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் அபினவ் பாரத் என்ற சங்பரிவார பயங்கரவாத அமைப்புக்கு கடத்தினார்கள்
தேசமக்கள் பேரிடர்களில் தவிக்கும் போது தலைமறைவாகி விடுவார்கள்
ஆனால் தேசப்பற்று என்பது எங்கள் கோமணத்தில் தான் மணந்து கொண்டிருக்கிறது என்பார்கள்.
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே
வாய்ச்சொல் வீரரடி
என்று இவர்களைப் பற்றித்தான் பாரதியார் பாடியிருப்பாரோ?