இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சியில் வேளாண் சட்டங்கள்…!
-மரியம்குமாரன்
ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலத்தில் 2021 ஜனவரி 1 முதல் 3 வரை, அமைதியை நோக்கி என்ற தலைப்பில் இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இளையான்குடி சமூகநீதி பார்வையில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் ஐ.பி.பி. மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கச் சகோதரர்கள் சிறந்த பங்களிப்பைச் செய்திருந்தனர்.
இஸ்லாமிய வாழ்வியலை முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள் எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் விளக்கப் படங்கள் இடம்பெற்றிருந்தன. அதை அழைப்பாளர்களும் சிறப்பாக விளக்கினர். சிறுவர் இர்ஃபான் பெரிய செய்திகளை விளக்கியது சிறப்பாக இருந்தது.
விவசாயம் குறித்த இஸ்லாமியப் பார்வையை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கத்தில் இடம்பெற்றிருந்த கருத்துப் படங்கள் உழைக்கும் வர்க்கத்தை இஸ்லாம் எந்த அளவுக்கு உயர்த்திப் பேசுகிறது என்பதோடு, விவசாயக் குடியினர்க்கு பாதுகாப்பாக இஸ்லாம் வகுத்துள்ள சட்டதிட்டங்களையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தது.
1.1.2021 அன்று ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இதைத் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் ஏராளமான சமுதாயச் சான்றோர்களும், பிறசமய பிரமுகர்களும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
நிறைவுநாள் அன்று 3.1.2021 மாலை தமுமுக பொதுச் செயலாளர் பேரா. முனைவர் ஜெ. ஹாஜாகனி, பொறியாளர் கீழை இர்ஃபான், தமுமுக மாவட்டத் தலைவர் பட்டாணி மீரான் உள்ளிட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முஸ்லிமல்லாத பெண்களும் இக்கண்காட்சியில் பெருந்திரளாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.