கால்நூற்றாண்டு கலவரக் கதைகள் அத்தியாயம் 6
- புதுமடம் ஹலீம்
யோகி பற்றவைத்த கோரக்பூர் கலவரங்கள்
நாத சைவ மதத்தைப் பரப்பும் கோரக்பூர் மடம், நேபாளத்திலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் லூம்னி சாலையில் அமைந்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களிலிருந்து ஆன்மீக சுற்றுலா வந்திருந்த பயணிகளிடம் கோரக்பூர் மடத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டிருந்தார் அம்மடத்தில் பணியாற்றும் பிரச்சாரகர். லூம்னி சாலை வழியாக இந்தியாவுக்குள் நுழைய வேண்டும் என்றால் நேபாளத்திலிருந்து ஐம்பது மைல் தொலைவில் இருக்கும் கோரக்பூரையும், கோரக்பூர் மடத்தையும் கடக்காமல் நுழைய முடியாது என பெருமையாகப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் அவர்.
11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சித்தர்களில் ஒருவரான கோரக்கநாதரால் தோற்றுவிக்கப்பட்டது அம்மடம். அதைச் சுற்றி உருவான நகரம் அவரின் பெயரில் கோரக்பூர் என்று அழைக்கப்படுகிறது.
ரயில்வே ஸ்டேஷனை விட்டால் சொல்லும்படியாக அங்கு ஒன்றும் இல்லை. பெயருக்கு மத்திய அரசின் உரத் தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆன்மீக சுற்றுலாவும், கால்நடை விவசாயமும் இல்லை என்றால் கோரக்பூர் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமே இருந்திருக்காது.
கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய மக்கள், நேபாளத்தின் கூர்க்கா இன மக்கள் கோரக்பூரின் பூர்வகுடிவாசிகள் என்பது கோரக்பூர் வாசிகளின் பெருமை பேச்சுக்களில் முதன்மையானதாக இருக்கும். இந்து மக்கள் பெரும்பான்மையினராகவும், கிறிஸ்தவர்களும்; முஸ்லிம்களும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்தாலும் 1998 ஆம் ஆண்டு வரையில் அவ்வப்போது நடக்கும் சாதி மோதல்களைத் தவிர்த்து, கோரக்பூர் ஆன்மீக பூமியாகவே இருந்து வந்திருக்கிறது.
26 வயதான அஜய்சிங் பிசுத் என்ற இளைஞன் இந்து யுவ வாஹினி என்ற அமைப்பைத் தோற்றுவிக்கும் வரையில், அங்கு மத மோதல்களும் நடந்ததில்லை. அதன் பின்பு தான் கோரக்பூரின் சூழல் தலைகீழாக மாறிப்போனது. 1998 முதல் 2007 ஆம் ஆண்டுக்கிடையில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட மதக்கலவரங்கள் இந்து யுவ வாஹினி அமைப்பும் அதன் தொண்டர்களாலும் நடத்தப்பட்டு அதன் சுற்று வட்டாரத்தை கிடுகிடுக்க வைத்தது. அஜய்சிங் பிசுத், தன்னை கோரக்பூர் மடத்தின் அப்போதைய ஆசான் மகந்த் அ வையத்தியநாத்தின் சீடராக சேர்ந்த பிறகு தன் பெயரையும் மாற்றிக் கொண்டான். அஜய்சிங் பிசுத் எனப்படும் தன் பெயரை யோகி ஆதித்யநாத் ஆக மாற்றிக் கொண்டான்.
கொளுந்து விட்டு எரிந்த கோரக்பூர்
2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோரக்பூர் மிகவும் குளிரான சீதோஷ்ண நிலையில் இருந்தாலும் அன்று நடந்த சம்பவம் நகரத்தின் மக்களை பெரும் வெப்பமான மனநிலைக்கு கொண்டு சென்றிருந்தது.
