விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 29

வி.என்.சாமி

ஹுஸைனி பேகம் என்னும் அஜிஜான் பாய்

மொகலாயச் சக்கரவர்த்தி பகதூர் ஷாவின் மனைவி ஜீனத் மஹல், அயோத்தி மன்னரின் மனைவி ஹஜரத் மஹல், ஜான்சி ராணி லட்சுமிபாய் போன்ற மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றனர். ஆனால், சாதாரண குடும்பத்தில் பிறந்த அஜிஜான் என்னும் மங்கையின் வீரதீரச் செயல்கள் வரலாற்று ஏடுகளில் அவ்வளவாக இடம்பிடிக்கவே இல்லை. 1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது அவர் சாகஸம் புரிந்து சாதனை படைத்துள்ளார்.

ஹ§ஸைனி பேகம் என்னும் பெயர் கொண்ட அப்பெண்மணி உத்தரப்பிரதேசம் கான்பூரில் வசித்தவர். தன்னை ஒரு நாடோடிப் பெண்ணாகவே சித்தரித்துக் கொண்டு அஜிஜான் என்னும் பெயரைச் சூட்டிக் கொண்டார்.

பிரிட்டிஷாரை எதிர்த்துப் புரட்சி செய்த இந்திய சிப்பாய்களுக்காக எதிரிகளை வேவு பார்க்கும் பணியில் அவர் சிறிதுகாலம் ஈடுபட்டார். பின்பு சிப்பாய்ப் புரட்சியில் ஈடுபட பெண்களைத் திரட்டினார்.

அப்பெண்களுக்குத் தாமே தலைமை வகித்துப் புரட்சியில் ஈடுபட்டார். சாவைச் துச்சமாக மதித்த அவர் எப்பொழுதும் துப்பாக்கியும் கையுமாகவே காட்சியளித்தார். ஆங்கிலேயருக்கு அடிமையாக வாழ்வதை விடச் சாவதே சிறந்தது என்று படை வீரர்களுக்குப் போதித்தார்.

வெளியிடப்பட்ட நூல்

ஆங்கிலேய எழுத்தாளர் சர். ஜார்ஜ் டிரவலின் என்பவர் எழுதிய புத்தகத்தில் அஜிஜான் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1857ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதியன்று பேஷ்வா நானா சாகிப் ஹிந்தி மொழியிலும் உருது மொழியிலும் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். பிரிட்டிஷ் அடக்குமுறையாளர்களிடமிருந்து தங்கள் மதத்தையும் நாட்டையும் காப்பாற்ற ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சுதேசி ராணுவத்தில் சேர வேண்டும் என்று அந்த அறிவிப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அஜிஜான் சிப்பாய்க்குரிய சீருடை அணிந்து கொண்டார். வீடு வீடாகச் சென்று சுதேசி ராணுவத்திற்குப் பெண்களைச் சேர்த்தார். அஜிஜான் திரட்டிய பெண்கள் ராணுவப் பிரிவு பற்றி ‘நானாசாகிப் பேஷ்வாவும் அவர் நடத்திய சுதந்திரப் போராட்டமும்’ என்னும் தலைப்பில் ஆனந்த் ஸ்வரூப் மிஸ்ரா என்பவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். போரில் காயமடைந்த சுதேசி சிப்பாய்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல், வீடு வீடாகச் சென்று சுதேசி ராணுவ வீரர்களுக்குப் பழங்களும் இனிப்புகளும் சேகரித்து வந்து கொடுத்தல், புரட்சி நிலவரம் பற்றி அவ்வப்போது மக்களிடம் எடுத்துச் சொல்லுதல் ஆகிய பணிகளைப் பெண்கள் ராணுவப் பிரிவினர் திறம்படச் செய்தனர் என்று அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், சுதேசி ராணுவத்தில் சேர வேண்டும் என்று அவர்கள் விடுத்த அழைப்புக்கு நல்ல பலன் கிடைத்தது. ஏராளமானவர்கள் ராணுவத்தில் சேர முன்வந்தார்கள் என்றும் அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அரசின் செய்தித் தகவல் தொடர்புத்துறை சார்பில் அந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

