சுவனம் நமது வீடுகளில்-நூல் விமர்சனம்
குடும்ப வாழ்வில் கவனமாக இருப்பின் சுவனம் நிச்சயம் என்று கட்டியம் கூறுகிறது மௌலவி நூஹ் மஹ்லாரி எழுதிய ‘சுவனம் நமது வீடுகளில்’ எனும் நூல். வரலாற்றை அதன் போக்கில் ஆராய்ந்தால் குடும்பத்தையும் உறவுகளையும் முறையாக பேணியவர்களே சிறந்த தலைவர்களாக மிளிர்ந்துள்ளனர்.
மொத்தம் 14 தலைப்புகளில் உறவுகளை வகைப்படுத்துகிறார் நூலாசிரியர். தாய், தந்தை, மகள், மகன், மனைவி, உறவினர்கள், நட்பு என தனி மனிதனின் குடும்ப தொடர்பை இஸ்லாமிய வழியில் நமக்கு விளக்குகிறார். எளிய மொழிநடையில் அனைத்து சமூக மக்களும் வாசித்து நல்வழி பெற உதவும் நன்னூல். மேடைபேச்சாளர்களுக்கும், தொடர் சொற்பொழி வாளர்களுக்கும் குறிப்புதவிக்கு உதவும் தரவுகள் நிறைய உள்ளன. ஒரு தேர்ந்த மனோதத்துவ நிபுனரைப் போன்று நம்மை நாமே சுயப்பரிசோதனை செய்து கொள்ளவும், தவறுகளை திருத்திக் கொள்ளவும் செறிவான கருத்துக்களால் நிரம்பிய நூல் இது என்றால் மிகையல்ல.
குடும்ப உறவுகளின் உண்ணதங்களை திருக்குர்ஆன் நபிமொழி மற்றும் பொது வெளி உதாரணங்களோடு விளக்கி இருப்பது பாராட்டுதலுக்குரியது. திறந்த மனத்தோடு இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனது கண்களில் நீர் கசிவதை தடுக்க முடியாது. தாய்மையை போற்றும் உதாரணங்கள், உறவுகளைப் பேண காட்டும் மேற்கோள்கள் வாசகர்களை சீர்படுத்துபவை. அனைத்து வயதினரும் அவரவரின் தற்கால நிலையை சீர்தூக்கி உணரவைக்கும் காலக் கண்ணாடியாகவும் இந்நூல் அமைந்துள்ளது.
ஒரு நூலின் வெற்றி என்பது வாசித்து முடித்தப்பின் பெரும் தாக்கத்தை மனத்தில் ஏற்படுத்த வேண்டும். இந்நூல் அப்படி ஒரு தாக்கத்தை மட்டுமல்ல சுயபரிசோதனையையும் உடன் மாற்றத்தையும் உண்டாக்கும். ஒட்டு மொத்தமாக குடும்ப பற்றியும், குடும்ப உறவுகள் பற்றியும் ஒரு நெகிழ்வோடு தெளிந்த நீரோடைப் போல உள்ளத்திற்கு குறிர்ச்சியையும் நேர்வழியையும் காட்டும் பாதையாக இந்நூல் மிளிர்கிறது.