பிணைப்புப் பெருவிழாவாகிய வைரவிழா

கும்கிப்பாகன்

 

கலைஞரின் சட்டப்பேரவை வைர விழாவின் முதல் அம்சம், “கலைஞரின் குடும்பக் கொழுந்துகளில் ஒருவராக ராகுல் காந்தி தன்னை இணைத்துக் கொண்டது தான்’’.தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்ட வேண்டிய அவசிய அவசரம் நேர்ந்த போதெல்லாம் கலைஞரின் ராஜதந்திர அணுகுமுறை பல சரித்திரச் சாதனைகளுக்கு வித்திட்டு இருக்கிறது. அந்த வழியில் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு விழாவும் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கி இருக்கிறது. இதனால் மு.க.ஸ்டாலினின் அரசியல் தகுதியானது அடுத்த அந்தஸ்தின் உயரத்துக்கு எட்டி இருக்கிறது. இதனை தேசியத் தலைவர்கள் பேசிய கருத்துக்களே பறைசாற்றுகின்றன.

ஸ்டாலினும் ராகுலும்

“ராகுல் காந்தியா…? அவர் திமுகவுக்கு எதிரானவர்.. கலைஞரின் மீது பற்றில்லாதவர்.. அதிமுகதான் அவரின் சாய்ஸ்” என்றெல்லாம் அவதூறுகள் அலைபாய்ந்த அரசியலுக்கு ராகுல் காந்தி முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இது ஏற்கனவே நடந்து முடிந்திருந்தாலும் இப்போது ஒருவருக்குள் ஒருவர் எனும் அளவுக்கு ராகுல் காந்தியும் மு.க.ஸ்டாலினும் ஒருங்கிணைந்து இருக்கின்றனர். ஸ்டாலினின் வீட்டுக்குச் சென்ற ராகுல், அங்கு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடித் தன் பாசத் துடிப்பை நேசிப்போடு வெளிப்படுத்தி இருக்கிறார்.

கலைஞரின் உடல்நிலை தொடர்பாக பல்வேறு முரண்பட்ட வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்து வந்தன. அவரின் சட்டப்பேரவை வைர விழாவையட்டி கலைஞரின் புகைப்படங்கள், கலைஞர் இயங்கும் வீடியோக்கள் வெளியிடப்பட்டதால் முரண்பட்ட கருத்துக்கள் முறிந்து விழுந்து விட்டன.

இதேபோல மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோதும் வீடியோ எடுத்து வெளியிட்டு இருந்தால் தமிழகத்தை அரசியல் சர்ச்சைகள் ஆக்கிரமித்து இருக்குமா?

ஒருங்கிணைத்த ஒற்றுமை

பாஜகவுக்கு எதிரான அனைத்து தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் சென்னை மண் ஒருங்கிணைத்து இருப்பது இதன் முதல் அம்சம். இத்தலைவர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டது மறுஅம்சம். கரங்களைப் பிணைத்துக் காட்டி விழாத் தொடர்பாக இனி விழாத இணைப்பு என அடையாளம் காட்டியது அடுத்த அம்சம்.

ராகுல் காந்தியின் உரையில் ஒவ்வொரு தலைவரின் கருத்தும் மேற்கோள் காட்டப்பட்டதின் மூலமாக, அவர்களுடனான தனது உருக்க நெருக்கத்தை ராகுல் காந்தி அடையாளம் காட்டி இருக்கிறார்.

“அவர்களின் கருத்தை மட்டுமே இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்ற அளவில் செயல்பட நரேந்திர மோடியையோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.சையோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கோடிக்கணக்கான இந்திய மக்களின் குரலை அடக்கும் அவர்களின் செயல்பாட்டை நாங்கள் ஏற்கமாட்டோம். அவர்களின் தவறான எண்ணங்களை செயல்படுத்துவதை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.” என்று வலிமையாக இந்த மேடையில் பிரகடனம் செய்திருக்கிறார் ராகுல் காந்தி.

” எதிர்க்கட்சிகளை அழிக்க பா.ஜ.க. காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது. காவி நாடாக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் இணைந்திருக்கிறோம். நாட்டில் மதசார்பற்ற ஆட்சியை உருவாக்க ஒன்று சேருவோம். இந்தி திணிப்பையே நாங்கள் எதிர்க்கிறோம். அதற்காக இன்னொரு சுதந்திர போராட்டத்தினை சந்திக்க மக்கள் தயாராகி விட்டார்கள் ” என்று மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்திருக்கிறார். விழாவின் உள்ளடி உணர்வே இதுதான்.

தலைவர்களின் அறிவிப்புகள்

“மதவெறி அரசியலில் இருந்து இந்தியாவை மீட்கும் போராட்டக் களத்தில் எங்களோடு மு.க.ஸ்டாலின் கைகோர்த்து நிற்பார் என்று நம்புகிறேன்” என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ள கருத்து ஆழமான அரசியல் பிணைப்புக்கு அடித்தளம் போடுவதாக அமைந்திருக்கிறது.

கோட்பாடுகளில் முரண்பாடுகள் இருந்தாலும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு முதலிய நாடுகளுடன் இணைந்து சோவியத் யூனியனும் ஒன்று சேர்ந்து பாசிச ஹிட்லரின் தோல்விக்கு காரணமாக இருந்த வரலாற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்ட போது மறைமுகமாக இந்தியாவில் பாசிசம் ஒழிக்கப்படுவதற்கு அனைவருடனும் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருக்கின்றது என்ற தொனி வெளிப்பட்டது.

