கால் நூற்றாண்டு கலவரக் கதைகள் அத்தியாயம் 1

-புதுமடம் ஹலீம்

2002 பிப்ரவரி 28ஆம் தேதி, அகமதாபாத் நகரின் மையத்தில் இருக்கும் நரோடா பாட்டியாவில் உள்ள குஜராத் மாநில ரிசர்வ் காவல் படையின் முகாம் அன்றைய காலைப் பொழுதில் மிக பரபரப்பாக இயங்கிக் கெண்டிருந்தது. ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டர் குர்ஷித் அகமது ஐ.பி.எஸ், தனது படை வீரர்களுக்கு அதிரடியாக உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

முந்தின தினம் கோத்ரா ரயில் நிலையத்தில், அயோத்தியிலிருந்து வந்த ரயில் தீப்பற்றி எரிந்ததில் ஆறு ரயில் பெட்டிகள் எரிந்து சாம்பாயின. 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வு, மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் பற்ற வைத்திருந்தன! இதைச் செய்தவர்கள் “பாகிஸ்தானின் கைக்கூலிகள்” என்ற செய்தி பரவியது. யார் இச்செய்தியைப் பரப்புகிறார்கள், என்று அனுமானிக்க முடியவில்லை. ஆனாலும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் சதியாகவும் இருக்கலாம் என்று சொன்னார் மாநில காவல்துறை தலைவர் கே.சக்கரவர்த்தி.

கோத்ராவில் வசிக்கும் ஒருவர், பாகிஸ்தானில் வசிக்கும் தன் நண்பரிடம் பேசும் தொலைபேசி உரையாடல் உளவுத்துறையிடம் இருந்தது. அதில், அவர் அயோத்தியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் ராம பக்தர்கள் கொல்லப்பட்டதாக தன் மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார் என்பதாக உளவுத்துறையின் சார்பில் சொல்லப்பட்டது. போனில் உரையாடியவர்கள் முஸ்லிம்கள் என்பதால் மட்டுமே, நாம் உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாது என்றாலும், நாம் சற்று கவனமாக இதைக் கையாள வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியிருந்தார் காவல்துறை தலைவர்.

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து

பிப்ரவரி 27ம் தேதி அன்று மாலை, கோத்ராவில் இந்துக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பினைப் பதிவு செய்யும் நோக்கில், மாநிலம் தழுவிய பந்த் நடத்துவதற்கு அழைப்பு விடுத்தது விஸ்வ ஹிந்து பரிஷத். அடுத்த நாள் காலை அகமதாபாத் நகர் முழுதும் போலீஸ் வாகனத்தில் காவலர்கள் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள். நகரம் முழுதும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தொண்டர்கள் காவிக் கொடியை ஏந்திக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக கோஷமிடுவதும், ஆங்காங்கு உயிர்களையும், குப்பைகளையும் எரித்துக் கொண்டும், சிலர் வீதிகளில் வியாபாரம் செய்பவர்களை கடையை மூடச் சொல்லி கட்டாயப்படுத்தியும், கலவரப்படுத்தியும் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சிகளை சில ஊடகங்களும் படம்பிடித்துக் கொண்டிருந்தனர்.

வாகனங்களில் சுற்றிக் கொண்டிருந்த காவலர்கள் இவற்றைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள், என்பதை பத்திரிக்கையாளர்களால் உணர முடிந்தது. தனது மெய்க்காப்பாளர்களுடன் தனது அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் போது குர்ஷித் அகமதுவும், இக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டுதான் வந்தார். காவலர்களை அழைத்து அவர் விசாரித்த போது, இது சம்பந்தமாக அகமதாபாத் நகர போலீஸ் கமிஷனரிடமிந்து எந்தவிதமான அறிவுரையும் அந்த நிமிடம் வரை தங்களுக்கு வரவில்லை என்றார்கள் நகர காவலர்கள்.

