மார்க்க கருத்து வேறுபாடுகள் சமுதாய பிளவுக்கு காரணமாகலாமா? கருத்தரங்கு

“மார்க்க கருத்து வேறுபாடுகள் சமுதாய பிளவுக்கும் பகைமைக்கும் காரணமாகலாமா?“ என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 23 அன்று சென்னை பிரஸ்டன் இன்டர்நேஷனல் கல்லூரியின் இஸ்லாமிய அறிவியல் (தமிழ்) துறையின் சார்பாக விறுவிறுப்பான ஆய்வரங்கம் நடைபெற்றது.

இந்த ஆய்வரங்கில் தமிழகத்தின் பிரபல ஆலிம்களும் மதரஸா முதல்வர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.துவக்கம்

கல்லூரி பேராசிரியர் கவுஸ்கான் உமரீ அவர்களின் திருக்குர்ஆன் முழக்கத்துடன் ஆய்வரங்கம் துவங்கியது.

நிகழ்ச்சிக்கான நோக்கத்தை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்களான தமிழ்துறைத் தலைவர் முனைவர். எம். முஜீபுர்ரஹ்மான் உமரீ அவர்களும் சிறப்புப் பேராசிரியர். எம். முஜீபு ரஹ்மான் உமரீ அவர்களும் தெளிவுபடுத்தினார்கள். முஸ்லிம் சமுதாயம் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்பதையும் அறிஞர்களிடையே ஒற்றுமை கருத்தியல் உறுவாக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்கள்.

ஒற்றுமையை நோக்கி. . .

இந்த ஆய்வரங்கத்திற்காக தமிழகம் முழுவதிலிருந்தும் மார்க்க அறிஞர்கள் எழுதிய 30 ஆய்வுக் கட்டுரைகள் “ஒற்றுமையை நோக்கி“ என்ற தலைப்பில் இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்டன. அதன் முதல் பிரதியை பேராசிரியர் முனைவர். எம். ஹெச். ஜவாஹிருல்லா அவர்கள் வெளியிட திண்டுக்கல் யூசுஃபிய்யா அரபிக் கல்லூரி முதல்வர், மௌலானா. முஹம்மது அலி ஹஜ்ரத் அவர்களும் சென்னை கொளத்தூர், அஷ்ரபிய்யா கல்லூரி முதல்வர். மௌலான யூசுஃப் ரஷாதி ஹஜ்ரத் அவர்களும் உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் நிறுவனர். ஜனாப். காக்கா சையீத் உமரீ ஸாஹிப் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

உமராபாத் ஜாமிஆ தாருஸ் ஸலாம், நிறுவனர், காகா ஸயீது உமரீ சாஹிப் அவர்கள் தனது ஆய்வுரையில் கருத்து வேறுபாடுகள் என்பது எதார்த்தமானதாகும். அதனை மார்க்கமும் அங்கீகரிக்கிறது. கருத்துவேறுபாட்டை மறுப்பது எதார்த்ததத்திற்கு மட்டும் மாற்றமல்ல! மாறாக அது மார்க்கத்திற்கே மாற்றமாகும். இதுவே நமது இமாம்கள் மற்றும் முன்னோர்களின் நிலைபாடு! கருத்துவேறுபாடு என்பது ஒரு போதும் பகைமைக்கும் பிளவுக்கும் காரணமாகிவிடக் கூடாது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து தொடர்ந்து ஷேக் அனீசுர்ரஹ்மான் உமரீ அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அதில் அரபு மொழியின் அவசியத்தையும் உலமாக்கள் தங்களிடையே கல்வித் தொடர்பை ஏற்படுத்தக் கொள்வதின் அவசியத்தையும் கூறினார்கள்.

நெறியாளர்கள்!

