இரட்டை இலை இனி துளிர்க்குமா?

கும்கிப்பாகன்

எம்.ஜி.ஆரால் துளிர்ந்த… ஜெயலலிதாவால் தளிர்ந்த இரட்டை இலை, தற்போது ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். இணையர்களால் சருகாகி விடுமா என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிரூபிக்கும் நேரம் நெருங்கிவிட்டது.

இரட்டை இலை என்ற சின்னம் தமிழக அரசியலில் ஒரு மந்திரக் கோலாகவே செயல்பட்டது. இதற்குக் காரணம் அதனை முதலில் எம்.ஜி.ஆரும் பின்னர் ஜெயலலிதாவும் ஏந்திச் செயல்பட்டனர். அதே சின்னத்தை கையிலெடுத்துக் களமிறங்கும் ஈ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். கூட்டணியினருக்கும் அந்த வெற்றியிடம் கிடைக்குமா? அது வெற்று இடம் ஆகிவிடுமா? வலிமை மிகுந்த வீச்சுத்திறன் கொண்ட வாளைக் கையிலேந்திய வீரன், போர்க்களத்தில் குதித்து வெற்றிகளைக் குவித்தான். அதே வாளை ஒரு கோழையும் கையிலேந்திக் களமாடினால் என்னாகும்? இப்படித்தான் அரசியல் நோக்கர்கள் கணக்குப் போடுகின்றனர்.

கடந்த 1967ம் ஆண்டு, முதல்வர் பொறுப்பு ஏற்ற அண்ணா, இரண்டே ஆண்டுகளில் புகழின் உச்சத்தில் இருந்தபடியே மறைவு எய்தினார். எம்.ஜி.ஆரும் மெச்சத்தகு உச்சபட்ச உயரத்தை எட்டி இருந்தபோது தான் மறைந்தார். ஆனால் இரட்டை இலைச் சின்னமோ இதற்கு நேர்மாறான நிலையை சந்திக்கப் போகிறது. இரட்டை இலை முடக்கப்பட்டது. இப்போது மீண்டும் அது அதிமுகவுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இனி, சூரியக் கதிர்களின் வெப்பத்தால் சருகாய் உலரும் சூழல் வருமோ என்றே அனுமானம் செய்ய முடிகிறது.

பீதியில் அதிமுகவும் பாஜகவும்

இதற்குப் பல காரணங்கள் உண்டு. எனினும் தினகரன் ஒரு முக்கியக் காரணம். “விலையை வைத்து இலையைக் குலைத்து விடுவாரோ?” என்ற பீதியில் அதிமுகவினர் மட்டுமல்ல; பாஜகவினரும் உள்ளனர். அதனால்தான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் “தினகரனுக்குத் தொப்பிச் சின்னம் தரக்கூடாது” என்று பகிரங்கமாகக் கூறி இருக்கிறார். “யாருக்கு இந்த சிக்னல்?” என்று தினகரன் கமன்ட் அடித்திருக்கிறார்.

ஆர்.கே.நகரில் தினகரன் வென்று விடுவாரோ என பயந்து தேர்தலை நிறுத்தியாகி விட்டது. தினகரனைக் கைது செய்து அடைத்தாகி விட்டது. நீதிமன்றம் விடுவித்தது வேறு விஷயம். சசிகலா குடும்பத்தின் மீது வருமானவரிச் சோதனைப் படை எடுப்பு நடத்தியாகி விட்டது. இரட்டை இலை, அதிமுக கட்சி, கொடி என அனைத்தும் தினகரனிடம் இருந்து பிடுங்கியாகி விட்டது. இன்னும்கூட ஏன் தினகரனுக்குப் பயப்படுகிறார்கள்? இவர்களே தினகரனைத் தமிழகத்தின் பிம்பம் மிக்கத் தலைவராக மாற்றி விடுவார்களோ என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது.

கட்சியை ஓ.பி.எஸ். மூலம் உடைத்தனர். பின்பு ஈ.பி.எஸ். வசம் இருந்து சசி குடும்பத்தைப் பிரித்தனர். கூடவே தினகரனும் ஓரங்கட்டப்பட்டார். 18 எம்.எல்.ஏ.க்களின் பதவிகளும் பறித்தாயிற்று. இவ்வளவுக்குப் பிறகும் தினகரன் தெம்பாக அரசியல் நடத்தி வருவதுதான் வியப்பை அளிக்கிறது.

