பரோல் அரசியல்
கும்கிப்பாகன்
தமிழக அரசியலில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் பரோல் அரசியலின் முத்தாய்ப்பாக சசிகலா தமிழகத்தில் ஐந்து நாட்கள் இருந்து திரும்பி இருக்கிறார்.தமிழகத்தின் அரசியலில் அவ்வப்போது புதுப்புது அத்தியாயங்கள் மையம் கொண்டு புயலாகி விடுவது வழக்கம். தற்சமயத்திலோ பரோல் அரசியல் விசுவரூபம் எடுத்துள்ளது. அதிமுகவின் முக்கூறுகள் தற்போது இருகூறுகள் என உருமாறி உள்ளன. நீண்ட நெடிய காலமாக தமிழக அரசியல் களத்தில் சுடச்சுட விவாதிக்கப்பட்ட பேரறிவாளன் பரோல் தற்போது சாத்தியமாகி மேலும் ஒரு நீட்டிப்பு பெற்றுள்ளது. அரசுப் பணியில் காட்டிய அரசியல் என்று இதனைக் கருதலாம். இதன் மூலமாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்கோர் செய்துவிட்டார்.
விவாகரத்தும் இன்ஷியலும்
“சசிகலா தன் கணவரை எப்போதோ விவாகரத்து செய்து விட்டார். அதனால் தான் அவர் தன் இனிஷியலைக் கூட மாற்றிக் கொண்டார். எனவே சசிகலாவுக்கு பரோல் வழங்கக் கூடாது” என்று தமிழகத்தில் சிலர் ஒரு புதிய சர்ச்சைக்கு ரக்கை கட்டி விட்டனர். அது பறக்க முடியாமல் வீழ்ந்தது தனிக் கதை.
“சசிகலா தன் கணவரை ஒருபோதும் விவாகரத்து செய்துவிடவில்லை இனிஷியல் மாற்றம் என்பது பரஸ்பரம் பேசிக்கொண்ட செய்திதான்’’ என்று சசிலாவின் குடும்பத்தினரே விளக்கம் கொடுத்து இந்த விவகாரத்தைச் சுபமாக முடித்து வைத்தனர். விவாகரத்து என்ற பிரச்னை நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வரத்தான் செய்தது. அதனைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பை சசிகலாவின் அரசியல் எதிரிகளே உருவாக்கித் தந்துவிட்டனர். “சசிகலா பரோலில் வந்தால்…’’ என்ற கிலி தமிழக அரசியல்வாதிகளுக்கு இருக்கத்தான் செய்தது. “சசிகலாவின் பரோல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது’’ என்ற தகவல் வெளியானதும் “ஸ்வீட்டு எடு, கொண்டாடு” என தமிழக ஆட்சியாளர்களில் சிலர் மகிழ்ந்தனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே காட்சிகள் மாறின. சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனர் தடைகூற முடியாதபடியாக மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் அமைந்து இருந்தது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடுத்த வழக்கின் தீர்ப்பு சசிகலாவுக்கு உதவியானது.
உருக்கமிகு சந்திப்பு
எம்.நடராசன் தன் வாழ்நாள் முழுவதும் தன் மனைவிக்கும் மன்னார்குடி சொந்தங்களுக்குமே உழைத்து வந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மனைவியுடன் பகிரங்கமாக உரையாடும் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். சந்திக்கும் சம்பவம் நிகழ்ந்தபோது பாவம்… அவரால் பேச முடியவில்லை. மருத்துவக் கருவி தொண்டையில் பொருத்தப்பட்டு இருந்ததால் அவரால் சைகை மூலம் மட்டுமே தன் மனைவியுடன் பேச முடிந்தது. இதனை தமிழக வரலாற்றின் உருக்கமிகு சந்திப்பாக சரித்திரம் பேசும்.மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிய போதுகூட அவர் தன் மனைவிக்கு உதவி செய்து இருக்கிறார். எப்படி எனில், அவரின் உடல்நிலையைக் காரணம் காட்டித் தானே சசிகலா சிறையில் இருந்து வெளியே 5 நாட்களுக்கு வந்திருந்தார். தினந்தோறும் குளோபல் மருத்துவமனைக்கு வருவது. கணவருடன் இருந்துவிட்டுத் திரும்புவது என அவர் தன் கடமைக்குக் கச்சிதமாகப் பொருந்தினார். அவருக்கு வழங்கப்பட்ட பரோல் எதற்கோ… அதை அவர் சரியாகச் செய்துள்ளார்.
