விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 5

வி.என். சாமி

கிழக்கு பஞ்சாபில் குருதாஸ்பூர் மாவட்டத்திலுள்ள படாலா என்னும் ஊரில் 1895ஆம் ஆண்டு மஜ்ஹர் அலி அஜ்ஹர் பிறந்தார்.

பாரமுல்லாவில் மிகவும் புகழ் வாய்ந்த வஹாப்பாரா குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை அப்துல்லா, முஸ்லிம் சமுதாயத்தின் மிக முக்கியமான தலைவராக விளங்கினார். அவர் தனது மகனின் அரசியல் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்து உதவினார்.

மஜ்ஹர் அலி அஜ்ஹர், லாகூர் அரசினர் கல்லூரியில் 1915ஆம் ஆண்டில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் அந்த ஊரிலேயே சட்டப் படிப்பு படித்துத் தேறி, 1917ஆம் ஆண்டில் எல்.எல்.பி. பட்டம் பெற்றார்.லாகூரில் 1918ஆம் ஆண்டில் மஜ்ஹர் அலி அஜ்ஹர் தமது வக்கீல் தொழிலைத் தொடங்கினார். ஆனால், அவருக்கு கிலாஃபத் இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டதால் 1919ஆம் ஆண்டில் அந்த இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தார். சிறைத் தண்டனை முடிந்து விடுதலையான அவர் மீண்டும் அதே இயக்கத்தில் கலந்து கொண்டதற்காக 1920ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

காங்கிரஸ் மேடையில் அஹ்ரர் கட்சி தொடக்கம்

அஹ்ரர் என்னும் கட்சியை மஜ்ஹர் அலி அஜ்ஹர் உருவாக் கினார். காங்கிரஸ் கட்சி நடத்திய மாநாட்டு மேடையிலேயே இந்தக் கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. முதலில் இந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர் பின்பு அதன் தலைவரானார்.


1924ஆம் ஆண்டு முதல் 1926ஆம் ஆண்டு வரை பஞ்சாப் சட்டசபையில் அவர் உறுப்பினராக இருந்தார். மீண்டும் 1934 முதல் 1945 வரை அவர் சட்டசபை உறுப்பினராக இரண்டாவது முறை பதவி வகித்தார்.

6 ஆண்டு சிறைத் தண்டனை

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் பஞ்சாப் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் சிறிது காலம் அவர் பணியாற்றினார். அப்போது ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு அவர் கைதானார். அவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பார்வர்ட் பிளாக்கில்

1946ஆம் ஆண்டு அஹ்ரர் கட்சியிலிருந்து விலகிய மஜ்ஹர் அலி அஜ்ஹர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் சேர்ந்தார். அந்த ஆண்டு பஞ்சாப் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். அதன்பின் அரசியலை விட்டு அவர் விலகினார்.

பின்தங்கியவர்களின் முன்னேற் றத்திற்கு உதவுவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். எல்லோருக்கும் தொடக்கக் கல்வி அளிக்க வேண்டும் என்பதிலும் ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்பதிலும் அதிக அக்கறையுடன் உழைத்தார். மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தினார். வாழ்நாள் எல்லாம் பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்த அவர், பாகிஸ்தான் உதயமான போது 1947ஆம் ஆண்டு அங்கு குடியேறினார். அங்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1952ஆம் ஆண்டு அவர் காலமானார்.

குறிப்புகள்:

Punjab Legislative Council Debates, 1925-1936.
Chaudhuri Khaliquzzaman, Pathway to Pakistan,
Biographical Encyclopedia of Pakistan.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button