கால் நூற்றாண்டு கலவரக் கதைகள் அத்தியாயம் ஐந்து

-புதுமடம் ஹலீம்

அஹமதாபாத்தில் காத்திருந்தது அதிர்ச்சி !

மும்பை லோக்மானியா திலக் டெர்மினலிருந்து தாதர் எக்ஸ்பிரஸ் கிளம்புவதற்கு தயாராக இருந்தது. இன்னும் சில நிமிடங்களில் வண்டி புறப்படத் தயாராக இருப்பதாக ஹிந்தியிலும், மராத்தியிலும் அறிவிப்புகள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். ரிசர்வேசன் செய்யப்படாத அந்த கம்பார்ட்மென்டில் நிற்பதற்குக் கூட இடம் இல்லை. ஆறு மணி நேரம் நின்றுகொண்டே பயணம் செய்வது கடினம், என்ன செய்யலாம்… என அந்த நான்கு பேரும் யோசித்தனர்.

“ஜோஹர் பாய், ஒரு இடம் கிடைத்தால் கூட போதும், ஜஹானா உட்கார்ந்து கொள்வாள், நாம் சமாளித்துக் கொள்ளலாம்” ஜாவேத் தான் பரிதாபமாகச் சொன்னான். நெருக்கடியாக நின்றுகொண்டு ஜஹானா பரிதவிப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவர்களின் இக்கட்டான நிலையைப் பார்த்து, சற்று மனமிறங்கிய குஜராத்தி குடும்பம், ஜஹானாவுக்கு மட்டும் உட்காருவதற்கு இடம் கொடுத்தது.

நிம்மதி பெருமூச்சு விட்டான் ஜாவித் ஷேக். ஜஹானா என அவர்களால் அழைக்கப்பட்ட இர்ஷத் ஜஹானுக்கு பத்தொன்பது வயது தான். மும்பைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் பிரஜோஸின் நட்பு கிடைத்தது. நட்பு பேரன்பாக உருவெடுத்து திருமணத்தில் வந்து முடிந்திருந்தது. பிரஜோஸ் பிள்ளை என்ற தனது பெயரை ஜாவேத் ஷேக் என மாற்றிக் கொண்டான்.

தன் இளம் மனைவியுடனான இல்லற வாழ்வைத் துவங்குவதற்காக அவன் தேர்ந்தெடுத்த நகரம் தான் அஹமதாபாத். காரணம், அவனது நண்பர்கள் அம்ஜத் அலி ராணாவும், ஜீஷன் ஜோஹரும் அங்கு தான் தொழில் செய்து கொண்டிருந்தார்கள். மும்பையை விட வருமானமும் தங்களின் வாழ்வியலும் திருப்தி தருவதாக ஊக்கம் கொடுத்ததன் பேரில் நண்பர்களுடன் அஹமதாபாத் பயணம் மேற்கொள்வதற்கு உத்தேசித்தார்கள் ஜாவேத் ஷேக் தம்பதியினர்.

ராணாவும், ஜோஹரும் அஹமதாபாத்தில் என்ன தொழில் செய்கிறார்கள் என்ற விபரம் எல்லாம் ஜாவேத்துக்கு தெரியாது. இஷ்ரத் ஜஹானின் குடும்பத்தினருக்கு இந்த திருமணத்தில் மகிழ்ச்சி கிடையாது. இஸ்ரத்தின் அம்மா ஷமீமா மட்டுமே இஷ்ரத்தின் பிடிவாதம் காரணமாக திருமணத்திற்கு சம்மதம் கொடுத்தாள். தன் குடும்பத்தினரின் விருப்பமின்மை காரணமாகவே ஜாவேத் ஷேக்குடன் அஹமதாபாத் செல்வதற்கு சம்மதம் சொன்னாள் இஷ்ரத் ஜஹான்.

