உவைசிக்கான தேவை, தமிழ்நாட்டில் இல்லை

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

கடந்த வாரம் திராவிட முன்னேற்றக் கழக பிரமுகர் ஒருவர், அகில இந்திய மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிப் பிரமுகர் அஸாதுதீன் உவைஸியை ஹைதராபாத்தில் சந்தித்ததான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. ஜனவர் 6 இல் திமுக சார்பில், சென்னையில் திட்டமிடப்பட்டுள்ள சிறுபான்மையினர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

உவைஸி இம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை என திமுக தலைவர் விளக்கமளித்துள்ள போதும், உவைஸி 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உள்ள தகவல்களால் தமிழகத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணிக்கு கிடைக்க உள்ள சிறுபான்மையினரின் வாக்குகளை உவைஸியின் பிரபலம் பாதிப்பை உருவாக்கலாம் என சில அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இக்கருத்து உருவாக குறிப்பாக திமுகவின் பரமவைரியான அதிமுக பாஜகவுடனான கூட்டணியில் உள்ளது ஒரு காரணமாகும்.

இக்கருத்து குறித்து SCROLL IN  பத்திரிக்கைக்கு பேட்டியளித்த, தமிழகத்தில் இரு பெரும் முஸ்லிம் கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ” தமிழக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில கட்சிகள் இங்கிருக்கையில், வேற்று மாநிலத்திலிருந்து எவரும் இங்கு வர அவசியமில்லை “ என்று குறிப்பிட்டார்.

அவரது பேட்டியிலிருந்து ….

திமுக கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ள நிலையில், சிறுபான்மையினர் மாநாட்டுக்கு அஸதுதீன் உவைஸியை திமுக அழைத்துள்ளது குறித்து உங்களின் பார்வை என்ன ?

திமுக பிரமுகர்கள் உவைஸியை மாநாட்டுக்கு அழைக்தது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது உண்மை தான். என்றாலும், தமிழதிலுள்ள முஸ்லிம்கட்சிகள் மட்டுமே மாநாட்டில் கலந்து கொள்ளும் என திமுக தலைமை விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த சர்ச்சையை இத்துடன் முடிக்க விரும்புகிறோம்.

ஆனால், அழைப்பு விடுக்கப்பட்டது குறித்தும்; உவைஸி தமிழகத்தில் ஊடுறுவ முயற்சிப்பது குறிப்பது குறித்தும் என்ன நினைக்கிறீர்கள் ?

திமுக அழைக்கவில்லை என சொல்லியுள்ளது.

உங்கள் கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு பதிலளிக்கும் முன், தமிழகத்தின் அரசியல் சூழலை புரிந்து கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்து, உவைஸியோ அல்லது வேறு வெளிமாநிலத்து கட்சியோ இங்கு தேவையில்லை.

முதலாவது, தமிழகத்தில் இரு பெரும் முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட பல சிறு இயக்கங்கள் உள்ளன. மனிதநேய மக்கள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் இரு பெரும் கட்சிகளாகும். இரு கட்சிகளிலிருந்தும் தொடர்ந்து பாராளுமன்ற சட்டமன்ற பிரதிநிதிகள் பங்கு பெற்றுள்ளனர். தவிர, திமுக, அதிமுக அமைசரவைகளில் முஸ்லிம் அமைச்சர்கள் பங்காற்றியுள்ளனர். மேலும், முஸ்லிம்களுக்கான 3.5 % தனி இடஒதுக்கீடு உள்ளிட்ட பல விஷயங்களைப் பெற்றிருக்கிறோம். இந்நிலை வடமாநிலங்களில் இல்லை. குறிப்பாக, தமிழ்நாட்டை விட அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை.

ஆக, உவைஸி தமிழ்நாட்டுக்கு தொடர்பில்லாதவர் என்கிறீர்களா ?

நான் அதற்கு பதிலளிக்கும் முன், தமிழகத்தில் சமூக நல்லிணக்கம் சிறப்பாக பேணப்படுகிறது. முஸ்லிம் வீட்டு திருமணத்திற்கு சென்றால், அங்கு பல இந்து நண்பர்களைக் காண முடியும். இதுபோல் தான் இந்து வீட்டு திருமணங்களிலும். இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து பல தொழில்களை இங்கு சிறப்பாக செய்து வருகின்றனர். கொடிய கொரோனா பாதிப்பால் இறந்த 1600 சடலங்களை, மத வேறுபாடுகளைக் கடந்து எங்களது கட்சி தொண்டர்கள் புதைத்துள்ளனர். இந்த நல்லிணக்கம் தமிழகம் தவிர்த்து வேறு எங்கும் இல்லை.

இந்த நல்லிணக்கம், முஸ்லிம்களின் பொருளாதார கட்டமைப்பிற்கு உதவியுள்ளது. திராவிட இயக்கத்துக்கு முன்னுள்ள நீதி கட்சி காலத்திலிருந்தே, முஸ்லிம்கள் அரசியலில் பங்களித்துள்ளனர் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

திமுக, அதிமுகவிலும் கூட அதிக முஸ்லிம் தலைவர்கள் இருந்துள்ளனர். இந்த பின்னணியில் பார்த்தால், பாஜக ஆளும் உத்திரப்பிரதேசம் அல்லது பீஹார் போல இங்கு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தில் குறைவு அல்லது முஸ்லிம்களின் பிரச்சனைகள் புறந்தள்ளப்படும் நிலை எனும் கேள்விக்கே இடமில்லை.

