சமூக நலத்துறை வழியாக நடத்தப்படும் குடும்ப ஆலோசனை மையம் மற்றும் பெண்கள் பாதுகாப்புச் சட்ட விபரம்

ஏ. அக்பர் சுல்தான்

வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் கூடுதலான பணி சம்மந்தப்பட்ட மன உளைச்சல் ஆகிய காரணங்களால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குடும்ப ஆலோசனை மையங்கள் மூலம் பாதிக்கப்பட்ட தம்பதியினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இக்குடும்ப ஆலோசனை மையங்கள் இப்பிரச்சனைகளில் தலையிட்டு தார்மீக மற்றும் மனரீதியான ஆலோசனைகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மையமாக திகழ்கிறது. குடும்ப ஆலோசனை மையங்களில் நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த ஆலோசகர்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், குடும்ப வன்முறை மற்றும் குடும்ப தகராறுகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆலோசனை, பரிந்துரை மற்றும் மறுவாழ்வு அளிக்கும் சேவைகள் அளிக்கப்படுகிறது.

இது அவர்கள் பிரச்சனைகளை கையாள உதவுகிறது. மேலும் வரதட்சணை கொடுமை, குடிப்பழக்கம் மற்றும் எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட நபர்களும் அவர்களின் பிரச்சனைகளை இம்மையங்களை அணுகி தெரிவித்து தேவையான ஆலோசனைகள் பெறலாம்.

பெண்கள் பாதுகாப்புச் சட்டம் வன்முறை இவ்வுலகிலே சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால், அனைவருமே நம்மைப் பெற்றெடுத்த தாய்மார்களைத்தான் கூறுவோம்.தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின்ஆரம்பக் காலக்கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்குப் பின்புலத்திலும் பெண்ணின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்திலே பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை இட்டுச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

ஆனால், நடைமுறையில் நாம் காண்பதோ நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.சீரும், சிறப்போடும் நடத்தப்பட வேண்டிய பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு இலக்காவது கொடுமையானது.

ஆணாதிக்க சமூக கட்டமைப்புகளில் சிக்கி, ஆண்களின் ஆதிக்க சூழ்ச்சிகளால் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப் படுகிறவர்கள் பெண்களும், குழந்தைகளுமே. பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும்.15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியானமற்றும்பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப் படுகின்றனர்.திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடர்கின்றனர்.

பெண்கள் பாதுகாப்புச் சட்டம் இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் பெண்களுக்கு பொருத்தமானதாக உள்ளது. அரசுத்துறையாகவோ, தனியார் துறையாகவோ, வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலோ அங்கு பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம். மேலும், பாலியல் வன்முறைக்குத் தூண்டிய அதிகாரிகளையோ, ஏனைய ஆண்களையோ, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கலாம். வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பட்டால்,பெண்கள் பல பணிகளில் பங்கெடுத்து நாட்டின் ஒட்டு மொத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்யலாம்.

இந்த பாதுகாப்புச் சட்டம் “பாலியல் வன்முறை’ என்றால் என்ன என்ற தெளிவான விளக்கத்தையும் வழங்குகிறது. “பெண்கள் பணி செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தி தராத நிலையே பாலியல் வன்முறை, என்பதை வலியுறுத்தி, அத்தகைய செயல்களை அறவே தடைசெய்ய முயற்சிக்கிறது. பலதுறைகளில் பணி செய்யும் பெண்களுக்கு மட்டுமல்ல இச்சட்டம். ஒரு நிறுவனத்திற்கு வந்துபோகும் பெண்களாக இருந்தாலும், படிக்கின்ற பெண்கள்,பள்ளி, கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி செய்வோர், மருத்துவமனைகளில் நோயுற்றிருப்போர் முழுமையான பாதுகாப்பினை வழங்க முற்படுகிறது.இச் சட்டத்தின் கீழ் ஒவ்வோர் அமைப்பிலும் உள்ளார்ந்த புகார் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் புகார் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

இச்சட்டத்திற்கு கீழ்ப்படியாத அதிகாரிகள் சிறைத் தண்டனையும், 50,000/- க்கும் அதிகமான அபராதத்தையும் சந்திக்க நேரிடும். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது. இச்சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு. பெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பணி இடங்களில் தேவையற்ற வன்முறைச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் இச்சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button