தகிடுதத்தங்களின் தாண்டவம்
மகேந்திரா கல்விக் குழுமம் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டல் விழா மதுரையில் நடந்தது. அப்போது மதுரை கலெக்டராக இருந்த சகாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருக்கு ஒரு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதை அவர் அன்புடன் பெற்றுக் கொண்டார். பின்னர் மைக் பிடித்தார். “இந்த விழாவில் பங்கெடுத்துக் கொண்ட மாணவ மாணவியரிடையே ஒரு போட்டி. யாருடைய பெயர் அருமையானத் தமிழ்ப் பெயரோ அவருக்கு இந்தப் பரிசு” என்று கூறிய சகாயம், விழாவில் தனக்குத் தரப்பட்ட பரிசு நினைவுகளை மாணவர் சமுதாயத்தின் பக்கம் திருப்பி விட்டார்.
“லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து” என்று கூறிவரும் சகாயம், தனது இருக்கைக்குமேல் இந்த வாசகத்தை எழுதி வைத்துள்ளார். அரசின் எந்தவிதமான அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யாத, கரைபடாத கரம் என்று பெயர் எடுத்த சகாயத்துக்கு தமிழக அரசு செல்வாக்கு மிக்க பதவியைத் தருவதே கிடையாது. தெரியாமல் தந்துவிட்டாலும் அதில் அவர் மாதக்கணக்கில் மட்டுமே நீடிக்க முடியும்.
ஏன் தெரியுமா? அரசின் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும் கையூட்டுக் கலாச்சாரத்தின் தாக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. இதற்கு ஒத்துப்போகிறவர்கள் மட்டுமே ‘நல்ல’ பதவிகளில் அமர முடியும். மற்றவர்கள் ஏதோ ஒரு பதவியில் இருக்கட்டும் என்று கிடத்தப்படுவார்கள்.
இறையன்புவும் சகாயத்தைப் போன்று ஒழுக்கசீலர். அதனால் தான் அவருக்கும் திறனுக்கு ஏற்ற பதவி கிடைப் பதில்லை. தெரிந்தோ தெரியாமலோ இத்தகைய அதிகாரிகள் சில நல்ல பதவிகளில் அமர்ந்து விட்டால் அந்தப் பதவிக்குரிய அதிகாரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி துறையை மேம்படுத்தி விடுவார்கள். அந்தவகையில் கைத்தறித்துறையை சகாயமும், தொல்லியல் துறையை இறையன்புவும் செழுமைப் படுத்தியதை உதாரணமாகக் கூறலாம். வாஜிராம்-ரவி ஐ.ஏ.எஸ். பயிற்சி நிலையத்தில் படித்து முதல் ரேங்க் எடுத்த மாணவன் வேறு ஒரு நிறுவனத்தில் படித்து முதல் தகுதி பெற்றதாகப் பேட்டி தந்தான். கர்க் என்ற அந்த மாணவன், ஒரு லட்ச ரூபாய் கையூட்டு பெற்றுக் கொண்டு, தன்னை உருவாக்கிய நிறுவனத்துக்கே துரோகம் செய்தான். இப்படிப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரசுப் பொறுப்புக்கு வந்தால் கையூட்டுக் கலாச்சாரம் களைகட்டாமல் என்ன செய்யும்?
உதயசந்திரன்
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய மானவை கல்வியும், மருத்துவமும். கல்வியை பள்ளிக் கல்வி, உயர்கல்வி எனப் பிரித்து இரு அமைச் சர்களிடம் ஒப்படைத் துள்ளார்கள். பள்ளிக் கல்வியைப் பொருத்தவரை செங்கோட்டையன் அமைச்சர் பொறுப்பு ஏற்றதில் இருந்து சுறுசுறுப்பு கொண்டது. புதுப்புது அம்சங்கள் அரங்கேறி, கல்விக்கூடங்கள் மெருகேறி வந்தன. இவற்றுக்கு எல்லாம் காரணம் புதிதாகப் பொறுப்பு ஏற்ற உதயச்சந்திரன் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தான் என்று இப்போது தான் தெரிகிறது. அதேபோல பல்கலைக்கழக முறைகேடுகளைக் களைவதில் தீவிர கவனம் செலுத்தி வந்த சுனில் பாலிவால் கூட வியத்தகு நடவடிக்கைகள் எடுத்து வந்தார்.
பள்ளிக்கல்வித் துறையில் வேகமாக பணிகளை முடுக்கி விட்டார் உதயசந்திரன். சீர்திருத்த அறிவிப்புகள், பாடத்திட்ட மாற்றம், அதற்கான கருத்தரங்குகள் என்று தமிழகம் முழுவதிலும் பள்ளிக் கல்வித்துறையின் மாறுபாடுகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இந்த ஆட்சியில் செயல்படக் கூடிய துறைகளாக விளங்கிய ஒன்றிரண்டில் பள்ளிக் கல்வித்துறை முக்கியமானதாக இருந்தது என்றால் அது மிகையில்லை. இதுவரையிலும் அரசு வழங்கிக் கொண்டிருக்கும் இலவச செருப்புகளை அரசுப்பள்ளி மாணவர்கள் ஏன் விரும்பி அணிவதில்லை என்பதில் ஆரம்பித்து, இலவச புத்தகப்பைகளில் வைக்கக் கூடிய புத்தக அறைகளின் எண்ணிக்கை, தைத்து வழங்கப்படும் சீருடைகளில் உள்ள குறைபாடுகள் வரைக்கும் பல்வேறு கீழ்மட்ட பிரச்சினைகளையெல்லாம் உதயச்சந்திரன் தெரிந்து வைத் திருந்தார். இதையெல்லாம் ஒவ்வொன்றாகச் சரி செய் வதற் கான வழிமுறைகளைப் பற்றியும் அவரிடம் தெளிவு இருந்தது. ‘இதில் எல்லாம் இவர் கை வைத்தால் எத்தனை கோடி ரூபாய் லஞ்சமாகச் செல்வது தடுக்கப்படும்’ என்று கேள்வி எழாமல் இல்லை. எத்தனை டெண்டர்கள்? எத்தனை ஒப்பந்ததாரர்கள்? எத்தனை கமிஷன்கள்? எல்லாவற்றுக்கும் மிகப்பெரிய தடுப்பணையை மெல்ல மெல்லக் கட்டிக் கொண்டிருந்தார். எல்லாமே சில மாத காலம் தான். “வல்லவர்கள் எங்களுக்குத் தேவை இல்லை. எங்களுக்கான ‘நல்லவர்கள்’ தான் தேவை. மற்றவர்கள் எங்கோ அமர்ந்து குப்பை கொட்டிக் கொண்டு இருங்கள்” என்று கூறுவதாகத்தான் கருத முடியும்.