தொடர்ந்து ஆய்வுக் கட்டுரை சமர்த்த அறிஞர்களுடனான கருத்துப் பதிவு நிகழ்ச்சி தொடங்கியது. அந்த சபையின் நெறியாளர்களாக ஆறு மூத்த அறிஞர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.
(1)ஷேக். ஹாபிழ். ஹஃபீசுர் ரஹ்மான் ஆஸமீ உமரீ, மதனீ (முதல்வர், ஜாமிஆ தாருஸ் ஸலாம், உமராபாத்)
(2) முனைவர். பி.எஸ். மஸ்வூது ஜமாலி (முதல்வர், புகாரிய்யா ஆலிம் அரபிக் கல்லூரி, வண்டலூர், சென்னை)
(3) அப்ஸலுல் உலமா. ஏ. முஹம்மது கான் பாஸில் பாக்கவி, (மேலளாய்வாளர், ரஹ்மத் பதிப்பகம், சென்னை)
(4) முனைவர். ஆர், கே. நூர் முஹம்மது உமரீ, மதனீ (முதல்வர், அல்அதான் அரபிக் கல்லூரி, சென்னை)
(5) ஷேக். எஸ் கமாலுத்தீன் ஜமாலி, மதனீ (நிறுவனர். ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ், தமிழ்நாடு)
(6) மௌலவி. எம். முஹம்மது இப்ராஹீம் பாக்கவி (பேராசிரியர், காஷிஃபுல் ஹ§தா அரபிக் கல்லூரி, பூந்தமல்லி, சென்னை)

கட்டுரையாளர்கள்

கருத்தொற்றுமையை உருவாக்குதற்காக செயற்திட்டங்கள் பற்றி கட்டுரையாளர்களிடம் மௌலவீ. கான் பாக்கவி அவர்கள் கேட்க, கீழ்காணும் உலமாக்கள் அனைவரும் தங்களின் மிகச்சிறந்த கருத்துக்களை பதிவு செய்தனர்.

1) மௌலவி.முஹம்மது காசிம்பாக்கவி, மதுரை.
2) மௌலவீ.முஹம்மது யூசுஃப் மதனீ, சென்னை.
3) மௌலவீ.நெய்னார் முஹம்மது பாக்கவி,சேலம்.
4) மௌலவீ. முஹம்மது அலிஜின்னா, சிராஜீ – சென்னை
5) மௌலவீ. நூஹ் மஹ்ளரீ – நாகர்கோவில்
6) மௌலவீ. ஹபீப் முஹம்மது நத்வீ – பள்ளப்பட்டி
7) மௌலவீ. யூசுஃப் தாவூதி – பள்ளப்பட்டி
8) மௌலவீ. ஷா உமரீ- உடன்குடி
9) ஷமீமுல் இஸ்லாம் – சென்னை
10) மௌலவீ. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி – சென்னை
11) மௌலவீ. சலாஹ§த்தீன் மளாஹிரி – காயல்பட்டணம்.
12) மௌலவீ. மன்சுர் இலாஹி யூசுஃபீ – சென்னை
13) முனைவர். அப்துஸ் ஸமது நத்வீ, – சென்னை
14) மௌலவீ. அப்துர்ரஹ்மான் மன்பஈ, – தொண்டி
15) மௌலவீ. அமீன் அஹ்மது உமரீ மதனீ – சென்னை
16) முஃப்தீ கலீமுல்லாஹ் உமரீ மதனீ – உமராபாத்

சிறப்பு விருந்தினர்கள்!

அதனைத் தொடர்ந்து அரபு மதரஸாக்களின் முதல்வர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பத்ரிய்யா அரபிக் கல்லூரி முதல்வர்
மௌலவீ. சதகத்துல்லாஹ் உலவீ ஹஜ்ரத் அவர்கள் உரையாற்றுகையில் இது சமூகத்தை தலைநிமிரைச் செய்யும் அறிஞர்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சி. நபிமார்களிடையே சிறப்பால் ஏற்றதாழ்வு உள்ளது என்று அல்லாஹ் கூறுவது போல் அறிஞர்களிடையேயும் ஏற்றதாழ்வு இருக்கும் என்ற இறைநியதியை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சமூகத்தைக் காப்பாற்ற நாம் ஒன்றிணைய வேண்டும். இலங்கையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜம்யிய்யத்துல் உலமா போன்று தமிழகத்திலும் செயல்பட வேண்டும். இந்தப் பயணத்தில் நாம் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