கோரக்பூரின் மத்தியில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்கள் அன்றைய மொகரம் பண்டிகையை சிறப்பாக நடத்த வேண்டி ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். கர்பலாவின் துக்கத்தை நினைவுகூறும் விதமாக கருப்பு ஆடை அணிந்த இளைஞர்கள் பலரும் கைகளில் சிறு சக்திகளுடன் காகே ஷிபாங்கை நெற்றியிலும், மார்பிலும் கீறிக்கொண்டு, ரத்தம் தோய்ந்த கோலத்துடன் ஊர்வலம் நடத்துவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு வருடமும் நகரத்தின் மையத்தில் ஆரம்பிக்கும் ஊர்வலம் இமாம் ரோஷன் அலி ஷா தர்கா வரையில் நீளும், இமாம் ரோஷன் அலி ஷா அடக்கம் செய்யப்பட்ட இமாம்பரா தர்காவில் சென்று முடிவடையும். இமாம் ஹசனைப் பற்றிய பாடல்கள் கூட்டத்தில் இசைக்கப்பட்டும் பெரும் சோகமான குரல் ஒலிப்போடும் அந்த ஊர்வலம் நகரத் தொடங்கியிருந்தது.
மகாராஜ் கஞ்ச் மாவட்டம், கோரக்பூரை ஒட்டியே இருக்கிறது. பஞ்ச் மற்றும் ரூகியா கிராமங்கள் சாதிய வன்முறைக்கு பெயர் போனவை. சமீபத்தில் தான், சுடுகாட்டை மையமாக வைத்து பட்டியல் இன மக்களின் மீது பெரும் வன்முறை ஏவப்பட்டு இருந்தது. பெரும்பாலும் அவ்வூர் மக்கள் தங்களின் விசேஷங்களுக்கு ஜவுளி எடுப்பதற்கு கோரக்பூரை நாடியே வருவார்கள்.
இந்து யுவ வாஹினி இயக்கம் அந்த மாவட்டம் முழுதும் பெரும் செல்வாக்கோடு இருக்கிறது. ராஜ்குமார் அக்ரகா அந்தப் பகுதியின் இந்து யுவ வாஹினி அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவன். கோரக்பூரின் மையத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் தன் குடும்பத்தினருடன் ஜவுளி மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு வந்திருந்தான்.
குடும்பத்தினரை ஜவுளிக் கடையில் விட்டுவிட்டு தான் மட்டும் வீதியை மறைத்துக் கொண்டு நிறுத்தப்பட்டிருக்கும் தன் ஜீப்பில் நண்பர்களுடன் பான்பராக் எச்சிலைத் துப்பியவாறு சப்தமிட்டு பேசிக் கொண்டிருந்தான். அவனுடைய ஜீப் மார்க்கெட்டின் முக்கிய வழிப்பாதையை அடைத்துக் கொண்டு நிறுத்தப்பட்டிருந்தது.
போக்குவரத்துக்கு சிரமமாக இருந்தாலும் அவனைப் பற்றி அங்கே இருப்பவர்களுக்குத் தெரியும் என்பதால் சிரமத்துடன் மக்கள் அவ்வீதியைக் கடந்து கொண்டிருந்தார்கள்.
இமாம் ஹசனையும், ஹுசைனையும் புகழ்ந்து தபசு சப்தத்துடன் மார்பில் மாறி மாறி கத்தி போட்டவர்களாக அந்த இளைஞர்கள் ரத்தம் வடிய ஊர்வலம் வந்து கொண்டிருந்தார்கள்.
அந்த ஊர்வலத்திற்கு தன் ஜீப் தடையாக நிற்கிறது என்று தெரிந்தும் ஒருவித அலட்சிய மனோபாவத்துடன் ஜீப்பில் அமர்ந்திருந்தான் ராஜ்குமார் அக்ரகர். ஊர்வலத்திற்கு காவலாக வந்திருந்த இரண்டு காவலர்கள் ஜீப்பை நகர்த்துமாறு கூறியும் தன்னால் முடியாது என்றான்.
ஊர்வலம் முழுமையாக அங்கு வந்தடைந்தது. நகர்வதற்கு சற்று சிரமமான சூழலில், ஊர்வலத்தில் வந்திருந்த இளைஞர்கள் சிலர் ராஜ்குமாருடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். கலவரத் தீயின் திரியை தங்களின் ஆக்ரோஷமான வார்த்தைகளால் பற்ற வைத்தார்கள். வாக்குவாதம் மெல்ல மெல்ல கைகலப்பாக மாறத் தொடங்கியது.
