கால் நூற்றாண்டு கலவரக் கதைகள் அத்தியாயம் 2
புதுமடம் ஹலீம்
ரன்திக்பூர் காட்டுப் பகுதியில் நடந்த ரணகளம்
ஆர்.எஸ்.பகோரா அந்த பின் இரவிலும் உறக்கம் வராமல் தவித்தார். மிகுந்த வெப்பமான அந்த இரவும் அன்றைய பொழுதில் நடந்த நிகழ்வுகளும் அவரின் தூக்கத்தை காவு வாங்கியிருந்தன. புரண்டு படுத்தாலும் ஏசி குளிரையும் தாண்டிய ஒருவித புழுக்கம் தன்னுள் ஊடுருவி இருப்பதை அவர் உணர்ந்தார்.
ஒரு காவல்துறை அதிகாரியாக அரசாங்கத்தின் விசுவாசமான ஊழியனாக தான் பணி செய்து பணி ஓய்வுக்கு ஒருநாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் தாவூட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தவருக்கு குஜராத் மாநில காவல்துறை தலைவரிடமிருந்து உள்துறை செயலாளரின் கையொப்பமுடன் ஒரு ஃபேக்ஸ் செய்தி வந்திருந்தது. ஆர்.எஸ்.பகோரா ஐ.பி.எஸ். ஆகிய தாங்கள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள். செய்தி அறிந்து அதிர்ந்து போனார்.
ஆளும் கட்சியான பாரதீய ஜனதாவின் விசுவாசமான அதிகாரி என பெயர் எடுத்தவர். குஜராத் உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்தபோது அவருடன் மிக நெருக்கமாக இருந்தபின் டி.ஐ.ஜி. வன்சாரா வின் நம்பிக்கைக்குரிய சீடராக காவல்துறையில் பயணித்ததால் உயர் அதிகாரிகள் மட்டத்தில் செல்வாக்கு பெற்றிருந்தார் பகோரா.
வன்சாரா போலி என்கவுண்டர்களில் குற்றம் சாட்டப்பட்டு அபோது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றமும் வன்சாராவை குற்றவாளி என உறுதி செய்திருந்தது. ஆகையால் தனக்கிருந்த துறை ரீதியான ஆதரவும் இன்றி தவித்துப் போனார் பகோரா.
அஹமதாபாத் டி.ஐ.ஜி.யாக வன்சாரா பதவியில் இருந்தபோது, ரன்திக்பூர் காவல் நிலைய ஆய்வாளராக பகோரா பணி செய்து கொண்டிருந்தார். 2002 ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி. அஹமதாபாத் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் இருந்தபோது காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது.
பழங்குடி மக்கள் ஒரு பெரும் கூட்டமாக ஒரு முஸ்லிம் மதத்தைச் சார்ந்த இளம் பெண்ணை அழைத்து வந்திருப்பதாகவும், அப்பெண் பத்துக்கும் மேற்பட்டவர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு மிகவும் பலஹீனமாக காவல் நிலையத்தில் இருப்பதாகவும், நேற்று இரவு ரன்திக்பூர் காட்டுப் பகுதியில் நடந்த வன்முறையில் கொல்லப்பட்ட பலரும் அப்பெண்ணின் உறவினர்கள் என்றும் காவல் நிலைய ரைட்டர் ஓம்பிரகாஷ் தகவல் சொன்னான்.
நேற்று காட்டுப் பகுதியில் நடந்த கலவரத்தில் பதினான்கு நபர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதில் தப்பித்த பெண்மணியாக இவள் இருக்கலாம் என பகோரா யூகித்துக் கொண்டார். ரன்திக்பூர் காவல் நிலைய மெயின் கேட்டை ஜீப் கடக்கும் போதே கவனித்தார். நாற்பதுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் அங்கே குழுமியிருந்தனர்.
பகோராவிற்கு மிகுந்த சலிப்பாக இருந்தது. கடந்த நான்கு தினங்களாக கலவரத்தில் இறந்து போனவர்களையும், தொலைந்து போனவர்களையும் அடையாளப்படுத்தும் பணியை ஓய்வின்றி செய்து கொண்டிருந்தார். தன் இருக்கையில் அமர்ந்து கொண்டே, அந்த பெண்ணை அழைத்து வாருங்கள் என்றார்.