சென்னை, கொளத்தூர் அஷ்ரஃபிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவீ, யூசுஃப் ரஷாதீ ஹஜ்ரத் அவர்கள் ஒருவருக்கொருவர் நேசம் கொள்வது ஈமானின் அடையாளம். அது சொர்க்கத்திற்கு கொண்டு சேர்க்கும் என்பது நபிமொழி. முஸ்லிம்கள் தங்களிடையே வெறுப்பை தவிர்க்க வேண்டும் என்பது நபிகளாரின் கட்டளை. எனவே அனைத்து தரப்பு உலமாக்களையும் அழைத்து ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றம் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.

திண்டுக்கல் யூசுஃபிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவீ. முஹம்மது அலி ஹஜ்ரத் பல காலங்களாக எண்ணிக் கொண்டிருந்த இது போன்ற ஒன்றுகூடலுக்கு அல்லாஹ் இப்போது கிருபை செய்துள்ளான். அல்லாஹ் இதனை மென்மேலும் சிறக்கச் செய்வானாக! உடன்பட்டவைகளுடன் இணைந்து பயணிப்போம். கருத்துவேறுபாடுகளைப் பரப்புவது சமூகத்தில் பிளவுக்கு காரணமாகி விடுகின்றன. கருத்துவேறுபாடுகள் மறுமை நாள்வரை இருக்கத்தான் செய்யும். இந்த சமூதாயத்தின் முந்தைய கூட்டத்தினரை எது செம்மைப் படுத்தி சீராக்கியதோ அதன் மூலமாகத்தான் இந்த சமுதாயத்தின் பிந்தைய கூட்டமும் சீர்பெறும் என்றார்.

நெறியாளர்கள் அனைவரும் தமது கருத்துக்களைப் சிறப்பாக பதிவு செய்தார்கள். மௌலவீ. ஹஃபிசுர் ரஹ்மான் உமரீ மதனீ அவர்கள் உரையாற்றுகையில்: தான்மதீனா பல்கலைக் கழகத்தின் முதலாவது அணியில் பயின்ற மாணவன் என்றும் அதற்கு முன்னர் 1924ல் துவங்கப்பட்ட உமராபாத் ஜாமிஆ தாருஸ் ஸலாம் அரபுக் கல்லூரியில் துவக்கம் முதல் பிதாயத்துல் முஜ்தஹித் எனும் நூல் பயிற்றுவிக்கப்படுவதாகவும் அது அனைத்து மத்ஹபு கூற்றுக்களையும் கண்ணியமாக நினைவு கூர்வதுடன் ஆதாரங்களுடன் ஒப்பு நோக்கிப் பார்க்கும் அற்புத நூல் என்பதையும் தெரிவித்து, ஃபிக்ஹ் விஷயத்தில் பரந்த பார்வை தேவை என்பதை உணர்த்தினார்கள், மேலும் திருக்குர்ஆன், சுன்னாவுடன் நிபந்தனையுடன் கூடிய இஜ்மா மற்றும் கியாஸ் ஆகியவை அவசியம் என்பதை தெளிவுபடுத்தினார்கள்.

இப்ராஹீம் பாக்கவி ஹஜ்ரத் கருத்து வேறுபாடுகளை களைவதில் நிதானமும் பொறுமையும் அவசியம், இதனால் எதிரியும் நண்பனாகிவிடுவான் என்பதை தன் வாழ்வில் நடைபெற்ற சம்பவத்தைக் கூறி அவர்கள் விளக்கினார்கள்.