மத்திய உளவுத்துறை அதிகாரி ராஜேந்தர் குமாரின் ஆலோசனை

மத்திய உளவுத்துறை அதிகாரி ராஜேந்தர் குமார், குஜராத் உள்துறை அமைச்சரை அவரின் பங்களாவில் தனிப்பட்ட முறை அழைப்பின் பேரில் சந்தித்துவிட்டு அப்போதுதான் அலுவலகம் திரும்பியிருந்தார். சமீபகாலமாக குஜராத் அரசு பற்றியும், முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சரைப் பற்றியும் ஊடகங்களில் வெளிவரும் எதிர்மறை செய்திகள் பற்றியும், மக்களின் மனநிலை பற்றியும் உள்துறை அமைச்சர் தன்னிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை செய்ததை பெருமையாகவே நினைத்தார் ராஜேந்தர் குமார். மத்திய அரசு உளவுத்துறை அதிகாரியாக தான் இருந்தாலும் மாநில அரசின் மேல்மட்டத்தோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

முகம் தெரியாத எதிரிகள் பலரையும் உருவாக்குவதும், அவர்களை நாமே வியூகம் அமைத்து வீழ்த்துவதும், அச்செயலை மக்களே பாராட்டும் விதமாக ஊடக செய்திகளாகக் கொண்டு செல்வதும், மக்கள் மத்தியில் அரசின் மதிப்பை பன்மடங்காக உயர்த்திக் காட்டும் வழிமுறைகளில் சிறந்ததாக இருக்கும் என ராஜேந்தர் குமார் ஆலோசனை சொல்லியிருந்தார்.

ஏழு நபர்கள் கொண்ட உயர் காவல் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமற்ற தனிப்படையாக செயல்படத் தொடங்கியது. இவர்களுடன் ராஜேந்தர் குமாரும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டார். பி.பி.பாண்டே, டி.ஜி.வன்சாரா, ஜி.எல்.சிங்கால், என்.கே.அமின், தருண் பாரட், சுனாஜி மற்றும் ஜே.ஜே.பர்மா என பவர்புல் டீம். அனைவருமே பல்வேறு பொருப்புகளில் பணியாற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்.

இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி படு ரகசியமானது. மாநில காவல்துறை தலைவர் சக்கரவர்த்தி கூட இவர்களிடம் செல்வாக்கு செலுத்த முடியவில்லை. கட்டுப்பாடற்ற அதிகாரம் கொண்டவர்களாக அந்த ஏழு நபர்களும் செயல்படத் தொடங்கினார்கள்.

இரவு 11.30 மணியளவில் ஜாவேத் ஷேக் உட்பட அந்த நான்கு பேரும் பயணம் செய்த தாதர் எக்ஸ்பிரஸ் தன் பெருத்த உடலை அஹமதாபாத் ரயில்வே ஜங்ஷனில் உள்ளே நுழைத்து தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.

நான்கு பேர்களும் சற்று சோர்வாகவே நடந்து, மெயின் கேட் வழியாக வெளியேறும் இடத்தில் தடுக்கப்பட்டார்கள். ஜோஹரையும், ராணாவையும் அடையாளம் கண்டுகொண்ட போலீசார், சற்று அதட்டலுடன் அவர்களை நிறுத்தினார்கள். “இரண்டு நாட்களாக உங்கள் இருவரையும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்கே சென்றீர்கள்?”

ராணாவும், ஜோஹரும் மிகுந்த சங்கடத்துடன் ஜாவேத் ஷேக்கையும், இஷ்ரத் ஜஹானையும் பரிதாபமாகப் பார்த்தார்கள்.