அவளால் எழுந்து நிற்க முடியவில்லை. உள் அறையில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார். மருத்துவ உதவியும் செய்யப்பட்டிருக்கிறது, ஓம்பிரகாஷ் தான் பதில் அளித்தான்.
உள் அறையில் திண்டில் அவள் சோர்வாக படுத்திருப்பது தெரிந்தது. பழங்குடி மக்கள் அணியும் உடையுடன் இருந்த அவளுக்கு இருபது வயதுக்கும் குறைவாகத்தான் இருக்க முடியும்.
பேர் என்னவாம். பில்கிஸ் பானு. இம்முறையும் ஓம்பிரகாஷ் தான் பதில் சொன்னான்.
பில்கிஸ் பானு அனுபவித்த அவலங்கள்
காவல் நிலையத்தின் உள்ளே படுத்திருந்த பில்கிஸ் பானுவுக்கு தன் உடல் வலியை விட நேற்று இரவு நடந்த நிகழ்வுகள் தான் பெரும் ரணமாக மனதை அறுத்துக் கொண்டிருந்தது. அவளின் கண்ணீர் கன்னங்களில் வழிந்து பெரும் தடமாக மாறியிருந்தது.
காவல் நிலையத்தில் அனாதையாகப் படுத்திருக்கும் தன் நிலையையும், தன் கணவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையையும், தன் தாயும் குழந்தையும் உறவினர்களும் தன் கண் முன்னே கொலை செய்யப்பட்டதையும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தன் ஒவ்வொரு விசும்பலிலும் தன் அடி வயிறு சுரீர் என வலிப்பதையும் உணர்ந்தார்.
ஐந்து மாதக் கர்ப்பிணியான அவளின் கால்கள் இரண்டும் வீங்கிப் போய் நடக்கும் சக்தியை இழந்து விட்டிருந்தன. நேற்றைய இரவின் நிகழ்வுகளை நினைக்கும் போதெல்லாம் பில்கிஸ் பானுவின் உடல் நடுங்கியது. நேற்றைய இரவில், அவளின் வீட்டுக்கு அருகே பஜ்ரங்தள அமைப்பினர் முஸ்லிம் வீடுகளை தீவைத்து கொளுத்துகின்றனர் என்ற செய்தியை அவளின் கணவன் யாகூப் வந்து சொன்னதும் அவளின் வீடு அல்லோலப்பட்டது. உடனடியாக வீட்டை விட்டு எல்லோரும் தப்பித்துப் போய்விடுவது தான் நல்லது என்றான் யாகூப்.
ஒரு டிரக்கில் பில்கிஸ் பானுவைவும், அவளின் மூன்று வயது பெண் குழந்தையையும் ஏற்றிவிட்டு யாகூப் சொன்னான். “ஊரைத் தாண்டி நம் உறவினர் வீட்டுக்குப் போய்விடுங்கள். இரண்டு தினங்களில் நானும் வந்து சேர்ந்து கொள்கிறேன்”.
டிரக்கில் பில்கிஸ் பானு, அவளின் குழந்தை, பில்கிஸ் பானுவின் தாயாருடன் சேர்த்து 17 நபர்கள் ஏறியிருந்தனர். யாகூபிற்கு இடமில்லை. அவனையும் தங்களுடன் வந்துவிடுமாறு கெஞ்சினாள்.
உடுத்திய துணியுடன் தான் அனைவரும் டிரக்கில் ஏறியிருந்தனர். கவலைப்பட வேண்டாம். இரு தினங்களில் வந்து விடுவேன். அவனின் நம்பிக்கை வார்த்தைகள் 19 வயது பில்கிஸ் பானுவுக்கு அந்த சூழ்நிலையிலும் தைரியத்தைக் கொடுத்தது.
டிரக், ஹெட்லைட் வெளிச்சமின்றி நகரத் தொடங்கியது. ரன்தீக்பூர் மெயின் ரோட்டை கடந்து காட்டு வழிப் பாதையாக செல்லும் போது ஒரு கும்பல் ஆயுதங்களுடன் வழிமறித்தது. வழிமறித்தவர்களின் சில முகங்கள் அவளுக்கு பரிச்சயமான முகங்கள் தான். அதன்பின்பு நடந்ததை நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
தன் மூன்று வயது மகளை எவனோ ஒருவன் பிடுங்கி தூக்கி எறிவதையும், அவளின் தலை பாறையில் மோதி உடைவதையும் பார்த்த நிலையில் பில்கிஸ் பானுவுக்கு மயக்கம் ஆட்கொண்டது.