கண்ணீர்செல்வமான பன்னீர் செல்வம்

இரட்டை இலை, அதிமுக கட்சி, கொடி இவை அனைத்தும் எடப்பாடி அணிக்கே என்ற அறிவிப்பு வந்த மறுநாளில் இருந்தே எடப்பாடியின் அணுகுமுறையால் பன்னீர்செல்வம்… கண்ணீர் செல்வமாகக் காட்சி அளித்து வருகிறார். எது தேவையோ அது கிடைத்து விட்டது. இனி பன்னீரைக் கை கழுவ வேண்டியது தான் என இயங்கத் துவங்கி விட்டதை தினந்தோறும் நடக்கும் அரசியல் கூத்துகள் அடையாளம் காட்டி வருகின்றன.

தன்னை முதல்வர் இருக்கையில் அமர வைத்த சசிகலாவையே தூக்கி வீசியவர் எடப்பாடி. இந்நிலையில் பன்னீர் எம்மாத்திரம் என்பதே இப்போது யதார்த்தம். டில்லி ஆட்சியாளர்களும் எடப்பாடியா… பன்னீரா என்ற பந்தயத்தில் எடப்பாடியின் பக்கம் பார்வை திரும்புவதும் தெரிகிறது. உயர் பதவியில் இருப்பவர் தானே முடிவு எடுத்துச் செயல்படுத்த முடியும்!

எடப்பாடிக்கு இருக்கும் அரசியல் நெருக்கடிகளை விட பன்னீருக்கே அதிகம். அவரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் பன்னீருக்கு எதிரான தீர்ப்பு வந்தால் பன்னீருக்கும் மாபா பாண்டியராஜனுக்கும் மந்திரி பதவிகள் பறிபோய் விடும். பின்பு பன்னீர் மீண்டும் பெரிய குளத்தில் தண்ணீர் எடுத்து டீ போடத்தான் போக வேண்டும்.

தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி இழந்த பரிதவிப்பில் உள்ளனர். இவர்களையும் தினகரன் ஆதரவு எம்.பி.க்களையும் அரவணைத்து மீண்டும் பதவிகளுக்கு உத்தரவாதம் தரச்செய்யும் திரைமறைவுத் திருவிளையாடல்களுக்கான பணிகளும் தயார் நிலையில் தான் இருக்கின்றன. பன்னீர் அணி எம்.எல்.ஏ.க்களை பதவி இழக்க வைக்கும் வகையில் தீர்ப்பு வந்தால் தினகரன் ஆதரவாளர்களை வைத்து தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ஆட்சித் தலைமை திட்டமிடுகிறது.

செஞ்சோற்றுத் துரோகம்

ஏற்றிய ஏணியையே எட்டி உதைத்தவர்களுக்கு இந்த முடிவுகள் எல்லாம் மிகச்சாதாரணம் தானே! ‘செஞ்சோற்றுக் கடன்’ என்ற உயர் தனிப் பண்பு நலனைக் கம்பன் விளக்கி இருக்கிறான். தமிழக அரசியலோ செஞ்சோற்றுத் துரோகத்தைச் சந்திக்கிறது. சசிகலாவுக்கு எடப்பாடி செய்தது, அதிமுகவுக்கு பன்னீர்செல்வம் விதித்தது, இரட்டை இலையைத் தோற்கடிக்க தினகரன் செய்வது என பட்டியல் நீளும்.

ஆர்.கே. நகரில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர் களையே அக்கட்சிகள் களமிறக்குகின்றன. ஆனால் அதிமுகவில் பன்னீர் ஆதரவாளர் நிற்க வேண்டுமா? எடப்பாடி விழையும் நபர் போட்டியிட வேண்டுமா? இந்த மோதல் முரண்பாடு வெடித்து வருகிறது.

மனங்கள் இணையவில்லை

இரட்டை இலையை மதுசூதனன் தலைமையிலான அணிக்குத் தருவதாகவே தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஆனால் அந்தோ… மதுசூதனனையே மீண்டும் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் களமிறக்க அதிமுக கட்சித் தலைமை தயங்குகிறது. இதுவும் செஞ்சோற்றுத் துரோகத்தின் கணக்கில் வரும். மதுசூதனனும் பன்னீர் அணி என்பதால் தான் நிலைமை தடுமாறுகிறது. இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் மைத்ரேயன், “மனங்கள் இணையவில்லை” என்று வெடித்து இருக்கிறார். இவரைத் தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனும் ஒத்து ஊதிவிட்டார். முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருந்தபடி தான் முதல் களமாக ஆர்.கே.நகரில் தேர்தலை சந்திக்கிறார்கள்.

அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல்களில் முறைகேடான பணப் பரிவர்த்தனை, கணக்கில் வராத பணபட்டுவாடா என்று கூறித்தான் தேர்தலை நிறுத்தினார்கள். வழக்குகள் அப்படியே உள்ளன. ஆனால் தேர்தல் முடிந்து விட்டது. ஆர்.கே.நகரிலும் இதே நிலை. முதல் அமைச்சர் மீது கூட புகார்கள் உண்டு. ஆனால் இவையும் அப்படியே நிலுவையில் உள்ளன. ஆனால் தேர்தல் மட்டும் வந்து விட்டது. இப்படிப் பார்த்தால் முறைகேடுகளைப் பற்றி கவலை இல்லை. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது, பின்னர் கிடப்பிலே போட்டுவிட வேண்டும் என்பதுதான் எண்ணமா என்று எண்ணத் தோன்றுகிறது. சின்னத்தை வைத்துச் சின்னத்தனமாகப் பேசும் பாங்கு இனி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் மாறிப்போய் விடும் என்றே கணிக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இரட்டை இலையை இப்போதைய ஆட்சியாளர்கள் கொட்டிக் கவிழ்த்து விடுவார்களோ என்ற அச்ச உணர்ச்சி அதிமுகவின் அடித்தட்டுத் தொண்டர்களிடம் இருக்கத்தான் செய்கிறது.

இரு பிரிவுகள்

அதிமுகவில் இரு பிரிவுகள் உண்டு. கட்சியிலோ, ஆட்சியிலோ, உள்ளாட்சியிலோ (அதுதான் முடிந்து விட்டதே!) கூட்டுறவு சங்கங்களின் பதவிகளிலோ, வாரியங்களிலோ… தனித்தனி அரசுக் குழுக்களிலோ இடம்பெற்றவர்கள் என்பது ஒரு பிரிவு. எந்தவித பதவியும் இல்லாமல், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துகின்றவர்கள் என்பது மற்றொரு பிரிவு. இதில் முதலாமானவர்களில் தான் கோஷ்டியுணர்வு. இருக்கும் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இனி அடுத்தக்கட்ட உயரத்துக்கு எப்படித் தாவவேண்டும் என்பதே இவர்களின் இலக்கு. இரண்டாம் தரப்பினரோ இந்த நோக்கம் எதுவுமே இன்றி, “கட்சி காப்பாற்றப்பட வேண்டுமே, தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமே” என்பதில்தான் அக்கரை செலுத்தி ஏங்கிக் கிடக்கின்றனர். இதுபோன்ற ஏழை, பாமர அடித்தட்டுத் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கும் காலம் எல்லாம்தான் மலையேறி விட்டதே!

வெளிச்சம் பாய்ச்சும்

ஜெயா டி.வி.யில் திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகனின் விரிவான பேட்டி, நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் திமுக தலைவர்களின் இணக்கச் செய்திகள், தினகரனின் அரசியல் விமர்சனங்களில் மு.க.ஸ்டாலின் மீதான தாக்குதல்கள் அடக்கி வாசிப்பு என பலவாறான அணுகுமுறைகளை வைத்துப் பார்த்தால் தினகரனின் முதல் எதிரி திமுக அல்ல.

திமுகவைத் தோற்கடிப்பதும் குறிக்கோள் இல்லை. எடப்பாடி – பன்னீர் அணியை வீழ்த்த வேண்டும் என்பதே. இதில் பன்னீரை அகற்றும் பணியை எடப்பாடியே செய்து விடுவார். எனவே எடப்பாடியை முதல்வர் இருக்கையில் இருந்து எழுப்ப வேண்டும் என்பதே தினகரனின் இப்போதைய இறுதி இலக்கு.

ஆர்.கே.நகரில், தான் வெற்றிபெற வேண்டும் என்பதை விட இரட்டை இலைக்கு டெபாசிட் போய்விட வேண்டும் என்பதில் தான் தினகரனின் கவனம் இருப்பதாகவே தெரிகிறது. அதிமுகவுக்குக் கிடைக்கும் வாக்குகளைப் பிரிப்பதில் அவர் பெரும் பங்கு ஆற்றுவார். இதனால் திமுகவின் சூரிய ஒளி தொகுதி எங்கும் வெளிச்சம் பாய்ச்சும் என்பதே இப்போதைய யதார்த்தம். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவின் பின்னர் எடப்பாடியின் அரசியலில் தடமாற்றமும் அதில் தடுமாற்றமும் இருக்கும் என்பதே தற்போதைய தமிழக அரசியல் நிலவரமாக இருக்கிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button