“ஆனால் அத்துடன் அவர் நின்றாரா?” எனில் அது வழக்கமான ரகசியப் புதையல் தான். போயஸ் தோட்டத்தின் முடிசூடா இளவரசியாக இருந்த சசிகலா, சென்னையில் அந்த சாலைப் பக்கம்கூட போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டதுதான் சோகம். சசிகலாவின் பரோல் வருகை மூலம் தினகரனின் சூசகத்துக்கு காட்சி வடிவம் கிடைத்து இருக்கிறது. சசிகலா சென்னையில் இருந்தபோது கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு ஒரு பேட்டியில் பகிரங்கமாக சசிகலாவுக்கு ஆதரவான கருத்தைக் கூறி இருக்கிறார். இன்னும் பல கருத்துக்கள் உண்டு. எனினும் அமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பதால் “அமைதி காக்கிறேன்” எனவும் கூறி இருக்கிறார்.
“ஸ்லீப்பர் செல் உண்டு. அதில் அமைச்சர்கள் கூட உள்ளனர்” என்று தினகரன் கூறி வந்தார். அவரின் கூற்றை எடப்பாடி அணியினர் கேலி பேசிக் கிண்டல் செய்து வந்தனர். ஆனால், “தினகரனின் பேச்சு உண்மையானதே” என அமைச்சர் ராஜு உணர்த்தி விட்டார். அவர் கூட்டுறவு அமைச்சர் அல்லவா? சசிகலா அணியினரான தன் கூட்டுறவைச் சரியான தருணத்தில் குறிப்பிட்டு தன் விசுவாசத்தை அடையாளம் காட்டி விட்டார். இனி அவரின் மந்திரி பதவி என்னாகுமோ? பேரறிவாளன் பரோலில் இருந்த நிலையில் அவரைப் பல அரசியல் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். அதற்குத் தடை இல்லை. ஆனால் சசிகலாவின் வருகையின்போது மட்டும் கடும் தடைகள். அதுதான் தமிழக அரசியல்.முதல் முறை பரோல் கேட்டு சசிகலா விண்ணப்பிக்க.. அது ஏன் ரத்தானது? காவல்துறை அதிகாரி ரூபாவின் கண்டுபிடிப்புகளால் கலங்கிக் கிடக்கும் பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் முதலில் மறுத்துபின்னர் கொடுப்பதின் மூலமாக தங்களின் நிலைப்பாட்டில் சந்தேக நிழல் படாமல் இருக்க வகைதேடிக் கொண்டனர். “அரசியல் வாதிகளைச் சந்திக்கக் கூடாது, உறவினர்களை மட்டும் சந்தித்துப் பேசலாம்’’ என சசிகலாவுக்கு கட்டுப்பாடு. “உறவினரே அரசியல்வாதியாக இருந்தால் அதற்கு என்ன விதி?” இந்தக் குழப்பத்தில் தான் ஒருமுறை சந்திக்கச் சென்ற தினகரன் மறுமுறையும் செல்லாமல் ஒதுங்கி நிற்கிறார்.ஜெயலலிதா ஜாமீனில் சிறைவிட்டு வெளியே வந்தபோது அவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதேபோல சசிகலாவின் பரோல் வருகையின் போதும் கொடுத்து இருக்கிறார்கள். இதில் மகிழ்ச்சி அடைய என்ன இருக்கிறது? காதோடு காது வைத்தது போலக் கமுக்கமாக வந்து போனால் தானே மறுபரோல் கேட்கும் தகுதி கிடைக்கும்!சசிகலாவின் அனைத்து தமிழக நடவடிக்கைகளும் கண் காணிக்கப்பட்டு சாட்சியாவணப் பணிகள் நடந்துள்ளன.அவரை சந்திக்க வந்தோரும் உளவு போலீசாரின் ரகசிய கேமராக்களில் சிக்கி உள்ளன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சீராகத் தொகுக்கப்பட்டு வருகின்றன.
வழி பிறந்துள்ளது
இவற்றை வைத்து “சசிகலா விதிமீறி நடந்து கொண்டாரா?” என்பது பற்றிய ஆய்வு நடக்கிறது. விதிகள் மீறப்பட்டு இருப்பின் அவை குறித்து விளக்க அறிக்கையுடன் பரப்பன அக்ரஹாரா சிறைத் துறைக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. தவறுகள் உறுதிப்படுத்தப்பட்டால் சசிகலாவின் மறுபரோல் சிக்கலுக்கு உள்ளாகக் கூடும். பரோல் அரசியல் சூடு பிடித்துள்ள நிலையில் ராஜீவ் படுகொலைக்கான குற்றவாளியான நளினி,பரோல் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். “என் மகளுக்கு திருமணம் செய்துவைக்க பரோல் தருக” என அவர் கேட்டு இருக்கிறார். பேரறிவாளனும் சசிகலாவும் சிறைவாசிகளின் தற்காலிக விடுதலைக்கு வழிகாட்டி விட்டனர்.