கங்குல் கிழிக்கும் பொங்கலோ பொங்கல்

- ஆரூர் புதியவன்

பொருத்தமான பெயரைப்
பண்டிகைக்கு
வைத்தான் தமிழன்
பொங்கல் என்று….
பொய்மைகளுக்கெதிராக
பொங்கி எழ வேண்டிய
காலம் இன்று…

பஞ்சம் தீர்க்கும்
விவசாயிகளை
வஞ்சம் தீர்க்கும்
நெஞ்சம் கொண்டோர்
ஆட்சிக் கட்டிலெனும்
அம்ச தூளிகா
மஞ்சத்தில்…
அவர்களுக்கு
தொடர்கின்ற உரக்கம்
தொலைத்துவிட்டது இரக்கம்
அதனால்
பிரளயம் இங்கு பிறக்கும்.

நிலத்தில்
விதைப்பவர்களின்
உளத்தில்
விதைப்பட்டது
புரட்சியின் விதை
மூர்க்க ஆட்சிக்கு
இனி
முடிந்திடும் கதை…

விவசாயிகள்
தச்சர்களாய் மாறி
சர்வாதிகாரஆட்சிக்கு
சவப்பெட்டி செய்கின்றனர்.
அந்த சவப்பெட்டி
செய்ய உதவுபவை
மரச்சட்டங்களல்ல..
மத்திய
வேளாண் சட்டங்கள்

தலைநகரில் பலநாளாய்
தவங்கிடந்த
தஞ்சாவூர் உழவர்க்கு
தஞ்சமில்லை
என்ற
ஐம்பத்தாறு இஞ்சையும்
அளவில்லா நஞ்சையும்
கொண்ட
ஃபாசிச நெஞ்சை
அஞ்சாளூராம்
பஞ்சாபின்
சிங்கங்கள்
அஞ்சிட வைத்தனர்.
பேச்சு வார்த்தைகளில்
கெஞ்சிட வைத்தனர்.

விவசாயிகளுக்கு
நாங்களே
காபந்தானவர்கள் என்று
காட்ட
ஆபத்தானவர்கள் அரங்கேற்றிய
நாடகங்கள் யாவும்
அசிங்கமாகவே
முடிந்து விட்டன.

பஞ்சைபராரிகளான
விவசாயிகளின்
வேதனைக் குரல்களை
கேட்காமல்
காதுகளில்
பஞ்சை வைத்துக்கொண்ட
பாதகர்கள்
மதுரையில்
தமது
நடிகையை வைத்து
ஆடிய
பொங்கல் நாடகத்தில்
பானைகளிலும்
பஞ்சையே வைத்தனர்
பஞ்சமா பாதகர்கள்.

மங்காத தமிழகத்தின்
சிங்காரப் புகழையெல்லாம்
சங்காரம் செய்ய வந்த
பொங்காத ஜென்மங்கள்
வேளாண் சட்டங்களால்
விபரீதம் இல்லையெறு
தமிழக மண்ணில்
தண்டோரா போடுகின்றன

மூர்க்கர்களுக்கும்
மூடர்களுக்கும்
முடிவுரை எழுதும்
முரசின் ஓசையில்
மொத்தத் தமிழகமும்
யுத்தமிட எழுகிறது
சங்கிகளின் சதிக்கோட்டை
சத்தமுடன் விழுகிறது

உச்சநாட்டாமைகளின்
இடைக்காலத் தடைக்கு
மயங்காமல் போராடும்
விவசாய மாவீரர்கள்
பொங்கல் என்பதன்
பொருண்மையைக்
காட்டினர்.
சங்கிகள் வளர்க்கும்
இருண்மையை
ஓட்டினர்.
அறுவடை முடிநத’தை’
பொங்கலென்றோம் இங்கு
அநீதிகளை அறுவடை செய்யும்
விவசாய பொங்கல் கண்டோம். அங்கு
அதுவன்றோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button