பி.எஸ். மஸ்வூது ஜமாலி கருத்துவேறுபாடுகள் ஏற்படுவது அல்லாஹ் ஏற்படுத்திய நியதி என்பதை அல்கூருஃ என்ற வார்த்தையின் அடிப்படையில் நிரூபித்த அவசியத்திற்கு ஏற்ப பிற மத்ஹபின் அடிப்படையில் செயலாற்றுவது தவறில்லை என்பதை அபூதாபியின் உச்சநீதி மன்ற தீர்ப்பை உதாரணமாகக் கூறி சிறப்பாக எடுத்துரைத்தார்கள். அறிஞர்களிடையே ஒற்றுமைகள்தான் அதிகமாக நிலவுகிறது. வேற்றுமைகள் ஒரிரு விஷயங்களில் சொற்பமாக உள்ளன.

எனவே சபையில் ஒற்றுமைக்கு வழிவகுக்க கருத்துக்களை பதிவு செய்யவேண்டும், வேற்றுமைக்கு காரணமாகவைகளை தவிர்க்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

மவ்லவி எஸ் கமாலுத்தீன் மதனி, திருக்குர்ஆனின் பக்கமும் சுன்னாவின் பக்கமும் முழுமையாக திரும்புவது மட்டுமே ஒற்றுமைக்கான தீர்வாக அமையும் என்பதை திருக்குர்ஆன் வசனங்களின் மூலம் எடுத்துரைத்த ஷேக். எஸ். கமாலுத்தீன் மதனீ அவர்கள், மார்க்க அடிப்படைக் கட்டளைகளில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார்கள்.

இறுதியாக முனைவர் ஆர். கே. நூர் முஹம்மது மதனீ அவர்கள், அவரவர் தளத்தில் அவரவர் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்றும் சமூக சார்ந்த, இஸ்லாமிய அடிப்படைகள் சார்ந்த விஷயங்களில் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்றும் கூறினார்கள். அனைத்து தரப்பு மார்க்க அறிஞர்கள் மத்தியில் பரஸ்பர நட்பும் சந்திப்பும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள்.

ஆய்வுத் தொகுப்பின் இறுதி வடிவம் இன்ஷா அல்லாஹ் ஐந்து மாதங்களில் வெளியிடப்படும், இந்த கூட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும், ஒரு கருத்தியலை உருவாக்குவதுதான் இந்த கருத்தரங்கின் நோக்கம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். முனைவர். எம். முஜீபுர்ரஹ்மான் உமரீ அவர்கள் மீண்டும் நினைவு கூறினார்.நெறியாளர்கள் மற்றும் மதரஸா முதல்வர்களுக்கான நினைவுப் பரிசை பிரஸ்டன் கல்லூரியின் தலைவர் ஜனாப். அஹ்மது மீரான் சாஹிப் (புரஃபஷனல் கூரியர்) அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள். மேலும் சமூக மாற்றத்திற்காக இது போன்ற ஆய்வு அரங்குகளின் அவசியத்தை உணர்த்தினார்கள். கட்டுரையாளர் சுமார் 30 உலமாக்களுக்கான சான்றிதழ்களை மூத்த அறிஞர்களான நெறியாளர்கள் வழங்கினார்கள்.
கல்லூரியின் அறக்காவலர்களின் வாழ்த்துரைகள்: முனைவர். எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்.இது மார்க்க அறிஞர்களிடையே நிலவும் இடைவெளியைக் குறைக்கும் சிறப்பான துவக்கம். இதனைத் தொடர்வது அனைவரின் கடமை. ஃபிக்ஹ் அகாடமி தமிழகத்தில் ஏற்படுத்தப்படவேண்டும். சமூகத்தை ஒன்றிணைக்க உலமாக்கள் எடுத்துவைக்கும் அனைத்து முயற்சிக்கும் நாம் எப்போதும் துணைநிற்போம் என்று கூறினார்கள்.

