விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 6
வி.என்.சாமி
ஆற்காடு நவாப் பரம்பரையைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் பரூக்கி. மௌலானா முஹம்மதலி சகோதரர்கள் மற்றும் எஸ்.சீனிவாச அய்யங்கார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட அவர், 1921ஆம் ஆண்டு சிறைவாசம் அனுபவித்தார். ‘ஆஸாத் ஹிந்த்’ என்னும் வாரப் பத்திரிகை மற்றும் ‘முஸல்மான்’ என்னும் உருது நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
ஆற்காடு நவாப் பரம்பரையில் 1893ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் அப்துல் லத்தீப் பரூக்கி. இவருடைய தந்தை நவாப் அப்துல் வஹாப் கான் முதலாவது ஆற்காடு இளவரசரின் பேரன். ஆரம்பத்தில் உருது, அரபு மற்றும் பாரசீக மொழிகளில் கல்வி கற்றார்.
சென்னையில் பல்லாவரம் செயின்ட் தாமஸ் பள்ளியில் சேர்ந்து ஆங்கில வழிக் கல்வி பயின்றவர் அப்துல் லத்தீப் பரூக்கி. அங்கு பணியாற்றி வந்த லத்தீன் மொழி ஆசிரியர் ஹைலிக்ஸ் என்பவரை அவர் தமது கல்வி வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார். தனது தாய் மாமா மௌலானா நவாப் தாஜ்மல் ஹ§ஜவிர்கான் பகதூர் மற்றும் ஷம்சுல் உலமா மௌலானா அப்துல் ரஹீம்ஷா ஷதிர் ஆகியோரை மார்க்க வழிகாட்டிகளாக வரித்துக் கொண்டார். அரசியல் துறையில் மௌலானா அலி சகோதரர்களையும் எஸ்.சீனிவாச அய்யங்காரையும் தனது வழிகாட்டிகளாகக் கொண்டார்.
தேசிய இயக்கத்தில் ஈடுபாடு
தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு 1921ஆம் ஆண்டு அந்த இயக்கத்தில் அப்துல் லத்தீப் பரூக்கி சேர்ந்தார். அஹிம்சை நெறியில் போராடிச் சுதந்திரம் பெறவேண்டும் என்ற அழுத்தமான நம்பிக்கை கொண்ட அவர் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்தார். ஆனால், அந்த இயக்கத்தின் போது பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை அவர் எதிர்த்தார்.
ஓய்வூதியம் நிறுத்தம்
நவாப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் ஓய்வூதியம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை பிரிட்டிஷ் அரசு நிறுத்திவிட்டது.
1921ஆம் ஆண்டு கிலாஃபத் இயக்கத்தில் ஈடுபட்ட அப்துல் லத்தீப் பரூக்கி, சென்னை நகரில் வேலை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்தார். அதனால் பிரிட்டிஷ் ஆட்சி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்து விடுதலையான பின்பு 1926ஆம் ஆண்டு சுயராஜ்ய கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் சார்பில் மத்திய சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது எந்த நிகழ்ச்சியையும் மனிதநேயத்தோடும் மார்க்கச் சட்டங்களின் கண்ணோட் டத்தோடும் விமர்சித்தார்.
1929ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண முஸ்லிம் மாநாட்டின் செயலாளராக அப்துல் லத்தீப் பரூக்கி பணியாற்றினார். “இப்போதுள்ள சூழ்நிலையில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, தங்கள் உரிமைகள் பற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும்” என்று அந்த மாநாட்டில் பேசுகையில் அவர் கூறினார்.
சட்ட மேலவை உறுப்பினர்
அப்துல் லத்தீப் பரூக்கி பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சென்னை ஜமியத் அஹ்ரரின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1921ஆம் ஆண்டு ஜமியத் உலமாவின் தலைவராகப் பதவி வகித்தார். 1923ஆம் ஆண்டு நகர காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும், ஆந்திர மாகாண காங்கிரஸ் கமிட்டியின் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். 1944 முதல் 1947ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண லீக் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்தார்.
சென்னை சட்ட மேலவை உறுப்பினராக 1947ஆம் ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1922ஆம் ஆண்டு ‘ஆஸாத் ஹிந்த்’ என்னும் உருதுமொழி வாரப் பத்திரிகையில் ஆசிரியராக அவர் பணியாற்றினார். ஜாமீன் பணம் கட்ட வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி உத்தரவிட்டதால், அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டது. பின்னர் ஆங்கிலம், தமிழ் மற்றும் உருது மொழிகளில் வெளியிடப்பட்ட ‘முஸ்லிம்’ என்னும் பத்திரிகைகளில் அவர் ஆசிரியராகப் பணியாற்றினார். 1945ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘முஸல்மான்’ என்னும் உருதுமொழிப் பத்திரிகையில் ஆசிரியராக அவர் பணியாற்றினார். தனது 80வது வயதிலும் அவர் அந்தப் பத்திரிகையில் பணியாற்றினார். முஸல்மான் பத்திரிகை இன்னும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் லத்தீப் பரூக்கி, சென்னை பல்லாவரத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். அவர் தனது 80 வயதில் பல்லாவரத்தில் பேருந்து ஏறி, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ‘முஸல்மான்’ பத்திரிகை அலுவலகத்திற்கு வருவதை நானே (வி.என். சாமி) நேரில் பார்த்திருக்கிறேன். அந்தத் தள்ளாத வயதில் யாருடைய உதவியுமின்றி அவர் பேருந்தில் வந்து பத்திரிகைக்குத் தலையங்கம் எழுதிக் கொடுப்பார். பின்னர் பேருந்திலேயே பல்லாவரத்துக்குத் திரும்பி விடுவார்.
‘தாமிர பத்திர’ விருது பெற்றவர்
அப்துல் லத்தீப் பரூக்கி, சைவ உணவு ஆதரவாளர். பரோபகாரி. இஸ்லாத்தை நன்கு கற்று போதித்தவர். மேலை நாட்டுக் கல்வி முறையை ஆதரித்தவர். தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டவர்.
1977ஆம் ஆண்டு சென்னை ராஜாஜி மண்டபத்தில் தமிழ் மாநில அஹிம்சை மாநாடு நடைபெற்றது. ‘புனித குர்ஆனில் அன்பு நெறி’ என்னும் தலைப்பில் அந்த மாநாட்டில் அவர் உரை நிகழ்த்தினார். சுதந்திரப் போராட்டத் தியாகியான அவருக்கு ‘தாமிர பத்திர’ விருது வழங்கப்பட்டது.