“தமிழகத்தில் திமுக ஆட்சி, மத்தியில் கூட்டணி மந்திரிசபையில் திமுகவுக்கு அங்கம்” என்றவாறு பகிரங்கப்படுத்திப் பேசி இருப்பவர் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் கட்சி) எம்.பி.யான மஜீத் மேமன். இதில் பொதிந்து இருக்கும் கூட்டணி வியூகம் மிக வெளிப்படையான நிலைப்பாட்டைச் சொல்கிறது.

“தேசிய அரசியலில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்காற்றிட வேண்டும். இதில் மம்தா ஆர்வமாக இருக்கிறார். அதுக்கு நாங்க ரெடி. நீங்க ரெடியா?” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றவாறு போட்டு உடைத்திருக்கிறார் திரிணாமூல் காங்கிரசின் மாநிலங்களைக் குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன்.

லாலு பிரசாத் யாதவ் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றதும் இதை வைத்துச் சிண்டு முடியச் சிலர் முந்துகின்றனர். ஆனால் நிதிஷ்குமார் மிக தெளிவாக லாலுவுக்கு கடுமையான காய்ச்சல் காரணமாக தான் அவரால் வர இயலவில்லை: அதே நேரத்தில் இந்த ஒற்றுமைக்கு அவரது ஆதரவு உண்டு என்று பேசி சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

“நிதிஷ்குமார் வரமாட்டார். அவரின் அணுகுமுறைகள் மோடிக்கு ஆதரவாகவே உள்ளன” என்றவாறு சில அரசியல் ஆரூடங்கள் அலைபாயத்தான் செய்தன. ஆனால் அவற்றை நொறுக்கித் தள்ளும் வகையில் தனது வருகையை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதிவு செய்து விட்டார். எனவே இனி நிதிஷ்குமாரை மோடியுடன் முடிச்சுப் போட முயல்வோர் மூக்குடைந்து போவர் என்பதே யதார்த்தம். அவர் மோடியைச் சந்தித்தது பீகார் மக்களுக்காக. அவர் சென்னைக்கு வந்திருந்தது இந்திய மக்களுக்காக.

தேசிய அரசியலில் திமுக

தேசிய அரசியலில் அங்கம் பெற்றுவிட்ட மு.க.ஸ்டாலின் இனி அகில இந்திய அரசியல் அலசல்களிலும் கவனம் செலுத்திட வேண்டும். திமுகவின் டில்லிப் பணிகளைக் கவனித்திட தனியே பொறுப்பு அளிப்புகள் இருக்கலாம். ஆனால் ஸ்டாலினின் நேரடி பங்களிப்புக்கான அவசியம் வந்து விட்டது. “நீங்க ரெடியா?” எனறு திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் கேட்டுவிட்டாரே… ‘ரெடி’ என்தைச் செயலில் காட்டிட வேண்டும் அல்லவா? கலைஞரின் வைர விழா ஒருபக்கம் கோலாகலமாகக் களை கட்டியபடி இருக்க… மறுபுறம் அவரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பல்வேறு புராதனச் சம்பவங்கள் மேற்கோள் காட்டிச் சமூகவலைதளங்களில் உலவ விடப்பட்டன. ஸ்டாலினைப் பற்றி எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். அவரால் பதில் கூற முடியும். ஆனால் பதில் கூறி விளக்கம் அளிக்க முடியாத நிலையில் இருக்கும் ஒரு தலைவரைப் பற்றி விமர்சித்து இருப்பவர்கள் இதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திடல் நல்லது.

இது ஒரு மோசமான முன்னுதாரணத்துக்கு வழிவகுத்து விடும். ஒவ்வொரு கட்சித் தலைவரும் விழா கொண்டாடும் போது அவருக்கு எதிரான பழைய நிகழ்வுகளைப் பேசிக் கேலியும் கிண்டலுமாகப் பேசிவந்தால் என்னாகும்-? அரசியல் நாகரீகம் அஸ்தமனம் ஆகிவிடும்.

தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்த பிணைப்புப் பெருவிழா இனி இதர மாநிலங்களுக்கும் பரவிட வேண்டும் அல்லவா? இதற்கான தூண்டுதல் தூதுகளை உருவாக்கும் பணியில் மு.க.ஸ்டாலின் ஈடுபடலாம். இதன் மூலமாக அவருக்கு அகில இந்திய அரசியல் அந்தஸ்து கிடைத்து விடும். கலைஞரின் இடத்தை நிரப்பிடும் முயற்சிக்கு இதனை முன்னுரையாகக் கூட கருதிட முடியும். “ராயப்பேட்டையில் தொடங் கிய முழக்கம் இனி செங்கோட்டையிலும் முழங்க வேண்டும்” இதுதான் தேசியத் தலைவர்களின் ஒருங்கிணைப்பு விழாவின் நோக்கம். இதற்கான முன்னெடுப்புப் பணிகளின் மூலமாக மு.க.ஸ்டாலினின் ராஜதந்திர அணுகுமுறையானது அடுத்த உயர்தளத்துக்கு எட்டி இருக்கிறது.

இது தொடர வேண்டும் அல்லவா? இனி அடுத்தடுத்த அரசியல் கட்சிகளின் அரங்கேற்றம் இதனைக் காட்சிப்படுத்தும்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button