இது, குர்ஷித் அகமதுக்கு சற்று பதட்டத்தையே கொடுத்தது. ஏதோ பெரும் அளவில் அசம்பாவிதம் நடக்கப் போவதாகவே, அவர் உணர்ந்தார். கலவரம் செய்பவர்களின் உளவியல் சிந்தனையும், அது செல்லும் திசையையும், அனுபவமிக்க காவல் அதிகாரிகளால் அனுமானிக்க முடியும். ஆரம்ப நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்யும் சிறு சிறு கலகங்களை காவலர்கள் தடுக்கவில்லை என்று தெரிந்தாலே போதும், தங்களின் எதிர்வினையின் எல்லைகளை விரிவுபடுத்தி விடுவார்கள். தீ வைத்தல் தொடங்கி கொள்ளை அடித்தல்; வன்புணர்வு; கொலைப் பாதகம் என அவர்களின் வெறித்தனம் அதிகப்பட்டு செயல்படத் தொடங்கி விடும். பின், கலவரத்தைக் கட்டுப்படுத்துவது எளிதான காரியமாக இருக்காது.

குர்ஷித் அகமது நினைத்தது போலவே அன்று மாலை நகரம் முழுவதும் கலவரக் காடாக மாறியது. முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும் நொறுக்கப்பட்டன. அவரின் அலுவலகம் இருக்கும் நரோடா பாட்டியாவில் மட்டுமே 96 நபர்கள் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒருசிலரைத் தவிர அனைவரும் முஸ்லிம்கள்.

காங்கிரஸிடமிருந்து பட்டேல்களைப் பிரித்த பாஜக

1984ஆம் ஆண்டில், குஜராத் மாநில முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் ஆர்எஸ்எஸ் கிளர்ச்சியைத் தூண்டியது. காங்கிரஸ், இந்துக்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார்கள் என்ற வதந்தி மாநிலம் முழுதும் ஆர்எஸ்எஸ்ஸால் கட்டமைக்கப்பட்டது. குஜராத்தின் பெரும்பான்மை சாதியினரான பட்டேல்களை கோபப்படுத்தும் எல்லா செயல்களையும் ஆர்எஸ்எஸ் செய்தது. அவர்களின் நோக்கம் பட்டேல் மற்றும் உயர்சாதி இந்துக்களின் காங்கிரஸ் ஆதரவு மனநிலையில் மாற்றம் காண வேண்டும் என்பதாகத் தான் இருந்தது.

1995ஆம் ஆண்டில், அதற்கான பலனை பாஜக முழுமையாகக் கண்டது. கேசுபாய் பட்டேலின் தலைமையில் பாஜக ஆட்சியில், குஜராத்தை முழுமையாக காவிமயமாக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 20 சதவீதத்திற்கு மேல் உள்ள பட்டேல் சாதியினரின் முழு ஆதரவும் பாஜகவின் பக்கம் மாற்றம் கண்டது அப்போதுதான்.

ஸ்வாமி நாராயணன்! குஜராத் பட்டேல் சமூகத்தைச் சார்ந்த சாமியார். இந்துமத புத்துயிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தார். முஸ்லிம்களை மேடை தோறும் திட்டுவது என்பது அவரின் பிரச்சாரத்தின் வழக்கமாக இருக்கும். சர்தார் பட்டேலுக்கு காங்கிரஸ் உரிய மரியாதையைத் தரவில்லை என அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். அதற்கான பலன் பெரும்பான்மை பட்டேல் சமூகம் பாஜகவின் பக்கம் சாயத் தொடங்கியது.

