இது பள்ளிவாசல் மீட்புப் போராட்டம் மட்டுமல்ல…

சுதந்திர இந்தியாவில் பல கோடி மக்களை சாட்சியாக வைத்து பகலில் அரங்கேற்றப்பட்ட பச்சைப் பயங்கரவாதமான பாபரி மஸ்ஜித் இடிப்பு நிகழ்ந்த டிசம்பர் 6 அன்று, தமிழகம் மீண்டும் கொந்தளித்து அடங்கியுள்ளது.பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு கால் நூற்றாண்டு கடந்து விட்டாலும், நீதி கிடைக்கும் வரை இந்த நெடிய போராட்டம் தொடர்ந்தே தீரும் என்பதை, பயங்கரவாத எதிர்ப்பு நாளில் பங்கேற்ற பல லட்சம் இதயங்கள் துடிப்போடு நிரூபித்துள்ளன.

தமுமுகவின் சார்பில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நாள் போராட்டக் களத்தில், பங்கு கொளவர்.பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு பிறந்தவர்கள் பெரும்பான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்வுரிமை மற்றும் வழிபாட்டு உரிமைக்கான அறப்போர் வாழையடி வாழையாய் வரலாறு படைக்கும் வகையில் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணமாகும்.

இந்நிலையில் பாபரி மஸ்ஜித் மீட்புக்காகப் போராடுவோரை நோக்கி நீட்டப்படும் வினாக்கணைகள் சிலவற்றிற்கு விடையளித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.என்றோ இடிக்கப்பட்டு விட்ட ஒரு பள்ளிவாசலுக்காக இன்றும் போராடுவது தேவையா?

உ.பி.யில் இடிக்கப்பட்ட பள்ளிவாசலுக்காகத் தமிழகத்தில் போராட்டம் தேவைதானா?ஒரு பயங்கரவாத சம்பவத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவதன் மூலம் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படாதா?1857ல் ராமர் திண்ணையில் வழிபாடு தொடங்கப்பட, 1859ல் பிரிட்டிஷ் அரசு பள்ளிவாசலுக்கும் திண்ணைக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பியது.

1883லிருந்து ராட்சபுத்ராவில் கோவில் கட்ட அனுமதி கேட்டு எடுக்கப்பட்ட முயற்சிகள் தள்ளுபடி செய்யப்பட்டன.கூடாரத்திற்குள் தலையை மட்டும் முதலில் நுழைத்த ஒட்டகம் பிறகு ஆளையே வெளியேற்றி தான் ஆக்கிரமித்துக் கொண்ட கதைதான் பாபரி மஸ்ஜித் வரலாறு என்றால் மிகையில்லை.1528ல் பாபரின் தளபதியான மீர்பாகியால் கட்டப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பள்ளிவாசலில் 450 ஆண்டு காலம் தொழுகை நடந்து வந்துள்ளது.

1949 டிசம்பர் 22 இஷா தொழுகைக்குப் பிறகு நள்ளிரவில் திருட்டுத்தனமாக பள்ளிவாசலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் மிம்பர் படி மீது சிலைகளை வைத்துவிட்டு ராமர் எழுந்தருளி விட்டார் என்று கதை கட்டி பரப்புரை படிப்படியாக வளர்ந்து, பள்ளிவாசலையே 1992 டிசம்பர் 6ல் தகர்த்த வரலாறு அனைவரும் அறிய வேண்டிய வரலாறு. பாபரி மஸ்ஜித் மீட்புக்கான போராட்டம் என்பது ஒரு பள்ளிவாசலை மீட்பதற்கான போராட்டம் மட்டுமன்று. இந்தியாவின் சமயச்சார்பின்மையையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்பதற்காக நடக்கின்ற போராட்டம் என்றால் மிகையில்லை.450 ஆண்டு காலம் தொழுகை நடந்துவந்த ஒரு பள்ளிவாசல் முஸ்லிம்களிடமிருந்து சதித்திட்டத்தின் மூலம் பறிக்கப்பட்டு, தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பிறகு இடிக்கப்பட்டு, இன்றளவும் சுதந்திர இந்தியாவின் அவலமாக நிற்கிறது.

அதேநேரம் அத்துமீறி பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சிலைகள் அகற்றப்படவில்லை. வழிபாடு நடத்துதல் என்ற போர்வையில் அதன் கதவுகள் அபகரித்தவர்களுக்கு நீதிமன்றத்தால் திறந்து விடப்படுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு இடித்தவர்களுக்கு இதுகாறும் தண்டனையில்லை. முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்ட இடத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் மூன்றாகப் பங்குவைத்து தீர்ப்பளிக்கிறது.

பாபரி மஸ்ஜித் இடிப்புக் குற்றத்தை நீண்ட நெடிய காலங்கள் விசாரித்து, குற்றவாளிகளை நீதிபதி லிபரான் ஆணையம் சுட்டிக்காட்டிய பிறகும் யார் மீதும் நடவடிக்கை இல்லை.

பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சில வழக்குகளில் நள்ளிரவுகளிலும் கூடி, தூக்குத் தண்டனையை அறிவிக்கிற நீதிமன்றம், இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு யோசனையும் சொல்கிறது.பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கும், பாபரி மஸ்ஜித் உரிமை வழக்கும் தீர்த்து வைக்க முடியாத சட்டச் சிக்கல்களைக் கொண்டவையா? என்றால் இல்லை.நீதிமன்றம் உரிமை வழக்குகளில் கோரும் ஆவணங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உள்ளபோதும் ஏன் நீதி கிடைக்கவில்லை.

இதுதான் விடை தேடவேண்டிய வினா. இதற்காகத்தான் இந்த மாபெரும் மக்கள் திரள் அறப்போராட்டம்.பாபரி மஸ்ஜிதை இடிக்கவிடாமல் தடுக்க மறுத்த சட்டவிரோத அரசும், அதன் காவல்துறை மற்றும் ராணுவப் படைகளும் நீதி கேட்டுப் போராடும் மக்களுக்குத் தடை விதிக்கின்றன.பாபரி மஸ்ஜித் என்ற ஒரு பள்ளிவாசலோடு மதவெறி பயங்கரவாதத்தின் தாகம் அடங்கப் போவதில்லை.காசி, மதுரா, என நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களை சங்பரிவாரத்தின் கொடுங்கரங்கள் குறிவைத்துள்ளன.

நடந்துள்ள பாபரி மஸ்ஜித் உரிமை மீட்புப் போராட்டம் வாழ்வுரிமை, வழிபாட்டுரிமை, சமூகநீதி இவற்றைக் காக்கும் போராட்டம்.இதற்கு நமது தொப்புள்கொடி உறவுகளான இந்து, கிறிஸ்தவ மக்களின் பேராதரவும் கிடைத்துள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால், இது இன்னொரு சுதந்திரப் போராட்டம்.இம்மண்ணின், சுதந்திரம் காக்க நிற்கும் கூட்டம், மதவெறிக்கு எதிராக மனிதநேயத்தை உயர்த்திப் பிடிக்கிறது. சட்டமீறலுக்கு எதிராக சட்டத்தின் ஆட்சியை வலியுறுத்துகிறது. நீதிக்கு இது ஒரு போராட்டம். நாளைய தலைமுறை நிச்சயம் இதனைப் பாராட்டும்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button