மயக்கம் தெளிந்து தான் எழுவதற்கு முயற்சி செய்த போது தன் உடம்பில் ஆடைகளின்றி நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார். அதிர்ந்து அலர்வதற்கு சிரமப்பட்டு தன் தலையை திரும்பிப் பார்த்தபோது தன் குடும்பத்தினர் அனேகர் சடலமாகக் கிடந்தனர். தன் இரு கால்களும் இடுப்புக்கு கீழே ரத்தச் சகதியாக இருப்பதையும், தன் தாயாரின் உடலும் நிர்வாணப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதையும் கண்டு விக்கித்து அலறினார் பில்கிஸ் பானு.
அருகே இருந்த மலைக் குன்றில் தெரியும் சிறு வெளிச்சத்தை நோக்கி கடினமான முயற்சிகளுடன் நடக்கத் தொடங்கினாள்.
“உங்களை வன்புணர்வு செய்தவர்களையும், உங்களுடன் வந்தவர்களை கொலை செய்தவர்களையும் உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?” ஆர்.எஸ்.பகோரா கேட்டார். “சிலரை தன்னால் அடையாளம் காட்ட முடியும். அவர்களை ரன்தீக்பூர் மார்க்கெட் பகுதிகளில் பார்த்திருக்கிறேன்”. பில்கிஸ் பானுவின் வாக்குமூலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
பில்கிஸ் பானுவை பெண்கள் மறுவாழ்வு முகாமில் கொண்டு போய் சேர்த்தார்கள். கணவர் யாகூப் பதினாறு தினங்களுக்குப் பிறகு பில்கிஸ் பானுவின் இருப்பிடம் தெரிந்து வந்து சேர்ந்தார். யாகூபை கண்களால் கண்டவுடன் பெரும் ஓலமிட்டு அழுதார் பில்கிஸ் பானு.
தொடரும் குஜராத் அரசின் துரோகம்
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி. உச்சநீதின்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு. நீதியரசர் ஏ.எஸ்.போட்டே, நீதியரசர் நசீர் அஹமத் அந்த அமர்வில் இருந்தனர். குஜராத் அரசு இந்த நிமிடம் வரையில் நாங்கள் ஐந்து மாதங்களுக்கு முன் பில்கிஸ் பானுவுக்கு தீர்ப்பு அளித்த நிவாரணத்தைக் கொடுக்காதது ஏன்? நீதிபதிகள் கோபமாகவே கேட்டனர். அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா பதில் சொன்னார்.
“இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கு இழப்பு வழங்கும் திட்டம் குஜராத் அரசிடம் இருக்கிறது. அதன் அடிப்படையில் நாங்கள் நிவாரணம் கொடுக்க நினைப்பதால் உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நிவாரணத் தொகையை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்” என்றார். நீதிபதிகள் கோபமடைந்தனர்.
“இந்த வழக்கில் உள்ள உண்மைத்தன்மை, ஆதாரங்கள் அடிப்படையில் தான் மிகப்பெரிய இழப்பீட்டை நாங்கள் அறிவித்தோம். பில்கிஸ் பானு தன் குடும்ப உறுப்பினர்களை இழந்து நிற்கிறார். தன் மூன்று வயது குழந்தை, பாறையில் மோதி கொலை செய்யப்பட்டிருக்கிறது. அவர் பலராலும் வன்புணர்வு செய்யப்பட்டு உடலாலும் மனதாலும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆகவே நாங்கள் ஏற்கனவே அறிவித்த நிவாரணத் தொகையான ஐம்பது லட்சத்தையும், அரசு வேலை மற்றும் அவர் குடும்பத்தினருக்கு குடியிருப்பு வீடும் உடனடியாக குஜராத் அரசு அதிகபட்சம் இரண்டு வாரங்களில் வழங்கப்பட வேண்டும் என இந்த அமர்வு உத்தரவிடுகிறது”.
இச்சம்பவத்தில் தொடர்புடைய 11 நபர்களின் ஆயுள் தண்டனையை உறுதிபடுத்திய உச்சநீதிமன்றம், இதில் மறைமுகமாக உதவி செய்த ஐந்து காவல் அதிகாரிகள் உட்பட ஏழு பேர்களின் பணி ஆணையை ரத்து செய்தும் உத்தரவிட்டது.