நான் இந்துவாக சாகமாட்டேன்

அரும்பாவூர் தமிழவன்

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசும் ஆர்.எஸ்.எஸ்.சும் இந்து மதத்தை நிராகரித்த தலித்துகளை வலுக்கட்டாயமாக இந்து மதத்திற்க்குள் திணிக்கும் (கர்வாப்சி எனும் பெயரில்) அரங்கேற்றுவதிலும் ஓர் இந்துவாக சாக மறுத்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையே தன்வயப்படுத்தி அவரை தீவிர இந்துவாக சித்தரிக்க முயலும் இவ்வேளையில் இந்நூல் வெளிவந்திருப்பது மிக முக்கியத்துவம் பெறுகிறது.

13.10.1935 ல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மராட்டிய மாநிலத்தின் நாஷிக் மாவட்டத்தில் உள்ள இயோலா என்ற இடத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலித்துக்கள் பங்கேற்ற கூட்டத்தில்தான் முதன்முதலாக ” கெடுவாய்ப்பாக நான் தீண்டத்தகாத இந்துவாக பிறந்துவிட்டேன்.அதை தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.ஆனால் அறுவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும் என நான் உறுதியாகக் கூறுகிறேன். நான் ஒர் இந்துவாக சாகமாட்டேன்” என முழங்கினார்.

தொடர்ச்சியாக 17.05.1936ல் பம்பாயில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யாண் எனும் இடத்தில் 150 கிராமங்களில் இருந்து திரண்ட மக்கள் கூட்டத்திலும், 31.05.1936 ல் பம்பாய் தாதரில் 35 ஆயிரம் தலித்துக்கள் பங்கேற்ற மாநாட்டிலும், 28.08.1937 ல் பம்பாய் பாந்திரா நகராட்சி அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் மதமாற்றம் குறித்து விரிவாக பேசியுள்ளார் அம்பேத்கர். மதமாற்றத்திற்கான அவசியம், மதமாற்றத்தில் பொருளாதாரத்தின் பங்கு, இந்து மதத்தில் சாதிய ஒடுக்குமுறை, சுதந்திரம், திருமணங்கள் சாதியை ஒழிக்குமா? பெயர் மாற்றமும், மதமாற்றமும்,மதமாற்றத்தை எதிர்க்கும் வாதங்கள், மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என பல்வேறு உப தலைப்புகளைக் கொண்டு ஒடுக்கப்பட்ட பாமர மக்களின் மனங்களில் எழும் நியாயமான கேள்விகளுக்கு ஒரு தேர்ந்த பேராசிரியராக விரிவான விளக்கங்கள் அளித்துள்ளார் அம்பேத்கர்.

14.10.1956 அன்று மகாராட்டிரத்தின் நாக்பூரில் 10 இலட்சம் மக்களுடன் இந்து மதத்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு பவுத்தம் ஏற்றார் அம்பேத்கர். அவர் இதற்கு அடுத்த நாள் ஆற்றிய உரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காந்தியாருடன் நடந்த விவாதம்,செத்த மாட்டை சுமக்க கூடாததின் காரணம், பவுத்தம் தழுவியதன் நோக்கம் என அடுக்கடுக்காய் தமது வாதங்களை அடுக்குகிறார். இந்நூலை வாசித்து முடிக்கும் போது தற்போது காவிக்கூட்டத்தினர் அம்பேத் கார் குறித்து புனைந்த கட்டுக்கதைகள் அனைத்தும் தவிடுபொடி ஆகிறது.

அம்பேத்கரும் பெரியாரும்

10.07.1947ல் தமிழ்நாட்டில் மாயவரத்தில் தந்தை பெரியார் தான் அம்பேத்காரை தலைவராக ஏற்றதற்கான காரணத்தை பகிர்ந்ததோடு அல்லாமல் இயோலா மாநாட்டை ஆதரித்து எழுதிய தலையங்கத்தையும் அச்சேற்றியுள்ளது அம்பேத்கார்- பெரியார் குறித்த புரிதலை வாசகர்கள் உணர வாய்ப்பாக அமையும். பெரியாரை தலித் மக்களின் விரோதியாக கட்டமைக்கும் போக்கை இந்த பின்னிணைப்பு தவிடுபொடி ஆக்குகின்றது. இந்து மகா சபையின் தலைவர் மூஞ்சேவுக்கும் அம்பேத்கருக்கும் இடையே மதமாற்றம் குறித்து நடந்த விரிவான உரையாடலை எம்.சி.இராஜா அவர்கள் பத்திரிகைக்கு வெளிப்படுத்தியதை கண்டித்து அம்பேத்கர் வெளியிட்ட அறிக்கையும் பின்னிணைப்பு 2 என இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் காலத்திய தலித் தலைவர்கள் எம்மாதிரியான சிந்தனையோட்டத்தில் இருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

இந்நூலில் இடம்பெற்ற அம்பேத்கர் அவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் கருத்தியல் ரீதியாக காவிச்சிந்தனையாளர்களுக்கு பேரிடியாய் இருக்கும். சாதி என்ற முதன்மை முரணில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும்பான்மையினரான தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் இந்துக்கள் அல்லர் என்று தமது ஆய்வின் மூலம் நிறுவிய அம்பேத்கர் அம்மக்களை இந்துக்கள் அல்லாதவர்களாக்கவே பெரும் முயற்சி மேற்கொண்டார்.இந்துமயமாக்கல் தீவிரமடைந்து வரும் இவ்வேளையில் அதனை மட்டுப்படுத்தும் ஆயுதமாக இந்நூல் அமையும். இதனை எளிய தமிழில் மொழி பெயர்த்த தாயப்பன் அழகிரிசாமி பாராட்டுக்குரியவர்.

நான் இந்துவாக சாகமாட்டேன்

ஆசிரியர்: புரட்சியாளர் அம்பேத்கர்

வெளியீடு:தலித் முரசு,எஸ்-5,மகாலட்சுமி அடுக்கம்,26/13,குளக்கரை சாலை, நுங்கம்பாக்கம்,சென்னை-600 034,

பக்கங்கள்: 175, விலை:ரூ150 போன்:044-28221314

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button