மிகவும் கோபமான ராஜ்குமார் அக்ரகர், தன் ஜீப்பின் உள்ளே வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த இளைஞர்களைப் பார்த்து சுட்டான். நெஞ்சில் கத்தி போட்டு ரத்தம் வடிய ஊர்வலத்தில் வந்த அந்த 17 வயது இளைஞன் மார்பில் மேலும் ரத்தம் கொப்பளிக்க வீதியில் விழுந்தான். சில வினாடிகளில் நடந்துவிட்ட அந்த துயரத்தின் வீரியத்தை உணர்ந்த கூட்டம் பெரும் கோபம் கொண்டது. ராஜ்குமார் அக்ரகர் சுதாரிப்பதற்குள் இரண்டு கூர்மையான வாள்கள் அவன் நெஞ்சில் பாய்ந்தன. சில நிமிடங்களில் நடந்துவிட்ட இரண்டு படுகொலைகளைக் கண்டு மார்க்கெட்டில் உள்ள மக்கள் விக்கித்துப் போனார்கள். கடைகள் அடைக்கப்பட்டன.
மேயர் மற்றும் MLA ஆதரவுடன் இந்து யுவ வாஹினி
இந்து யுவ வாஹினியின் கோரக்பூர் அலுவலகத்தில் கடும் கோபத்துடன் வந்து சேர்ந்தார் யோகி ஆதித்யநாத். ஏற்கனவே கோரக்பூர் மேயர் அஞ்சு சவுத்ரியும், பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனும் அங்குதான் இருந்தனர். இதை விடக்கூடாது என உறுதியாக இருந்தார்கள் அவர்கள்.
முஸ்லிம் கடைகள் என அடையாளப்படுத்தப்படும் கடைகள் எல்லாம் தீப்பற்றி எரியத் தொடங்கின. கோரக்பூர் நகரம் பெரும் கலவரக் காடாக உருவெடுக்கத் தொடங்கியது. அன்றைய இரவில் மட்டுமே ஐந்து முஸ்லிம்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். 14 பேர்களின் நிலை கவலைக்கிடமானது. ரோஷன் அலி ஷா தர்காவின் கோபுரம் வெட்டி சாய்க்கப்பட்டது. கலவரத்தின் வீரியம் இன்னும் பெரிதாகத் தொடங்கியது. “ஒரு இந்து கொல்லப்பட்டால் நூறு முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும்” என அறைகூவல் விடுத்ததால் யோகி ஆதித்யநாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கலவரம் மாவட்டம் முழுதும் பரவி, பற்றி எரிந்தது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை ரானுவம் வந்தியிறங்கும் வரை ஹிந்து யுவ வாஹினி தொண்டர்கள், கோராக்பூர் நகர் முழுவதும் இஸ்லாமியர்களின் கடைகள் என அடையாளப்படுத்தப்பட்ட வியாபார கேந்திரங்களை எல்லாம், தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
யோகி ஆதித்யநாத், தனது வெறுப்பு பேச்சின் மூலம், அங்கு அவர் பெரும் அரசியல் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். தொடர்ந்து கோரக்பூர் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். 2014 ஜனவரி 9 ஆம் தேதி, அவரின் தொலைக்காட்சி பேட்டி நாடு முழுதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 10 முதல் 20 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் இடங்களில் கலவரம் வெடிக்கலாம். ஆனால் 20 முதல் 35 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் இடங்களில் கலவரம் மிகக்கடுமையாக நடக்கிறது. 35 சதவீதத்திற்கு மேல் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் இந்துக்கள் வாழவே முடியாது என்ற சூழலை நாம் மாற்ற வேண்டும். அவர்களை அங்கிருந்து பாகிஸ்தானுக்கு விரட்ட வேண்டும் என தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரங்களை செய்வதனால் அகிலேஷ் யாதவ் அரசு அவரின் மேல் வழக்குத் தொடர்ந்தது.
2017 இல் உ.பி.யில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவி ஏற்றதும் காட்சிகள் மாறத் தொடங்கின. 2018 பிப்ரவரி 23 ஆம் தேதி, அலகாபாத் உயர்நீதிமன்றம் உ.பி.யின் முந்தைய அரசு தொடர்ந்த வழக்கிலிருந்து யோகி ஆதித்யநாத்தை முழுமையாக விடுவித்தது. தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள் கிருஷ்ணன் முராரி மற்றும் அகிலேஷ் சந்திரகுமார், குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிப்பதற்கு இந்த வழக்கில் எந்த ஒரு நடைமுறையையும், ஒழுங்குமுறையையும் சரியாகப் பின்பற்றப்படவில்லை என தீர்ப்பு வழங்கினார்கள். சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.