2001ஆம் ஆண்டில் கேசுபாய் பட்டேலை விட சிறப்பாக செயல்படுவார் என ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக செயல்பட்டு வந்த ஒருவரை குஜராத்தின் முதல்வராகக் கொண்டு வந்தார்கள். அவர்தான் நரேந்திர மோடி. அகமகிழ்ந்து போனார்கள் நாடு முழுதும் இருக்கும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள். அதன் பின்பு, அரசாங்கத்தின் கொள்கைகளும்; செயல்படுத்தும் விதமும் மாற்றம் காண ஆரம்பித்தன. மோடியின் தலைமையில் குஜராத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிரிமினல்கள், ரவுடிகள் என பலரும் தங்களின் நடவடிக்கைகளைக் கைவிட்டனர் என்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள் பலரும் பாஜகவின் ஆதரவு நிலை எடுத்தனர். சிலர் நேரடியாக பாஜகவில் இணைந்தனர்..

மோடி 500 முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தாரா ?

வீட்டிலிருந்து குர்ஷித் அகமது ஐ.பி.எஸ்.க்கு, அன்று மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சுமார் 500 முஸ்லிம் குடும்பத்தினர் கலவரக் கும்பலிடமிருந்து தப்பித்து மாநில ரிசர்வ் போலீஸ் முகாமிற்கு உள்ளே வருவதற்கு அடைக்கலம் கேட்கிறார்கள், அவர்களை அனுமதிக்கலாமா? என குர்ஷித் அகமதுவின் அனுமதிக்கு வேண்டி போன் செய்திருந்தார்கள்.

பொதுவாக எஸ்.பி.பி.எப். பட்டாலனின் முகாமிற்கு வெளி ஆட்கள் வந்து தங்குவதற்கு அனுமதி இல்லை என்றாலும், குர்ஷித் அகமதுவுக்கு போன் செய்தார் முகாமின் டி.எஸ்.பி. குரைஷி. இரண்டு அதிகாரிகளும் துரிதமாக முடிவெடுத்து அத்தனைப் பேர்களையும் முகாமில் தங்க வைத்தார்கள். இரு அதிகாரிகளும், முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்ற பதட்டமும் அவர்களுக்கு அப்போது இருந்தது.

கலவரம் நடந்த இக்கட்டான சூழ்நிலையில், தங்களின் அரசு 500 முஸ்லிம் குடும்பத்தினரை காப்பாற்றியதாக மேடை தோறும் கையை உயர்த்தி முழங்கினார் குஜராத் முதல்வர் மோடி. நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் அதை ஆட்சியின் சாதனையாக பயன்படுத்துவது மோடியின் ஸ்டைல்.

தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்

அகமதாபாத் நகரம் முழுதும் வன்முறை வெறியாட்டத்தில் போர்க்களம் போல் காட்சி தந்தது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்கள் அதற்குப் பகரமாக தங்களின் கோபத்தைக் காட்டுவதற்கு அனுமதிக்கும்படி காவல்துறை தலைவர் தன்னிடம் போனில் சொன்னதாக விசாரணைக் கமிஷன் முன்பாக பிரமாண வாக்குமூலம் கொடுத்தார் அகமதாபாத் காவல்துறை ஆணையர் பி.சி.பட்.

பெரும்பாலான இந்துக்களுக்கு மத்தியில் வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு இருந்ததை ஊடகங்கள் வீடியோ காட்சிகளாக காட்சிப்படுத்தி இருந்தன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தரியாபூர், ஜீஹாபுரா போன்ற பகுதிகளில் வன்முறை கட்டுக்குள் இருந்தது.

நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராகப் பதவி ஏற்றது முதல் அரசு அதிகாரிகளின் இயல்பான ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட்டது. திரைமறைவில் இயங்கும் மாஃபியா வலைபின்னலில் அவ்வரசு உருவாகத் தொடங்கி இருந்தது.

இந்திய ஜனநாயகத்தில் ஒரு அரசு நினைத்தால் சட்டத்திற்கு உட்பட்டே கலவரங்களை உருவாக்க முடியும் என்பதற்கு 2002 பிப்ரவரி 28 அன்று நடந்த அகமதாபாத் கலவரமும் அதன் பின்னணியும் சான்று பகருகின்றன.

( காட்சிகள் இன்னும் விரியும் …. காத்திருக்கவும். )

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button