தொழிலதிபர். மௌலவீ. எஸ்.கே. சம்சுதீன் ஹாஜியார் (குவைத்) அவர்கள். உலமாக்கள் ஒன்றிணைந்தால் இந்த உலகில் எதையும் சாதிக்கமுடியும். அவர்கள் இணையாததுதான் சமூகத்தின் இத்தனை அவலங்களுக்கும் காரணம். எதில் ஒன்று சேரவேண்டும் என்று சிந்தியுங்கள்! முஸ்லிம்கள் இந்த நாட்டின் வாடகை குடிமக்கள் என்று பேசத் துணிந்துவிட்ட இந்நேரத்தில் நாம் ஒன்றுபட்டு செயலாற்றுவது காலத்தின் கட்டாயம். உலமாக்கள்தான் இந்த சமுதாயத்தின் இராணுவம். அவர்கள் இந்த சமுதாயத்தைப் பற்றி சிந்திக்கவில்லை எனில் வேறு யார் சிந்திப்பார்?!

ஜனாப். அஹ்மது மீரான் சாஹிப்: சுமார் 40 வருடங்களுக்கு முன்னால் மத்ஹபுகளிடையே இருந்த தூரங்களும் இடைவெளிகளும் சமகாலத்தில் பெருமளவு குறைந்துள்ளன. இஸ்லாத்தை முறையாக புரியும் போது வேற்றுமை குறைகிறது. மார்க்கத்தைப் புரிந்து கொள்வதில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் குழப்பங்களை கண்டறிய மார்க்க அறிஞர்கள் கடைநிலை வரை சென்று ஆய்வு செய்து பிரச்சனையை கண்டறிந்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். ஏனெனில் அந்த மக்கள்தான் பள்ளிவாயில்களையும் ஆலிம்களையும் முஸ்லிம் சமூகத்தையும் நிர்வகிக்கும் நாளைய தலைவர்கள்.
நிர்வாக இயக்குனர். ஜனாப். ஜிஃப்ரி காசிம் அவர்கள்: சமூகத்தை ஒன்றிணைக்க உலமாக்கள்தான் செயல் திட்டம் தரவேண்டும். சமூகத்தை ஒருங்கிணைப்பதில் பள்ளிவாயில்களுக்கு மிகுந்த பங்குண்டு. அதில் முறையாக சமூக உருவாக்கத்தை ஏற்படுத்த உலமாக்கள் செயல்திட்டம் வகுக்கவேண்டும்.

இறுதியாக தீர்மானத்தை பிரஸ்டன் பேராசிரியர் கவுஸ்கான் உமரீ அவர்கள் வாசித்தார்கள்

1) ஒற்றுமையைப் பேணுவதும் பிரிவினையைப் புறக்கணிப்பதும் முஸ்லிம்களின் மீது கடமையாகும்.
2) கருத்துவேற்றுமை என்பது எதார்த்தமானது. மார்க்கம் அனுமதித்ததாகும்.
3) இமாம்கள், முஹத்திஸீன், முஃபஸ்ஸிரீன்கள், மார்க்க அறிஞர்கள், அழைப்பாளர்கள் ஆகிய அனைவரையும் கண்ணியப்படுத்துவது அவசியமாகும்.
4) முஸ்லிம் சமுதாயப் பொதுப் பிரச்சனைகளில் தங்களிடையே உள்ள கருத்துவேறுபாடுகளை மறந்து ஒன்றிணைவது கட்டாயமாகும்.
5) மாற்றுக் கருத்துடையவரின் கருத்திற்கு மதிப்பளித்தல் வேண்டும்.
6) உள்ளங்கள் ஒன்றுபட அனைவரும் பாடுபடவேண்டும்.
7) சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான கல்விச் சேவையாற்றவேண்டும். கல்விக் கருத்தரங்குகள், ஜும்ஆ உரைகள் மற்றும் எழுத்துப் பணிகளில் இதற்காக பாடுபடவேண்டும்.

துஆவுடன் குறித்த நேரத்தில் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button