‘ஆட்டுக்குத்தாடி, நாட்டுக்கு ஆளுநர்’

நம் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருந்த கால கட்டத்தில் 1976ம் ஆண்டு கோட்டையில் உள்ள தலைமைக் செயலகத்தில் அப்போதைய தமிழக ஆளுநர் சுகாதியா செய்தியாளர் கூட்டத்தில் பேசியதும், அதிகாரிகளுடன் நேரடியாக உரையாடியதும் நினைவு படுத்தும் வகையில் கோவையில் தமிழகத்தின் இன்றைய ஆளுநர் புரோகித் ஆய்வு அமைந்துள்ளது.

கோவையில் தன் தங்குமிடத்துக்கு மாநில அரசு உயர் அதிகாரிகளை ஆளுநர் புரோகித் அழைத்தார். அதிகாரிகளும் விழுந்து அடித்துக் கொண்டு கோப்புகளுடன் ஆஜர் ஆகினர். முழுக்க முழுக்க நேர் காணல் முறையில் ஆளுநர் நடத்திய ஆய்வே ஒரு போர்க்களமாய் அமைந்தது. இது தான் இப்போது அக்கப்போர் களமாகி இருக்கிறது. ‘‘ஆட்டுக்குத் தாடி போலத் தான் நாட்டுக்கு ஆளுநர்’’ என்று அண்ணா குறிப்பிட்டார். ஆட்டுக்குத் தாடி அவசியம் இல்லை என்பது போலவே நாட்டுக்கும் ஆளுநர்கள் தேவை இல்லை என்பது அண்ணாவின் கொள்கை… அவர் முழங்கிய மண்ணில், ஆளுநரே ஆளுங்கட்சித் தலைவர் போலச் செயல்பட்டு இருக்கிறார்.

‘‘மாநிலத்தில் சுயாட்சி..மத்தியில் கூட்டாச்சி’’ என்ற முழக்கத்தை திமுக ஒலித்து வருகிறது. அதிமுக உருவானதும் எம்ஜிஆர் இந்த வாசகத்தைச் சற்று திருத்தி,‘‘மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்’’என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இதே போல திராவிட இயக்கத்தின் ஒவ்வொரு அரசியல் அங்கமும் மாநிலத்தின் கூடுதல்அதிகாரங்களைப் பற்றியே முரசொலித்து வருகின்றன. அந்த மாநிலத்தில் தான் இருக்கும் உரிமைகள் கூடஇழக்கும் நிலை உருவாகி வருகிறது. டில்லியில் ஆளுநர் தலையீட்டை அதன் முதல்வர் அர்விந்த் கோஜ்ரிவால் கடுமையாகக் கண்டித்து வருகிறார். புதுவையில் கிரண்பேடியின் கிளறுதலால் நாராயண சாமி…நடுரோட்டுச் சாமி போல கூக்குரல் எழுப்பி வருகிறார். ஆனால் தமிழகத்தில் மட்டும் மாநில உரிமைகளைப் பறி கொடுத்து விட்டுப் பறித்தவரைப் பாராட்டுகிறார் முதல்வர்‘‘கோவையைத் தொடர்ந்து மாவட்டந் தோறும் ஆய்வுகள் தொடரும்’’என்கிறார் ஆளுநர். ஆகா….ஓகோ…பேஷ்பேஷ்’’ எனத் தமிழக அமைச்சர்கள் வெண்சாமரம் வீசுகின்றனர். ‘‘மந்திரியைப் பார்த்து..பதவியை விட்டு எந்திரி’’ என்று டில்லியாளர்கள் கூறி விடக் கூடாதே என்ற படபடப்பு தமிழக ஆட்சியாளர்களிடம் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. பின்னால் வர இருக்கும் நிகழ்வுக்காக இப்போதே வெள்ளோட்டம் விட்டுப் பார்த்துக் கொள்கிறாரோ என்று தான்ஆளுநரின் நடவடிக்கையைப் பற்றி ஊகிக்க வேண்டி இருக்கிறது. முதல் அமைச்சர் மாவட்டவாரியாகச் சென்றுசெய்ய வேண்டிய ஆய்வை ஆளுநர் செய்கிறார். முதல்வரோ எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில்மாவட்டவாரியாக அரசு செலவில் அரசியல் மஞ்சள் குளித்துக் கொண்டு இருக்கிறது.