“சின்ன விசாரணை தான். ஸ்டேஷன் வந்துவிட்டு விசாரணை முடிந்ததும் செல்லலாம்”. நான்கு பேரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டார்கள். “புதிதாக திருமணம் செய்துகொண்டு ஊருக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை அனுப்பி விடுங்கள்”. ராணா எத்தனை கெஞ்சியும் காவலர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

நடு இரவில் நடந்த போலி என்கவுண்டர்

அந்த விடியற்காலை டெலிபோன் மணி தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது. சற்று எரிச்சலுடன் போனை எடுத்தார் பி.பி.பாண்டே, அஹமதாபாத் காவல்துறை கமிஷனர். கிரிஸ் சிங்கால் தான் லைனில் இருந்தார். “நான்கு லஷ்கர் தீவிரவாதிகளும் போலீஸ் உடன் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள், அதில் ஒருவர் பெண்” என தகவல் தெரிவித்தார் கிரிஸ் சிங்கால்.
“யார் ஸ்பாட்டில் இருக்கிறார்கள்?”
“நானும், டி.ஜி.வன்சாராவும் இருக்கிறோம். அமினும், தருண் பாராட்டும் அசிஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.”
“ஓ.கே. பிரஸ்க்கு சொல்லிடுங்க. நானும் பத்து நிமிடங்களில் அங்கு வந்துவிடுவேன்.”

ஜூன் 15, 2004. அன்றைய அதிகாலை ஆல் இந்தியா ரேடியோவில் செய்தியாளர் சூடான செய்தியை பரபரப்பாக வாசித்துக் கொண்டிருந்தார். “முதல்வர் மோடியையும், துணைப் பிரதமர் அத்வானியையும் கொலை செய்வதற்காக பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் நான்கு பேரை கடும் சண்டைக்குப் பிறகு குஜராத் காவல்துறை இன்று அதிகாலை கொன்றனர். அதில் ஒருவர் பெண் தற்கொலைப் படை தீவிரவாதி என அடையாளம் காணப்பட்டிருக்கிறது”.

டி.ஐ.ஜி.வன்சாரா, பத்திரிக்கையாளர்களிடம், நடந்த நிகழ்வுகளை வீர தீர செயலாகச் சொல்லிக் கொண்டிருந்தார். மத்திய உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், லஷ்கர் இ தொய்பாவின் ஊடுருவலை தாங்கள் தொடர்ந்து கண்காணித்து கொண்டிருந்ததாகவும், பாகிஸ்தானிலிருந்து நான்கு தற்கொலைப் படை தீவிரவாதிகள் குழு அஹமதாபாத் நகரில் ஊடுருவி இருப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் நான்கு பேரையும் காவல்துறை வாகனத்தில் விரட்டிப் பிடிக்க முயற்சித்தும் அவர்கள் திருப்பி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தாங்கள் திருப்பிச் சுட்டதாகவும், நான்கு பேரும் குண்டடிப்பட்டு கொல்லப்பட்டதாகவும் செய்தியை கோர்வையாக சொல்லிக் கொண்டிருந்தார். ஏ.கே.56 ரக துப்பாக்கியும், சில வெடிமருந்துகளும் கைப்பற்றி இருப்பதாகவும் பத்திரிக்கையில் செய்தி வெளிவந்தது.

ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி, ராணா, ஜீஷன் ஜோஹர் மற்றும் இஷ்ரத் ஜஹான் என அவர்களின் உடல்களுடன் பெயர்களும் பத்திரிக்கைச் செய்தியாக வெளிவந்தன. டி.ஐ.ஜி. வன்சாரா, தீரச் செயல் புரிந்ததாக அவரின் படங்களுடன் குஜராத்தி பத்திரிக்கைகள் கவர் ஸ்டோரி வெளியிட்டன.

பத்தொன்பது வயது இஷ்ரத் ஜஹான் தன் கல்லூரி ஐ.டி. கார்டை கழுத்தில் தொங்கவிட்டிருந்தார் என எப்.ஐ.ஆரில் விசித்திரமாகப் பதிவு செய்திருந்தனர். இதனால் இது போலி என்கவுன்டர் என சில பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

என்கவுண்டரை நியாயப்படுத்தும் வேலை

2002 முதல் 2006 ஆம் ஆண்டு வரை மட்டும் 17 போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். 2009 ஆம் ஆண்டு முதன்முதலாக அஹமதாபாத் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டிரேட் அறிக்கையின்படி 12.06.2004 இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு பேரும் காவல்துறையில் கடத்தி வரப்பட்டு 15.06.2004 அதிகாலையில் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார்கள் என எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அவர்களின் சடலங்கள் அஹமதாபாத்தின் புறநகர் சாலையில் காவல்துறையினரே கொண்டுபோய் போட்டிருக்கிறார்கள் என குற்றம் சுமத்தப்பட்டது.