வீரதீரச் செயல்கள்

அஜிஜான் தலைமையில் பெண்கள் ராணுவப் பிரிவினர் சீருடையில் குதிரை மீது அணிவகுத்துச் சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அந்த அணிவகுப்பைப் பார்வையிட்ட மக்கள் ‘அஜிஜான் நீடூழி வாழ்க’ என்று வாழ்த்துக் கோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர். நானக் சந்த் என்பவர் 1857ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று தமது நாட்குறிப்பில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

“இரவு பகல் என்று எந்நேரமும் அஜிஜான் ராணுவச் சீருடையிலேயே காட்சியளித்தார். சுதேசி ராணுவத்தில் துப்பாக்கி ஏந்திய படைப் பிரிவு வீரர்களுக்காக எதிரிகளின் நடமாட்டம் பற்றி உளவறிந்து தகவல் தெரிவித்து வந்தார்.

உயிரையும் துச்சமாக மதித்து அவர் புரிந்த சாகஸங்களைக் கண்டு அசிமுல் லாகான் பிரமித்துப் போய்விட்டார். பேஷ்வா நானா சாகிபின் வலதுகரமான அவர் அஜிஜானின் வீரத்தையும் தியாகத்தையும் பெரிதும் பாராட்டியுள்ளார்.

இவ்வாறு அந்த நாட்குறிப்பில் நானக் சந்த் எழுதியுள்ளார்.

சிப்பாய்ப் புரட்சியின்போது கான்பூரில் உள்ள கலகக்காரர்கள் பற்றிய பட்டியல் ஒன்றைக் கர்னல் வில்லியம் என்ற பிரிட்டிஷ் அதிகாரி தயாரித்தார். அந்தப் பட்டியலில் அஜிஜான் பெயர் முதலிடத்தில் இருந்தது. கான்பூரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ஆங்கிலேய ராணுவ அதிகாரி வில்லியம் முன்பு சாட்சியமளித்தார். அஜிஜான் ‘லுர்கி மஹால்’ என்னும் இடத்தில் வாழ்ந்தார். பேஷ்வா நானாசாகிப் ராணுவப் படையுடன் அவருக்கு நேரடியாகவே தொடர்பு இருந்தது. அஜிஜானும் அவரது படையைச் சேர்ந்த பெண்களும் எப்பொழுதும் ராணுவச் சீருடையிலேயே காட்சியளித்தனர். அவர்கள் ஆயுதங்களையும் ஏந்தி இருந்தனர்.

வீரமங்கை

சிப்பாய்ப் புரட்சி ஓய்ந்தபிறகு, பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஆங்கிலேயர் ஈடுபட்டனர். அஜிஜான் கைது செய்யப்பட்டு, ஆங்கிலேய தளபதி ஜெனரல் ஹாவ்லக் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். ‘இவ்வளவு அழகான பெண் ராணுவச் சீருடை அணிந்து, கையில் ஆயுதம் ஏந்திப் போரிட்டாள் என்று சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை’ என்று அவர் கூறினார். கல்மனம் படைத்த ஹாவ்லக், அஜிஜானுக்கு இரக்கம் காட்டினார். ‘நீ உன்னுடைய குற்றங்களை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டால் விடுதலை செய்கிறேன்’ என்று ஹாவ்லக் கூறினார். ‘உங்கள் நிபந்தனைகளை நான் ஏற்க மாட்டேன்’ என்று அஜிஜான் கூறியதும், ‘நீ என்னதான் விரும்புகிறாய்?’ என்று ஹாவ்லக் கேட்டார். ‘ஆங்கிலேய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். எங்கள் தேசத்திற்குச் சுதந்திரம் வேண்டும். அதுவே என் விருப்பம்’ என்று அஜிஜான் கூறினார்.

இதைக் கேட்டதும் ஜெனரல் ஹாவ்லக் வெகுண்டான். தன்னுடைய படை வீரர்களை அழைத்து, அஜிஜானைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துமாறு கட்டளையிட்டான். உடனே வீரர்கள் இருவர் அஜிஜானை நோக்கிச் சுட்டார்கள். “நானாசாகிப் நீடூழி வாழ்க” என்று கூறிக்கொண்டே ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து, தன் இன்னுயிரைத் தியாகம் செய்தார் அஜிஜான். இவரது தியாகத்தை கான்பூர் மக்கள் இன்னும் நினைவுக் கொள்கின்றனர். இவரது பெயர் கான்பூரில் உள்ள முக்கிய சாலைக்கு சூட்டப்பட வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை கிடப்பிலேயே உள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button