தென்னக முதல் அமைச்சர்கள் சங்கம் அமைக்கப்பட்டு அதில் எம்ஜிஆர் என்.டி.ஆர் போன்ற மக்கள் செல்வாக்குமிக்கத் தலைவர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்களைப் பெற முயன்றனர். இந்த அமைப்பின் மூலகர்த்தாவே எம்ஜிஆர் தான். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியையே அதிர வைத்த இந்தஅமைப்பு இப்போது கோப்புத் தொட்டி துயில் கொள்கிறது. எடப் பாடி போன்ற முதல்வர்கள் தாலாட்டு பாடித்தூங்கவைத்து வருகின்றனர். கோவை ஆய்வின் போது அந்த அரங்கினுள் நுழைய அமைச்சர் வேலுமணி முயன்றார் முடியவில்லை. அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பால சுப்ரமணியம் முனைந்தார். முறிந்து போனார். அமைச்சரும், ஆளும்கட்சி எம்.பி.யும் கூட அனுமதிக்கப்படாமல் தமிழக அரசு அதிகாரிகளின் ஆய்வு நடத் தப் பட்டது. என்பதே அந்த அமைச்சரோ ஆத்திரத்தை அடக்கி வைத்துக் கொண்டு ஆளுநருக்கு ஆரத்தி எடுக்கிறார். தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது. தலைமைச் செயலகத்தில் ஆளுநர் அலுவலகம் உண்டு. ஆனால் அதில் ஆளுநர்கள் பிரவேசம் செய்வதில்லை. அவ்வப்போது துப்பரவுப் பணியாளர்கள் சென்று சுத்திகரிப்புப் பணியைச் செய்து தூசு தட்டிவிட்டு வருவதைத்தான்செய்து வந்தார்கள். ஆனால் இப்போதே அந்த அறை புதுப் பொலிவுக்குத் தயார் ஆகிக் கொண்டு இருக்கிறது. தமிழக சட்டசபை தான் இரட்டைத் தலைமைகளைக் கண்டது. இனி தமிழக அரசாங்கமும் இரட்டைத் தலைமையைச் சந்திக்க வேண்டி இருக்குமோ என்ற அச்ச உணர்ச்சி தமிழக அரசியல் ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தாலும் மு.க.ஸ்டாலின் இந்த நிலையைக் கடுமையாகக் கண்டித்து நாள்தோறும் முழக்கம் எழுப்பி வருகிறார். முதல்வர் செய்ய வேண்டிய கடமையை மு.க.ஸ்டாலின் செய்ய வேண்டிய தலைகீழ் அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்த வகையில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் இதயங்கள் எரிமலையெனக் கொந்தளித்தாலும் முகங்களை மட்டும் ஆழ்கடல் அமைதியுடன் வைத்துக் கொண்டுஆளுநருக்குச் சவரி வீசும் கோலம் தான் விசித்திரம். மேலிடத்தின் பச்சைக் கொடியைப்ப பார்க்காமல் புரோகிதர் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பு இல்லை. இரட்டை இலை தாக்கம், சசிகலா குடும்பத்தினர் மீது ரைடு, சசிகலாவின் கணவர் நடராசனுக்குச் சிறைதண்டனை, இதர குடும்ப உறுப்பினர்களுக்கும் சிறை, டி.டி.வி.தினகரன் மீது அடுத்தடுத்து வழக்குத் தொடுப்புகள் எனத் தமிழக அரசியல் தகித்துக் கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆளுநரின் செயலோ… வெந்த புண்ணிலே வேல் போல… எரியும் தீயில் எண்ணெய் போல அமைந்துள்ளது. குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் தந்திரம்அரசியலில் அங்கம் கொள்ளப் போகிறதோ…?

பிரதமரும் மத்திய அமைச்சர்களும் ஓடி ஓடிச் சென்று போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்து மகிழ்ச்சிதேடிக் கொண்டனர். அதே இல்லத்தில் அதே மத்திய அமைச்சர்களின் தலைமையில் இயங்கும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை…

இது தான் வேதனை..

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button