விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 30

டாக்டர் சையது முகம்மது

உத்தரப்பிரதேச காஜிப்பூர் மாவட்டத்தில் உள்ள சயித்பூர் பித்ரி என்னும் ஊரில் செல்வச் செழிப்பு மிகுந்த ஜமீன்தாரி குடும்பத்தில் 1889ஆம் ஆண்டு பிறந்தவர் டாக்டர் சையது முகம்மது. இந்தியாவில் அலிகர், இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்களில் படித்து பி.எச்டி. பட்டமும், பார் அட் லா பட்டமும் பெற்ற அவர் சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலமுறை சிறைவாசம் அனுபவித்தவர். சிறந்த அரசியல்வாதியாக விளங்கிய அவர் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

டாக்டர் சையது முகம்மது 1917ஆம் ஆண்டு ஹோம் ரூல் இயக்கத்தில் சேர்ந்தார். 1919ஆம் ஆண்டில் கிலாஃபத் இயக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் சேர்ந்த பின் அவர் வக்கீல் தொழிலைத் துறந்தார். மத்திய கிலாஃபத் குழுவின் செயலாளராக அவர் பணியாற்றினார். ‘கிலாஃபத் இயக்கமும் இங்கிலாந்தும்’ என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை எழுதினார். உலக இஸ்லாமியத் தலைவரான துருக்கி சுல்தானுக்கும் அவருடைய கிலாஃபத்துக்கும் இடையூறு ஏற்படுத்த மாட்டோம் என்று முதல் உலகப் போரின் போது இங்கிலாந்தின் சார்பில் உறுதி யளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்று டாக்டர் சையது முகம்மது அந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.1942ஆம் ஆண்டு நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்து கொண்டதற்காக டாக்டர் சையது முகம்மது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையானவுடன் அவர் வைசிராய்க்கு ஒரு கடிதம் எழுதினார். காந்திஜியுடன் பிரிட்டிஷார் பேச்சு நடத்தி, இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்க வேண்டும் என்று அவர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

முதியோர் கல்வித் திட்டத்தின் முன்னோடி

சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலமுறை சிறைவாசம் அனுபவித்த டாக்டர் சையது முகம்மது, காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக 1923ஆம் ஆண்டிலும், பின்னர் 1929 – 36 ஆகிய காலத்திலும் இருமுறை பதவி வகித்தார். 1937ஆம் ஆண்டில் பீகாரில் அமைந்த முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையில் அவர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலத்தில் முதியோர் கல்வித் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். ஆகவே, முதியோர் கல்வித் திட்டத்தின் முன்னோடி என்று அவர் போற்றப்பட்டார்.

வெளியுறவுத்துறை துணை அமைச்சர்

பீகாரில் இரண்டாவது முறையாக காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்ட போது, டாக்டர் சையது முகம்மது போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நடைபெற்ற இரண்டு பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டு டாக்டர் சையது முகம்மது வெற்றி பெற்றார். மத்திய அரசின் வெளியுறவுத்துறை துணை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். அவர் மேற்காசிய நாடுகள் பலவற்றுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாண்டுங் மாநாட்டில் அவர் பங்கு கொண்டார்.

ரவ்சினி என்ற பெயரில் ஹிந்தி,-உருது ஆகிய இரு மொழிகளில் வெளிவந்த ஒரு பத்திரிகையை இவர் தொடங்கினார்.

1964ஆம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்கள் டாக்டர் சையது முகம்மதுவுக்குப் பெரும் வேதனையைத் தந்தது. ஆகவே, வகுப்பு ஒற்றுமையை ஏற்படுத்த அவர் தனி அமைப்பு ஒன்றை உருவாக்கினார்.

‘ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத்’ என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டது. வகுப்பு ஒற்றுமை ஏற்படுத்துவதும், வகுப்புக் கலவரங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதும் அதன் நோக்கமாக இருந்தது. ஆனால், 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது உத்தரப்பிரதேச மஜ்லிஸ் கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆகவே, அந்த அமைப்பிலிருந்து டாக்டர் சையது முகம்மது விலகினார்.

டாக்டர் சையது முகம்மது ஜமீன்தாரி குடும்பத்தில் பிறந்தவரானாலும், ஜமீன்தாரி ஒழிப்பை ஆதரித்து 1939ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்தார். கூட்டுப் பண்ணை விவசாய முறையை அவர் வற்புறுத்தினார். குடிசைத் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வந்தார். நிலமில்லாத விவசாயிகளுக்கு வறட்சிக் காலத்தில் தாராளமாக உதவி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வார்தா கல்வித் திட்டத்தை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். 1971ஆம் ஆண்டு டாக்டர் சையது முகம்மது காலமானார்.

1937ஆம் ஆண்டில் பீகாரில் அமைந்த முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையில் அவர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலத்தில் முதியோர் கல்வித் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். ஆகவே, முதியோர் கல்வித் திட்டத்தின் முன்னோடி என்று அவர் போற்றப்பட்டார்.­­­­­­­­­­­­­­­­­­

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button