2010 ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றம், சதீஷ்குமார் ஐ.பி.எஸ். தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது. அவர்களின் அறிக்கையின்படி இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு பேரும் போலி என்வுண்டரில் கொல்லப்பட்டிருப்பதாக சாட்சியம் அளித்தனர். டி.ஜி.வன்சாரா மற்றும் ஆறு காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னை தவறாக வழிநடத்தினார் என வன்சாரா, நீதிமன்ற விசாரணையில் சொன்னாலும், 2016 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தபோது மாலை மரியாதையுடன் குஜராத்தின் சிங்கம் என பாஜக தொண்டர்களால் ஊர்வலமாக வன்சாரா அழைத்து செல்லப்பட்டதை ஊடகங்கள் காட்சிகளாக வெளியிட்டன. 2014 ஆம் ஆண்டே அமித்ஷா மீது உள்ள குற்றச்சாட்டிற்கு எந்தவிதமான சாட்சியங்களும் இல்லை எனக்கூறி உச்சநீதிமன்றம் அவரை விடுவித்தது.

சட்டத்தையும், நீதிமன்றத்தையும் தங்களின் அதிகாரத்தால் வளைத்து, மக்கள் மன்றத்தில் இந்த என்கவுண்டரை நியாயப்படுத்தும் வேலையையும் பாஜக அரசு செய்து காட்டியது.

பொய்சாட்சி கொண்டுவந்ததற்கான பரிசு பத்மஷ்ரீ

2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாதத் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவராகக் கருதப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி, அமெரிக்க குடியுரிமைப் பெற்றவன். 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று அமெரிக்க சிறையில் இருந்தான். 2015ஆம் ஆண்டு மும்பை நீதிமன்றம், அப்ரூவராக மாறினால் ஹெட்லிக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக சொன்னதன் அடிப்படையில், மும்பை நீதிமன்றத்திற்கு வீடியோ கான்பிரன்ஸ் முறையில் சாட்சியம் அளித்தான். லஷ்கரே தொய்பாவின் கமாண்டர் சாஜிர் மிர் மற்றும் சமீர் அலியுடன் தனக்கு உள்ள தொடர்பை உறுதி செய்தான்.

அரசு வக்கீல் உஜ்வல் நிகம், ஹெட்லியிடம் சில கேள்விகளை முன்வைத்தார். லஷ்கரே தொய்பாவில் பெண்களும் உள்ளனரா? எனக் கேட்க, “ஆம் இருக்கிறார்கள். இந்தியாவில் லஷ்கரின் திட்டம் ஏதும் நிறைவேற முடியாமல் போனதுண்டா?” எனக் கேட்க, “ஆமாம். குஜராத் காவல்துறை அத்திட்டத்தை முறியடித்துவிட்டது. அதில் ஒரு பெண்ணும் இருந்தார் என்று எனக்குத் தெரியும்” என்றான். அவள் பெயர் என்ன? எனக் கேட்க, ஞாபகம் இல்லை என்றான் ஹெட்லி. “மூன்று பெயர்களைச் சொல்கிறேன், இதில் இருக்கிறதா பாருங்கள்? ” என்றவுடன், இஷ்ரத் ஜஹான் என பெயர் சொன்னான் ஹெட்லி.

மோடியின் மீதும், அமித்ஷாவின் மீதும் உள்ள கறைகள் நீக்கப்பட்டதாகவும், அவர்கள் செய்தது போலி என்கவுண்டர் இல்லை என்றும், உண்மையான என்கவுண்டர்தான் என்றும் ஊடகங்கள் புகழ்ந்து கட்டுரைகள் வெளியிட்டன. 2015 ஆம் ஆண்டு அட்வகேட் உஜ்வல் நிகமுக்கு மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button