பன்னீருக்கு மொட்டை போட்ட எடப்பாடி

கும்கிப்பாகன்

“பழநிசாமியான முதல் அமைச்சர், தன்னிடம் சமரசம் செய்துகொண்ட பன்னீர் அணியினருக்கு மொட்டை அடித்து வருகிறார்” என்று ஓ.பி.எஸ். தரப்பினரின் புலம்பல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

“ஓ.பி.எஸ். அணியில் சேர்ந்தால் இணைப்பின்போது ‘நல்ல’ வாய்ப்புகள் கிடைக்கும்” என்று நம்பிய பல அதிமுக வி.ஐ.பி.க்கள் இப்போது “தவறு செய்து விட்டோமோ?” என்று கையைப் பிசைந்து கொண்டு இருக்கின்றனர்.

“புலிக்குப் பயந்தோர் அனைவரும் என் மீது படுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவது போன்ற சிறுவர் கதை பேசப்படுவதுண்டு. அதேபோன்ற ஒரு அறிவிப்பை ஓ.பி.எஸ். விடுத்தார். மவுனத் தியானத்தின் மூலமாக அவர் விளக்கிய போராட்டத்தைக் கண்டு ஈர்க்கப்பட்ட பல அதிமுக மாஜி தலைவர்கள் ஓ.பி.எஸ். வசம் அடைக்கலம் சேர்ந்தனர். “டில்லியின் தயவு ஓ.பி.எஸ். தரப்புக்கு உள்ளது” என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள், “ஓ.பி.எஸ். அல்லது டில்லிவாலாக்கள் தங்களுக்கு அருள் பாலிப்பர்” என்று நம்பினர். தீவிரமாக அரசியல் நடத்தினர். மந்திரி பொறுப்பில் இருந்த மாபா பாண்டியராஜன் மட்டும் தனது பதவியைத் தியாகம் செய்துவிட்டு ஓ.பி.எஸ். அணிக்குத் தாவினார். எனவே சமரசத்தின் போது அவருக்கு மட்டும் அமைச்சர் பொறுப்பு தரப்பட்டது. வேண்டாத மந்திரிக்கு எந்த இலாகாக்களை முதல் அமைச்சர் ஒதுக்கித் தருவாரோ அதைத்தான் மாபா பாண்டியராஜனுக்கும் தரப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன், மவுன எரிமலையாய்க் குமுறியபடி கொடுத்த வேலையில் செம்மை காட்டி வருகிறார்.

சராசரி அமைச்சர்கள்

ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் போது இந்தக் குழவிகள் எம்மாத்திரம்? ஓ.பி.எஸ். நிலைகுலைந்து கிடக்கிறார். இப்போது அவர் தங்கக் கூண்டின் சூழ்நிலை கிளி. சுயமாகக் கொஞ்சவும் முடியாது. துணை முதல்வர் என்று ஓ.பி.எஸ். அறிவிக்கப்பட்டாலும் அதிகாரங்கள் கிடையாது. ஓ.பி.எஸ். இலாகா கோப்புகள் அனைத்துமே எடப்பாடியின் டேபிளுக்குப் போன பின்தான் ஏற்கப்படுகின்றன. கவர்னர் பதவி ஏற்பு விழா உட்பட பல முக்கிய நிகழ்ச்சிகளில் ஓ.பி.எஸ். ஒரு சராசரி அமைச்சர் என்ற அந்தஸ்துடன் தான் நடத்தப்படுகிறார். இதனால் கொந்தளித்துக் கிடக்கும் ஓ.பி.எஸ். மீது அவரின் அணித் தலைவர்கள் வினாக்கணை தொடுத்து வருகின்றன. “உங்களுக்கானதைப் பெற்றுக் கொண்டீர்கள். உங்களை நம்பி வந்த எங்கள் கதி என்ன?” என்பதே அவர்களின் கேள்வி. ஓ.பி.எஸ். எதையும் செய்ய முடியவில்லை. எனவே ஓ.பி.எஸ். அணித் தலைவர்களின் பார்வை தினகரன் பக்கம் திரும்பி வருகிறது. எனினும் அவர்கள் இரட்டை இலை யாருக்கு என்ற பிரச்னை, தினகரன் அணியினரின் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு வழக்கு ஆகியவற்றின் நிலையைப் பார்த்துவிட்டு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.இதற்கிடையே சுவாரசியமான ஒரு தகவல் பரபரப்பாக பரவிவருகிறது. பரோல் பெற்று சென்னைக்கு வந்த சசிகலா பற்றிய தகவல் அது. சென்னையில் அவர் ஓ.பி.எஸ்.சின் மனைவியையும், எடப்பாடி பழநிசாமியின் மனைவியையும் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசியதாகவும், நியாயம் கேட்டதாகவும் தகவல் கசிகிறது.