உத்தமர்கள் ஊடகப் பார்வையில் படுவதே இல்லை
நரசிம்மராவ் தன் மைனாரிட்டி அரசைக் தக்கவைத்துக் கொள்ள பல யுக்திகளைப் புகுத்தினார். அதில் ஒன்றுதான் எம்.பி.களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி. இதைப் பார்த்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் அறிவிக்கப்பட்டு அமலாகிறது. இந்த நிதி ஒதுக்கீட்டில் அப்பட்டமான ஊழல் ஒதுக்கீடு இருக்கிறது என்பது நாடறிந்த ரகசியம். ஓரிருவர் மட்டுமே நேர்மையாளர்களாக இருந்து வந்தனர். இத்தகைய உத்தமர்கள் தான் ஊடகப் பார்வையில் படுவதே இல்லையே!
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் அஸ்லம் பாஷா ஆகியோர் தமது 5 ஆண்டு கால எம்.எல்.ஏ. பதவி வகிப்பின் போது தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து கொடுத்தனர். “திட்டம் சரியாக அமலாக வேண்டும், அது போதும்” என்று கருதிய அவர் கமிஷன் வாங்கிக்கொள்ள மறுத்து விட்டார். மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகள் அதிசயித்துப் போயினர். மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு ஏறுபோல் பீடுநடை பயிலலாம்.
தமிழகத்துக்கு வர இருந்த பல உயர்தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்ட காரணங்களை அலசினால் பயங்கரங்கள் படம் எடுத்து ஆடும். லஞ்சப் பேரம் படியாததால் ஏற்பட்ட இடப் பெயர்ச்சி என்பதுதான் இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம்.
“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்ற பழமொழியைத் தமிழக ஆட்சியாளர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருப்பதின் அடையாளங்கள் அப்பட்டமாகத் தெரிகின்றன. இதனால் தான் நேர்மையான அதிகாரிகளின் திறன்கள் முடங்கிக் கிடக்கின்றன. சுயலாபத்தை நோக்கி அரசியல் சக்கரங்களைச் சுழற்றும் ஆட்சியாளர்களின் காலம் இப்படித்தான் இருக்கும் என்பதற்கான சான்றுக் காட்சிகள் தான் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.
வீட்டு நலனே பிரதானம்
நாட்டு நலனில் அக்கரைக் கொண்ட நாட்டம் கொண்டோர் தான் அக்காலத்தில் அரசி யலுக்கு வந்தனர். தலைமைப் பொறுப்புகளையும் வகித்து அவற்றுக்கு பெருமை சேர்த்து விட்டுப் போனார்கள். இப்போதோ தம் வீட்டு நலனே பிரதானம் என்று கருதுகின்றனர். இதனால் நாட்டையே கேட்டின் வழியில் திசைதிருப்பி விடுகின்றனர். “கொடுத்தால்தான் வேலை நடக்கும்’’ என்ற நிலை உருவாகி விட்டால்,”கொடுத்துத் தொலைப்போம்” என்று மக்களும் ஊழலுக்கு உடந்தை ஆகி விடுகிறார்களே!
தேவைகள் அதிகமாக இருக்க, தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தால் அங்கு கையூட்டுக் கலாச்சாரம் இயல்பாகவே பிறந்து விடும்.
எந்த பொருட்களுக்கு மவுசு அதிகமாக இருக்கிறதோ அந்தப் பொருட்களைப் பெரும் அளவில் பெருக்கி, எளிதாகப் பெறும் வகையில் நிலைமையை மாற்றினால் கையூட்டுக் கலாச்சாரம் ஒழிந்து விடும்.
ஆனால் இத்தகு உணர்வுகளில் கவனம் செலுத்திட அரசினர்களுக்கு நேரமேது? தங்கள் தகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ளவே அவர்கள் தகிடுதத்தங்களைத் தாண்டவப் படுத்தி வந்திருக்கின்றனரே!
ஜனநாயக அரசியலில் தேர்தல் நடைமுறைகள் மிக அதிகமான செலவு பிடிக்கின்ற அம்சங்களாகி விட்டன. இவற்றை மனதில் வைத்துத்தான் அரசியல்வாதிகள் தங்கள் கஜானாக்களை நிரப்பி வருகின்றனர். தேர்தல் நடைமுறையின் செலவினத்தைக் கட்டுப்படுத்தினால் நாட்டில் பல முறைகேடுகளை ஒழித்து விடலாம் எனக்கருதி தேர்தல் கமிஷனின் தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சில பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பணம் செய்து இருக்கிறார். அவை உறிப் பானையில் உறங்கும் ஊறுகாய்கள் போலக் கிடக்கின்றன.