தாழிடப்பட்ட கதவுகள்

அரும்பாவூர் தமிழவன்

சமகால  இஸ்லாமிய  தமிழ்ச் சிறுகதைகள் மார்க்கம் சார்ந்தும் குடும்பவியல் சார்ந்தும் அதிகமாக எழுதப்பட்டு வந்த நிலையில் சமூக அரசியல் சார்ந்து எழுதும் போக்கு மிகக்குறைவாக இருந்து வந்தது.

இந்நிலையில் கோவை கலவரங்களில் இஸ்லாமியர்  தரப்பு  நியாயங்களை தமிழ் வாசிப்புலகிற்கு எடுத்துரைக்கும் பணி தற்போது (சற்றே காலதாமதம் ஆனாலும்) தொடங்கி இருப்பது ஆறுதல் அளிக்கிறது.அந்த வகையில் வழக்கறிஞர் அ.கரீம் அவர்கள் எழுதிய ”தாழிடப்பட்ட கதவுகள் ” சிறுகதைத் தொகுப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

மொத்தம் பத்து சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் படிக்கும் வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடியவை. இதற்கு முன் வெளியான கதைகள் கலவரத்தையும் அதன் பாதிப்புகளையும் தாக்கங்களையும் மையப்படுத்தி புனையப்பட்டிருந்தன. இந்த தொகுப்பின் கதை ஒன்று கலவரத்தில் பாதிக்கப்பட்டு சிறை  மீண்டவரின் வாழ்வின் துயரங்களை பதிவு செய்துள்ளது.

எந்த தவறும் செய்யாமல் சிறைசென்று பல்லாண்டு காலத்திற்குப் பின் நிரபராதி என்று விடுதலை பெற்றுவரும் ஓர் அப்பாவியின் குடும்பச் சிக்கலை வெடிப்புக்குப்பின் பின் காலம் எனும் கதை பொதுமை சமூகத்திற்கு புதிய காட்சி வெளியாகும்.  கதைமாந்தர்கள் அனைவரும் சமூக நல்லிணக்கம் பேணும் விளிம்புநிலை முஸ்லிம்கள் என்பதையும் மார்க்கமே அறியாத நபர்களும் கூட முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால் காவி பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டதையும் தமது எளிய நடையால் சுட்டுகிறார் கரீம்.

பிலால் என்கிற டேப் பசீர், மொதோ கேள்வி போன்ற கதைகள் மட்டும் கோவை கலவரச் சூழலை விட்டு சற்றே விலகி பயணித்தாலும் கவனத்தை ஈர்க்கும் கதைகள் அவை.செப்டம்பர் 2016 ல் கோவை சசிக்குமார் என்கிற காவியிஸ்ட் கொல்லப்பட்டதற்குப் பின் நடைபெற்ற கலவரத்தை 144 எனும் கதையில் விவரிக்கிறார். ஒரே சிறுகதையில் பல சம்பவங்களை ஒருங்கிணைத்து கதையின் போக்கை மாற்றும் உத்தி இஸ்லாமிய தமிழ்ச் சிறுகதை உலகிற்கு புதியது.

தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுவது போல மொகல்லாவின் மய்யத்துகள் எனும் கதையை படித்து வெடித்து அழுதேன் என்று எழுதுவதில் தொடங்குகிறது கரீமின் எழுத்துக்கான வெற்றிப் புள்ளி. ஆதவன் தீட்சன்யா தனது அணிந்துரையில் பொது சமூகத்தை நோக்கி வைக்கும் கேள்விகள் அனைத்தும் இத்தொகுப்பில் உள்ள கதைகளின் தாக்கத்தினால் என்பதனை வாசகர்கள் உணர்வர். முஸ்லிம்கள் மீதான தவறான பிம்பத்தை இத்தொகுப்பின் கதைகள் தகர்க்க்கிறது.புதிய புரிதலை உருவாக்குகிறது.

இது கொள்கை பேசும் நூலாகவோ இஸ்லாமியம் பேசும் நூலாகவோ இல்லாமல் யதார்த்த சூழலை அப்படியே மிகையில்லாமல் பதிவு செய்திருக்கும் நூல் எனலாம். முன்னுரையில் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் குறிப்பிடுவது போல இஸ்லாத்திற்குள் பரவிவரும் தீவிரவாதம்,தர்கா எதிர்ப்பு,, பெண்களுக்கு உரிய இடம் அளிக்காத இறுக்கம் போன்ற வார்த்தைகள் தேவையற்ற பதிவாகப்படுகிறது. இக்கதை களின் கருப்பொருள்கள் கோவையை மையப்படுத்தியது என்றாலும் இந்தியா முழுதும் நடைபெற்ற முஸ்லிம்களுக் கெதிரான வன்முறைகள் ஒரே தன்மை கொண்டது என்பதனை உணரமுடிகிறது.

தாழிடப்பட்ட கதவுகள் நடுநிலையான மக்களின் மனக்கதவுகளை திறக்கும் என நம்பலாம். படிக்க, பரவலாக்க, பரிசளிக்க நல்ல நூல்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button