மோடியின் விசுவாசி

மோடியின் விசுவாச சமஸ்தான பிரஜையான ஓ.பி.எஸ். நீண்டகாலமாக பிரதமரின் சந்திப்பிற்காக தவம் இருந்தார். ஒரு வழியாக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. “அவரைத் தனியே விட்டால் ஆபத்து” எனக் கருதிய ஈ.பி.எஸ்., தன் அமைச்சரவை சகாவும், அதிரடி ஆபத்பாந்தவனுமான மின்துறை அமைச்சர் தங்கமணியையும் உடன் அனுப்பினார். ஆனால் அந்தோ… கடைசி நேரத்தில் ஓ.பி.எஸ். கூட மைத்ரேயன் மட்டும்தான் போக முடிந்தது. தங்கமணி கழற்றி விடப்பட்டு விட்டார். அவருக்கு ஏற்பட்ட அவமதிப்பைச் சரிக்கட்டவே அவர் பாதுகாப்புத்துறை அமைச்சரைச் சந்திக்க வைக்கப்பட்டார். “பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ” என்பார்களே… அது இதுதானோ? அதுவும் அந்தப் பூவை ஈ.பி.எஸ். காதுகளில் வைத்தது தான் சுவாரசியம்.

இந்த இரு தலைவர்களிடையே உள்ள பனிப்போரின் குருச்சேத்திரக் களமாகவே பிரதமரின் சந்திப்பு அறை அமைந்து இருந்தது. ஈ.பி.எஸ் மனம் குழம்பிக் கிடக்கிறார். “என் ஆதரவாளர்கள் அபலைகளாகக் கிடக்கின்றனர். உங்களை நம்பித்தான் அவர்களை அழைத்தேன். உங்களின் ஆணைப்படித்தான் அவர்களைக் கொண்டு அரசியல் செய்தேன். இப்போது எனக்குத் தங்கக்கிரீடம் சூட்டிவிட்டுக் கழுத்தில் கத்தி வைத்ததுபோல உணர்கிறேன். என்னை நம்பி வந்தோருக்கு வழிகாட்டுங்கள்” என்று ஓ.பி.எஸ். உருகி உருகிப் பேசி மோடியிடம் வேண்டியதாகத்தான் டில்லி வட்டாரம் கிசுகிசுத்துக் கொண்டு இருக்கிறது.

அ.தி.மு.க நிலவரம்

ஆனால் சாதகமான பதில் ஏதும் மோடியிடம் இருந்து வரவில்லை. ஆகவே தணல் மேடை தகிப்புடன் அவர் டில்லியை விட்டு வெளியே வந்து சென்னையைச் சேர்ந்து இருக்கிறார். தங்கமணியோ ஈ.பி.எஸ். வசம் சோகப்புகார் வாசித்துக் கொண்டு இருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், துணை முதல்வரே உளவுப்பிரிவு போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் இருக்கிறார் என்பதுதான். ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். அணியின் பதவியாளர்களோ, “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்ற பழமொழிக்கு உயிரோட்டமான உழைப்பைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவை அனைத்தும் முதல் நிலையாளருக்குத் தெரியும் என்றாலும் அவரின் அரசியல் நிர்பந்தம் அவரைச் சகித்துக்கொள்ள வைக்கின்றது. இரட்டை இலை சின்னம் இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க முடியாமல் ஆட்சித் தலைமை தடுமாறுகிறது.
எனவே மழை, டெங்கு, பள்ளிக்கூடங்கள் எனக் காரணங்களை அடுக்கி நீதிமன்றத்தில் துயரப் பண் பாடப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் தான் சுகாதாரப் பணிகள் முடங்கிப் போய் டெங்கு தலைவிரித்தாடுகிறது எனவும் மக்கள் பேசத் தொடங்கி விட்டனர். தேர்தல் வந்தால் இழக்கப் போகும் டெபாசிட் தொகைக்கான கவலையில் இப்போதே அதிமுகவினர் மூழ்கி இருப்பதுதான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கட்டிக்காத்த அரசியல் இயக்கத்தின் நிலவரம் ஆகும்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button