அப்படியானால், உங்களைப்ப் போன்ற முஸ்லிம் கட்சிகளுக்கான தேவை என்ன ?

அனைத்தும் சிறப்பாக உள்ளதாக நான் கூறவில்லை. தமிழகத்திலும் கூட முஸ்லிம்கள் சந்திக்கும் சமூக பொருளாதார பிரச்சனைகள் குறித்து சுட்டிக்காட்ட வேண்டிய தேவையுள்ளது. அதை தான் நாங்கள் செய்து வருகிறோம். தனி இட ஒதுக்கீடு கூட மிகப் பெரும் போராட்டங்களுக்குப் பிறகே சாத்தியமானது. ஆனாலும், இது, வட மாநிலங்களில் உள்ளது போல் ஏன் கர்நாடகத்தில் உள்ளது மாதிரி கூட அத்தனை மோசமானதில்லை. நான் சொல்வதெல்லாம், இங்கு தமிழ் மற்றும் உருது பேசும் முஸ்லிம்களுக்கு சிறந்த பிரதிநிதித்துவம் கிடைக்கிறது.

திமுக உவைஸியை அழைத்ததன் பின்னணியில் கிஷோர் குமார் இருப்பதாக நினைக்கிறீர்களா ? பீஹார் தேர்தலில் உவைஸி 5 இடங்களை வென்றுள்ளதால், திமுகவின் திட்டங்களை வகுக்கும் கிஷோர் இந்த முடிவை எடுத்திருப்பாரா ?

இது குறித்து நீங்கள் திமுகவிடம் தான் கேட்க வேண்டும்.

தமிழக கூட்டணிக்கு திமுக தான் தலைமையேற்கிறது. உவைஸின் வருகையால், பாஜக எதிர்ப்பை வலுவாக்க முடியும் என அவர்கள் கருதினால், நாங்கள் அதனை பொருட்படுத்தப்போவதில்லை. உங்களது கேள்வி, தமிழகத்திற்கு வேற்று மாநில முஸ்லிம் கட்சி அவசியமா என்பதாகும். கேரளா மற்றும் அஸ்ஸாமில் வலுவான முஸ்லிம் கட்சிகள் உள்ளதால் தான் அங்கு போட்டியிடுவதில்லை என உவைஸியே கூறியுள்ளார். தமிழ்நாடும் அதிலிருந்து வேறுபட்டதல்ல.

உங்களது கட்சியின் ஆதரவாளர்களான இளம் முஸ்லிம்களை உவைஸி கவர்ந்துவிடுவார் என எண்ணுகிறீர்களா ? அவரது பீஹார் வெற்றியை இங்கும் அவரால் தொடர முடியும் என எண்ணுகிறீர்களா ?

மனிதநேய மக்கள் கட்சியோ; இந்திய யூனியன் முஸ்லீம் லீகோ நேற்று முளைத்தவையல்ல. நீண்ட பாரம்பரியமும், கிராமங்கள் தோறும் கிளைகளையும் உடையவர்கள். எனவே, வெளியிலிருந்து வரும் ஒருவரால் எங்களுக்கு அச்சுறுத்தல் என்பதில் உண்மை இல்லை.  இதுவரை தமிழகத்தில் இருந்த முஸ்லிம் கட்சிகளில் நாங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். முஸ்லிம்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என்பதில் உறுதியாய் உள்ளோம். மாத்திரமல்ல, திராவிட கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட போது, பிற சமூக மக்களும் எங்களை ஆதரித்துள்ளனர்.

ஆனால், இன்றய சூழலில், மாநிலங்களில் தனித்தனியே செயல்படுவதை விட, வலுவான பாஜகவை எதிர்க்க தேசிய அளவில் முஸ்லிம் கட்சி தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றதே. அது குறித்து ….

இந்த முன்மொழிவை நான் ஏற்கவில்லை. இந்தியா, பல மதங்களை மட்டும் உள்ளடக்கியதல்ல. மாறாக மதங்களையும் பிராந்திய உணர்வையும் உள்ளடக்கியது.  மனிதநேய மக்கள் கட்சி தமிழகத்திலுள்ள தமிழ் திராவிடர்கள் உள்ளிட்ட முஸ்லிம்கட்சியாகும்.

பாஜக எண்ணுவது போல், உவைஸியின் வருகை பிரிவினைக்கு முன்னெடுத்துச் செல்லும் என்ற அச்சம் நிலவுகின்றதே. அப்படி ஒரு எதிர்வினை உருவாகும் என எண்ணுகிறீர்களா ? தெலுங்கானாவில் பாஜக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதே ……..

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக சம்பந்தமில்லாத ஒன்று. தமிழகத்தில் நிலவும் சமூக நல்லிணக்கத்தை பாஜகவால், அவ்வளவு எளிதாக சிதைக்க முடியாது. அவர்கள் நெடுங்காலமாக முயற்சித்து தோற்றுள்ளனர். மீண்டும் தோற்பார்கள்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button