இஸ்லாத்தின் பார்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பாகம்: 3

கிலாபாவும் மன்னர் ஆட்சியும்

கிலாபத் செய்ய வேண்டிய எந்தப் பணியையும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு செய்யவில்லை என்பது குறித்தும், பைஅத் செய்யாதவர்களை அவர்கள் அழித்து வருவது பற்றியும் கடந்த இதழில் குறிப்பிட்டு கூறியிருந்தோம். கடந்த கால கவாரிஜ்கள் போன்று ஆட்சியாளர்களை இறை நிராகரிப்பாளர்கள் (காபிர்கள்) வரம்பு மீறியவர்கள் (தாகூத்கள்)என எதிர்த்து வருவது குறித்தும் குறிப்பிட்டிருந்தோம்.. இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் எப்படி கிலாபத் ஆக இயலும்?

கிலாபத் பற்றிப் பேசும் பின்வரும் இந்த ஹதீஸை நிதானமாகப் பாருங்கள். அல்லாஹ் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்று நாடுகின்றானோ அது வரை உங்கள் மத்தியில் நுபுவ்வத் இருக்கும். பின்னர் எப்போது அதை உயர்த்த வேண்டும் என்று அல்லாஹ் நாடுகின்றானோ அப்போது அதை அவன் உயர்த்திவிடுவான். பின்னர் நுவுவ்வத்தின் அடியொட்டிய கிலாபத் இருக்கும். அது எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடுகின்றானோ அவ்வளவு காலம் அது இருக்கும். பின்னர் அதை உயர்த்த அல்லாஹ் நாடும் போது அதை உயர்த்திவிடுவான். பின்னர் கடுமையான மன்னராட்சி இருக்கும். அது எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகின்றானோ அவ்வளவு காலம் இருக்கும். பின்னர் அதை எப்போது உயர்த்த வேண்டும் என்று அல்லாஹ் நாடுகின்றானோ அப்போது அதை உயர்த்திவிடுவான்.

பின்னர் அடக்கு முறை கொண்ட மன்னராட்சி இருக்கும். அது எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடுகின்றானோ அவ்வளவு காலம் அது இருக்கும். பின்னர் அல்லாஹ் நாடும் போது அதை உயர்த்திவிடுவான். பின்னர் நபித்துவத்தின் அடியொட்டிய கிலாபத் இருக்கும்” என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். பின்னர் மவுனமானார்கள்.(அஹ்மத்) இந்த அறிவிப்பில் மிகத் தெளிவாகவே சர்வாதிகார மன்னராட்சி உயர்த்தப்படும். அதன் பின்னர் தான் கிலாபத் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அடக்குமுறை மன்னராட்சி இருக்கும் போது கிலாபத் வராது என்பதை தெளிவாகவே இந்த ஹதீஸ் கூறுகின்றது.

மன்னராட்சி இருக்கும் போது கிலாபத் வந்துவிட்டதாக யாராவது சொன்னால் அவர்கள் இந்த ஹதீஸின் அடிப்படையில் பொய்யே கூறுகின்றனர். எனவே, ஐஎஸ்ஐஎஸ் அறிவித்தது உண்மையான கிலாபத் அல்ல என்பது மிகத் தெளிவாகும்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னர் கிலாபா ஏற்பட்டு அதன் இறுதிக் காலத்திலேயே மன்னராட்சிக்கான அஸ்திவாரம் முஆவியா (ரழி) அவர்களால் இடப்பட்டுவிட்டது என வாதிடுவோர் மிகத் தெளிவாக ஹதீஸிற்கு முரணாகப் பேசுகின்றனர்.. கவாரிஜ்கள் ஹதீஸிற்குரிய முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள் என்பதை உண்மைப்படுத்தி வருகின்றனர். அலி(ரழி) அவர்கள் இருக்கும் வரை முஆவியா(ரழி) அவர்கள் தன்னைக் கலீபாவாக அறிவிக்கவில்லை. அத்துடன் முஆவியா (ரழி) அவர்கள் தனது இறுதிக் காலத்தில் தனது மகன் யசீதுக்கு பைஅத் வாங்கியதன் மூலம் தான் மன்னராட்சி உதயமானது.

கடுமையான மன்னராட்சியை அல்லாஹ் உயர்த்துவான். அதன் பின்னர் தான் கிலாபத் உருவாகும். இதுதான் ஹதீஸின் தீர்ப்பு! இதற்கு மாற்றமாக மன்னராட்சி இருக்கும் போதே கிலாபத் உருவாகி விட்டதாக அறிவித்தால் அது உண்மையான கிலாபத் இல்லை என்பது உறுதியாகும்.

ஐஎஸ்ஐஎஸ் மற்றும் கவாரிஜ்கள் இந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கிலாபா அல்ல. அவர்களிடம் கடந்த காலத்தில் வாழ்ந்த கவாரிஜ்களின் பண்புகள் பளிச்செனத் தெரிகின்றன. அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.

1. ஈராக்கில் இருந்து வருவார்கள் யுசைர் இப்னு அம்ர் (ரழி) அறிவித்தார்கள்: நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரழி) அவர்களிடம்,  காரிஜிய்யாக் கூட்டத்தார் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அன்னார் நபி(ஸல்) அவர்கள் ஈராக் நாட்டின் திசையில் தம் கையை நீட்டியவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்:இங்கிருந்து ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத்  துளைத்த) அம்பு (உடலின் மறுபுறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.”

(புஹாரி: 6934)

ஆரம்பகால கவாரிஜ்கள் ஈராக்கில் இருந்து வந்தது போல் நவீன கவாரிஜ்களின் தளமாகவும் ஈராக் அமைந்துள்ளது. பொய்யான கிலாபத்துக்காக ஏன் நாம் வக்காலத்து வாங்க வேண்டும்? பொய்யான கிலாபத்தை ஏற்காதவர்கள் எப்படி எதிர்க்கப்பட முடியும்?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button